ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!


வாசகர் பக்கம்..
உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!
ன்மிகம், ஆலயங்கள் தொடர்பாக- உங்களுக்குள் நெடு நாட்களாக இருந்து வரும் பயனுள்ள சந்தேகங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் சந்தேகங்கள், சக்தி விகடனில் பிரசுரமாகும். குறிப்பிட்ட வாசகர் விளக்கம் கேட்டு எழுதிய சந்தேகத்துக்கு, மற்ற வாசகர்கள் (துல்லியமாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே) விளக்கம் எழுதி அனுப்பலாம். அந்த விளக்கங்களும் 'சக்தி விகடன்' இதழிலேயே பிரசுரமாகும். சந்தேகமோ, விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!' என்று குறிப்பிட்டு, சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

உதவலாம் வாருங்கள்!

ங்களின் குலதெய்வம் தொட்டிச்சி அம்மன் என்கின்றனர். ஆனால், கடந்த இரண்டு மூன்று தலைமுறையாகவே குலதெய்வ வழிபாடு நின்றுவிட்டதால், தற்போதைய தலைமுறையான எங்களுக்குக் குலதெய்வம் குறித்து தெரியவில்லை; வழிபாடும் நடத்த இயலவில்லை. தொட்டிச்சி அம்மன் ஆலயம் எங்கு உள்ளது? எப்படிச் செல்வது? கோயில் தொலைபேசி எண் ஏதும் உள்ளதா? இதுகுறித்து விவரம் அறிந்த அன்பர்கள், தகவல் தந்து உதவினால், குலதெய்வத்தை வணங்குவதற்குப் பேருதவியாக இருக்கும்.

- கே.ஆர்.ஏ. கலைக்குமார், அறந்தாங்கி

'மிழலை நாடும் மிழலைக் கூற்றமும்' எனும் நூல் (பேராசிரியர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் எழுதியது), 'சேது நாடும் தமிழும்' எனும் நூல் (சேது சமஸ்தான வித்வான் ரா. ராகவ ஐயங்கார் எழுதியது) ஆகிய இரண்டு நூல்களும் எங்கு கிடைக்கும்? விவரம் அறிந்த வாசக நண்பர்கள் தகவல் தாருங்களேன்!

- மு. லட்சுமிநாராயணன், ஆவுடையார்கோவில்

ங்கள் முப்பாட்டனார், கேரள மாநிலத்தில் உள்ள பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அதையடுத்து, எங்கள் பாட்டியும் இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வந்ததாகச் சொல்லியுள்ளார். ஆனால் ஊரின் பெயரை மறந்துவிட்டார். இந்தக் கோயிலில் அம்மனை அப்படியே நேரில் தரிசிப்பது போல் இருக்குமாம்; தவிர, அம்மனின் திருமுடிகூடத் தெளிவுறக் காட்சி தரும் என்றும் சிலாகிக்கிறாள் பாட்டி. இந்தக் கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் என்ன? இந்த ஊருக்கு எப்படிச் செல்ல வேண்டும்?

- ஏ. முத்துசாமிபாண்டியன், சத்திரப்பட்டி

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த என் கணவருக்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 'பிரெய்ன் டியூமர்' ஆபரேஷன் நடந்தது. அதையடுத்து அவருக்கு நான்கைந்து முறை 'ஃபிட்ஸ்' வந்துவிட்டது. ஆங்கில மருத்துவம் செய்ய வசதி இல்லாததால், ஹோமியோபதி மருத்துவம் செய்து வருகிறோம். இதுபோன்ற நரம்பு தொடர்பான பிரச்னைகளைத் தீர்த்தருளும் ஸ்தலம் மற்றும் ஸ்லோகம் ஏதும் உள்ளதா? எப்படிச் செல்வது? அறிந்த அன்பர்கள் தகவல் தாருங்கள்; என் கணவரைக் காப்பாற்ற உதவுங்கள்!

- ஜி. அபர்ணா, சென்னை-87

ங்களின் குலதெய்வம் சப்தகன்னிமார் என்றும், வழுதாவூரில் கோயில் இருப்பதாகவும் என் பெற்றோர் தெரிவித்தனர். ஒருமுறை வழுதாவூருக்குச் சென்றபோது, (விழுப்புரம் மாவட்டம் திருக்கனூர் அருகில் உள்ளது) சாலையோரத்தில் புளியமரம் ஒன்றையும், அங்கே ஏழு செங்கற்களையும் சுட்டிக்காட்டி, 'இதுதான் கன்னிமார் ஆலயம்' என்றனர் ஊர்மக்கள். செங்கல்லாகக் காட்சி தருவதுதான் கன்னிமார் ஆலயமா? அல்லது, வேறு எங்கேனும் ஏழு கன்னிமாருக்கும் கோயில் உள்ளதா?

- கோ. ரமேஷ், கடலூர்-4

உதவலாம் வாருங்கள்!
உதவலாம் வாருங்கள்!

'திருமீயச்சூர் ஆலயத்தில் பிரண்டைச் சாதம் பிரசாதமாக வழங்குவது ஏன்? என்ன தாத்பர்யம்?' என, 4.9.09 இதழில், சென்னை வாசகி ஹேமா பகவன்தாஸ் கேட்டிருந்தார்.

எமதர்மராஜன், தனது ஆயுள் விருத்திக்காக, தாமரை இலையில் சங்கு புஷ்பத்தை வைத்து, எமலோகத்தின் ஸ்தல விருட்சமான பிரண்டையை அன்னத்தில் கலந்து, நைவேத்தியமாகப் படைத்து அருள்பெற்றானாம்! எனவே, இங்கே தலத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீமேகநாத ஸ்வாமிக்கு, உச்சிக்கால பூஜையில், பிரண்டை சாதம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. ஸ்ரீமேகநாதரை பிரண்டை சாதம் நைவேத்தியம் செய்து வழிபட, ஆயுள் விருத்தி அடையும்; நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது ஐதீகம் என செகந்திராபாத் வாசகர் வி.வெங்கட்ராமன், சென்னை வாசகர் டி.கே.தேவநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

'திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வசித்து வருகிறோம். எங்களின் குலதெய்வம் ஸ்ரீசுடலைமாட சுவாமி என்றும், பனை மரங்கள் சூழ்ந்த பகுதியில் ஆலயம் இருப்பதாகவும் சொல்கின்றனர். இந்த ஆலயம் எங்கு உள்ளது?' என திருச்சி வாசகி வனிதா முத்துக்குமார் 20.8.09 இதழில் கேட்டிருந்தார்.

தூத்துக்குடி - திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ளது ஆத்தூர். இந்த ஊருக்கு அருகில் ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில் உள்ளது (ஆறுமுகமங்கலத்தில் உள்ளது ஆலயம்). ஹைகோர்ட் மகாராஜா ஆலயம் என்றும் சொல்வர். வாசகி குறிப்பிட்டதுபோல், பனைமரங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ள ஆலயம் இது!

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் பலரின் குலதெய்வம், இஷ்டதெய்வம், ஸ்ரீசுடலைமாட சுவாமிதான். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்துக்குச் சென்றால், பூசாரி இருப்பார்; வழிபாடு செய்ய ஏதுவாக இருக்கும் என சென்னை வாசகர் லியோ தங்கம், மதுரை வாசகர் நாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

'என் முதல் குழந்தை, பிறந்த 15-ஆம் நாளில் இறந்துவிட்டது. அடுத்துப் பிறந்த குழந்தை, விஷக் காய்ச்சல் கண்டு, தனது 11-வது வயதில் இறந்து போனாள். மூன்றாவதாகப் பிறந்த குழந்தையும் இரண்டு வயதிலேயே இறந்துவிட... நிம்மதியே இல்லை. பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் வளர்ந்து, நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா? வாரிசு தங்குவதற்கு எந்த ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும்?' என திருமங்கலம் வாசகி ராஜேஸ்வரி, 13.5.10 இதழில் கேட்டிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது நயினார்கோவில். இங்கேயுள்ள ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீநாகநாதர் கோயிலுக்குச் சென்று மனதாரப் பிரார்த்தனை செய்தால், குழந்தை நீண்ட ஆயுளுடன் வளரும் என்பது நம்பிக்கை.

மதுரை ஒர்க்ஷாப் சாலையில் உள்ளது ஸ்ரீபேச்சியம்மன் கோயில். இந்த ஆலயத்தில் பாம்புப் புற்று ஒன்று உள்ளது. இங்கே... புற்றுக்குப் பால் வார்த்து, பேச்சியம்மனை மனமுருகி வேண்டுங்கள்; உங்களையும் உங்களின் வாரிசையும் கட்டிக் காப்பாள் அம்மன்!

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை ஆலயத்தையும் அம்பாளின் கருணையையும் அறியாதவர்கள் இருக்கிறார்களா, என்ன? இந்தக் கோயிலுக்குச் சென்று, அம்பாளை கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்யுங்கள். கருவில் உள்ள குழந்தையை மட்டுமின்றி, பிறந்த குழந்தையைக் கூடப் பேணிக்காக்கும் கருணைத் தெய்வம் இவள் என மதுரை வாசகி சுமதி தெரிவித்துள்ளார்.

திருச்சி - குணசீலம் சாலையில் உள்ளது திருவாசி. இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலாம்பிகையை, ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் செய்து, அந்தத் தீர்த்தத்தை குழந்தைக்கு கொடுங்கள். எந்த நோயும் அண்டாமல், உங்கள் குழந்தையை பாலாம்பிகா பார்த்துக்கொள்வாள்.

'நமஸ்தே லலிதே! தேவி மந்ஸிம் ஹாசநேஸ்வரி' எனத் துவங்கும் ஸ்ரீஅபிராமி ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால், வாரிசு தங்கும்; சீரும் சிறப்புமாகக் குழந்தைகள் வளர்வார்கள் என திருச்சி வாசகர் சி. ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.