எங்களது மருமகனின் பூர்வீகம் பரங்கிப் பேட்டை என்றும், இந்த ஊர் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் என்றும் சொல்கின்றனர். எங்களுக்குத் தெரிந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் பரங்கிப் பேட்டை என்று உள்ளது. வேலூருக்கு அருகில் பரங்கிப்பேட்டை எனும் கிராமம் உள்ளதா? எப்படிச் செல்வது? தெரிந்தவர்கள் சொன்னால், சொந்த ஊரில் உள்ள கிராம தெய்வத்துக்குப் படையலிட ஏதுவாக இருக்கும்.
- த.கு. குமார், சென்னை-63
யசோத நந்தன யதுகுலதிலகா, யாதவ வம்சா மாபாஹி என்ற பாடலும் மாமவரகுராமா மரகதமணி சியாமா எனும் பாடலும் சிறுவயதில் மனப்பாடமாகச் சொல்வேன். இந்தப் பாடல் தற்போது மறந்துவிட்டது. இந்தப் பாடல்கள் எந்த நூலில் உள்ளன? வாசக அன்பர்கள் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்களேன்.
- வி. சந்திரா, திருக்கோவிலூர்
சிறுவயதில், 'கற்பக விருட்சம்' என்றொரு பாடலை மனனம் செய்து பாடியிருக்கிறேன். தனை தனைதனை தந்தானம் எனத் துவங்கி, அரிவாள் பெட்டியாம் வாளுறையாம் முறுக்குத் தடியாம் செங்கோலாம்... என்று அந்தப் பாடல் இருக்கும். இந்தப் பாடல் தற்போது முழுமையாகத் தெரியவில்லை. இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்? அல்லது பாடலைத் தெரிந்த அன்பர்கள், பிரதி அனுப்பி உதவ வேண்டுகிறேன்.
- டி. செல்வபுஷ்பம், கோவை-1
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் காதுலு பலிஜா வகுப்பைச் சேர்ந்தவர்கள் (வளையல்கார நாயுடு என்றும் சொல்வர்). எங்களின் கோத்திரம் - ஜனகல கோத்திரம். எங்களின் குலதெய்வம் தெரியாததால், குலதெய்வ வழிபாடோ அல்லது முன்னோர்களுக்குச் செய்யும் வழிபாடோ செய்யமுடியவில்லை.
எங்களின் குலதெய்வம் எது? அந்த ஆலயம் எங்கே உள்ளது? தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவினால், குலதெய்வ வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும்.
- பி.டி. வீரய்யன், சென்னை-82
என்னுடைய தந்தையும் தாத்தாவும் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தவர்கள். எங்களின் குலதெய்வமாக பல வருடங்களாக, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதியை வணங்கி வருகிறோம்.
ஆனால் பலரும், எங்களின் குலதெய்வம் ஸ்ரீபாலமுருகன் என்கின்றனர். மயிலானது பாம்பை மிதித்துக்கொண்டிருப்பதுபோல் அல்லாமல், மயிலும் பாம்பும் தனித்தனியே, நட்புடன் இருக்குமாம்! இப்படியரு திருக்கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தரும் ஆலயம் எங்கேனும் உள்ளதா? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!
- து. ரவீந்திரன், சென்னை-40
|