மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 15

சிவமயம்! வி.ராம்ஜி

##~##

லையே சிவமெனத் திகழும் தலம் திருவண்ணாமலை. கிட்டத்தட்ட, திருக்கச்சூர் திருத்தலமும் அப்படியே! மலையே சிவமாகவும், அங்கே உள்ள மண்ணே மருந்தாகவும் அமைந்துள்ள ஒப்பற்ற தலம் இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில், மறைமலை நகரில் இருந்தும் சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கச்சூரில், இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. ஊருக்குள் பிரமாண்டமாக இருப்பது, ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம். ஊர் கடைசியில், மலையடிவாரத்தில் உள்ளது ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயில்.

இந்த இரண்டு தலங்களுக்கும் வந்து, சிவனாரை நினைத்து மெய்யுருகப் பாடியுள்ளார் சுந்தரர் பெருமான். தலத்தையும் ஆலயத்தையும் கண்டு சிலிர்த்து, 'மலைமேல் மருந்தே...’ என்று பெருமையுடன் அவர் பாடிய அற்புதமான பாடலை நினைத்தபடி, ஸ்ரீமருந்தீஸ்வரர் சந்நிதி முன் வந்து நின்றால், மேற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார் சிவனார்.

இதோ எந்தன் தெய்வம்! - 15

மேலை விதியே விதியின் பயனே
  விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
  கவலை களைவாய் கறைக்கண்டா
மாலைமதியே மலை மேல் மருந்தே
  மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக்கழனிப் பழனக் கச்சூர்
  ஆலக்கோயில் அம்மானே..!

- என்று இங்குதான் சுந்தரர் நின்று பாடியிருப்பாரா... இவரைப் பார்த்துத் தான் மனமுருகி வேண்டியிருப்பாரா என்று உள்ளுக்குள் சிந்தனை ஓடியது.

அம்பாளின் திருநாமம்- ஸ்ரீஇருள்நீக்கி அம்பாள். அவளும் மேற்குப் பார்த்தபடி காட்சி தருகிறாள். ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளைப் போலவே, இவளும் கண் நோய் தீர மாமருந்தாக இருந்து அருள்கிறாள்.

தேவர்களுக்கெல்லாம் தேவனான இந்திரன், தன் ஆணவத்தாலும் கர்வத்தாலும் பலரின் வாய்க்குள் விழுந்து, வசவுகளைச் சம்பாதித்துக் கொண்டான். இதனால் சூல நோய்க்கு ஆளாகும் சாபமும் பெற்றான். சூல நோயின் உஷ்ணத்தால், தீராத வயிற்று வலி வந்து அவதிப்பட்டான்.

காலுக்குக் கீழே உள்ள மண்ணின் மகிமையையும், தலைக்கு மேலே உயர்ந்திருக்கிற மலையின் பெருமையையும் கொண்ட திருக்கச்சூரை உலகுக்குக் காட்ட, இந்திரனையும் அவனுடைய வலியையும் கருவியாக்கிக்கொண்டார் சிவனார். அதற்கு அஸ்வினி தேவர்களும் பயன்பட்டனர்.

தேவர்களின் தலைவனான இந்திரனின் வேதனையைத் தீர்க்கும் பொருட்டு, ஒளஷத மலைக்குச் சென்று, ஒளஷத தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்யும்படி அஸ்வினிதேவர்களுக்கு அசரீரி சொல்ல... அதன்படியே ஒளஷத மலைக்கு வந்தவர்கள், மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினர். தீர்த்தம் எடுத்து சிரசில் தெளித்துக்கொண்டனர். கண்களில் ஒற்றிக்கொண்டனர். வாயில் விட்டுக்கொண்டு, 'அமிர்தம் அமிர்தம்...’ என்று மகிழ்ந்தனர். அப்படியே சிவபூஜையில் ஐக்கியமாயினர்.

இதோ எந்தன் தெய்வம்! - 15

ஒரு பிரதோஷ நாளில், மெள்ளச் சாரலடிக்கும் மழை வேளையில், பூஜையில் இருந்த அஸ்வினி தேவர்கள், சட்டென்று கண்விழித்தார்கள். அந்தப் பகுதி முழுவதும் மண் வாசனை நிரம்பியிருந்தது. 'மழை வந்தால் மண் வாசனை வரும்தான். ஆனால், இந்த நறுமணம் மூச்சுக்கு இதமாகவும், மனசுக்குத் தெம்பாகவும் இருக்கிறதே...’ என்று நினைத்தபடி, அந்த நறுமணத்தை ஆழ்ந்து உள்ளிழுத்தார்கள். 'அட... செடியில்தான் மூலிகைச் செடிகள் உண்டு. மருத்துவ குணம் உண்டு. மண்ணில் கூடவா மூலிகை இருக்கிறது!’ என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள். 'மண்ணே மருந்து... மண்ணே மருந்து...’ என அசரீரி கேட்டது. ஒளஷத மலையின் உச்சிக்குச் சென்றார்கள். அங்கே குவிந்து கிடந்த மண்ணைப் பார்த்தவர்கள், ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு, இந்திரனை நோக்கிப் பறந்தார்கள். விவரம் சொல்லி, மண்ணைக் கொடுத்தார்கள்.

அந்த மண்ணை, நீரில் கரைத்துக் கடகடவெனக் குடித்தான் இந்திரன். மீதியை நெற்றியில் இட்டுக்கொண்டான்.  கையில் இருந்த மிச்சத்தை, வயிற்றில் தடவிக்கொண்டான். அந்த நிமிடமே, சூல நோயிலிருந்து பூரண நிவாரணம் கிடைத்தது இந்திரனுக்கு. அதையடுத்து, தேவர்களிடத்திலும் முனிவர் களிடத்திலும் பூலோக மாந்தர் களிடத்திலும் 'மண்ணே மருந்து...’ எனும் விஷயம் பரவத் தொடங்கியது.

அன்று முதல், சூல நோய் மட்டுமின்றி, வேறு எந்த நோயால் சிரமப்படுபவர்களும், தீராத நோயால் அவதிப்படுபவர்களும், 'மண்ணே சிவம்... மலையே சிவம்... மண்ணே மருந்து... சிவமே மருந்து...’ என்று சொல்லியபடி, திருக்கச்சூருக்கு வந்தார்கள்; சிவ தரிசனம் செய்து, மண்ணையே மருந்தாக உட்கொண்டார்கள்; நிவாரணம் பெற்றார்கள் என்கிறது ஸ்தல புராணம்.

இதோ எந்தன் தெய்வம்! - 15

''மனுஷனாப் பொறந்தவனுக்கு, பசிக்கு சாப்பாடு அவசியம். நோய்வாய்ப்பட்டா, மருந்து அவசியம். இங்கே, இந்த திருக்கச்சூர்ல இருக்கிற சிவபெருமான், சுந்தரரின் பசியைப் போக்குவதற்காக, முதியவர் வேடத்தில் வந்து யாசகம் கேட்டு, அன்னம் வழங்கினார். அதேபோல 'மண்ணே மருந்து’ன்னு சொல்லி, இந்திரனின் நோயையும் தீர்த்து வைச்சு அருளினார். அப்பேர்ப்பட்ட புண்ணிய ஸ்தலம் என் மனசுல ஊடுருவி, மனசெல்லாம் சிவபெருமானா, ஸ்ரீகச்சபேஸ்வரரா, ஸ்ரீதியாகராஜரா, ஸ்ரீமருந்தீஸ்வரரா நிறைஞ்சிருக்கார்'' என்று உணர்ச்சி பொங்க, நா தழுதழுக்கச் சொல்கிறார் மனோகரன். அருகில், வாலாஜாபாத் அருகில் உள்ள அவலூரைச் சேர்ந்தவர் இவர்.

இதோ... ஊருக்கும் சுந்தரர் பெருமானுக்கும் படியளந்த சிவனாருக்கு, இந்த ஐப்பசி மாதத்தில் விமரிசையாக நடைபெறப் போகிறது அன்னாபிஷேக விழா! வருகிற 18.10.13 அன்று மாலை 6 மணிக்குத் துவங்கி, இரவு 8 மணி வரை திருக்கச்சூரில் உள்ள இரண்டு சிவாலயங்களிலும் அன்னாபிஷேக வைபவம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் கலந்து கொண்டு, ஊருக்கே விருந்து வைக்க வாருங்கள், அன்பர்களே! உங்களால் முடிந்த அரிசியையும் பருப்பையும் வழங்கி, அன்று நடைபெறும் அன்னதானத்தில் நீங்களும் கலந்துகொள்ளுங்கள்.

''அன்னாபிஷேகத்தைக் கொண்டு தயிர்சாதம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதமா தருவோம். அதைச் சாப்பிட்டா, குழந்தை இல்லாதவங்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். நோய் நொடி மொத்தமும் நீங்கி, ஆரோக்கியமா வாழ்வாங்க. சகல ஐஸ்வரிய கடாட்சமும் அவங்களுக்கு ஸித்திக்கும்'' என்கிறார் முரளி குருக்கள்.

அன்னாபிஷேகப்பிரியனின் பிரியத்துக்கு ஆளாக, அன்னாபிஷேக நாளில் வாருங்கள், அன்பர்களே!

- வேண்டுவோம்

படங்கள்: ரா.மூகாம்பிகை