மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 16

சிவமயம்!வி.ராம்ஜி

##~##

'வாழ்க்கையில் ஒரேயரு நல்ல விஷயம் நடந்துட்டா, அதுக்குப் பிறகு எல்லாமே நல்லதாத்தான் நடக்கும்; அதேபோல, சின்னதா ஒரு கெட்டது நடந்துட்டா, அதைத் தொடர்ந்து வரிசையா கெட்டதுதான் நடக்கும்னு சொல்லுவாங்க. ஆனா என் விஷயத்துல, திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரரும் ஸ்ரீமருந்தீஸ்வரரும் செய்த விஷயங்கள் மிகப் பெரிய வரம் எனக்கு! நான் புதுசாப் பிறந்து, மறு ஜென்மம் எடுத்து வந்தேன்னுதான் சொல்லணும்!'' என்று சொல்லும்போதே குலுங்கிக் குலுங்கி அழுகிறார், அவலூரைச் சேர்ந்த மனோகரன்.

வாலாஜாபாத் அருகில் உள்ள அவலூரில் வீடும், சென்னை மறைமலைநகரில் தொழில் என்றும் ஓடிக்கொண்டிருக்கிற மனோகரன், நடுவில் வழியில் உள்ள திருக்கச்சூர் ஸ்ரீகச்சபேஸ்வரரையும் ஸ்ரீமருந்தீஸ்வரரையும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தரிசித்துவிடுவாராம்.

''நடுவுல சிலநாள், திருக்கச்சூர் கோயிலுக்குப் போறது கொஞ்சம் குறைஞ்சுது. வேலை அது இதுன்னு காரணமா இருந்தாலும், 'என்னடா இது... ரொம்ப நாளா தள்ளிப்போயிக்கிட்டே இருக்குதே’னு கவலையோட இருந்தப்பதான், அந்தத் துக்ககரமான சம்பவம் நடந்தது. ஸ்கூலுக்குப் போயிட்டு சைக்கிள்ல வரும்போது, ஒரு ஆக்ஸிடென்ட்ல சிக்கி, என் செல்ல மகள் இறந்துட்டாள். சேதி கேட்டு, துடிதுடிச்சுப் போயிட்டேன். உலகமே பொண்ணுதான்னு நினைச்சு வாழ்ந்துட்டிருந்த எனக்கு, அவ போன பிறகு இந்த உலகமே சூன்யமா, வெறுமையாத்தான் தெரிஞ்சுது. வீடு களை இழந்து, வேலைலயும் பெருசா நாட்டமில்லாம, நடைப்பிணமா சுத்திட்டிருந்தேன்.

இதோ எந்தன் தெய்வம்! - 16

அந்த நேரத்துலதான், திருக்கச்சூர் கோயிலுக்குப் போகணும்னு தோணிச்சு. முதல்ல, ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குப் போயிட்டு, அப்படியே மலைக்கோயிலுக்குப் போனேன். ஸ்ரீமருந்தீஸ்வரரைத் தரிசனம் பண்ணினேன். அப்படியே ஒரு ஓரமா உட்கார்ந்து, வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இருந்தேன்.

இதோ எந்தன் தெய்வம்! - 16

அந்தக் கோயில்ல மண்ணே மருந்து! அதாவது, அந்த மண்ணுல ஒரு சிட்டிகை எடுத்து, தண்ணியில கலந்து குடிச்சிட்டாப் போதும்; தீராத நோயும் தீரும். 'அப்பா சிவனே... என் உடம்புல எந்த நோயும் இல்லை. மனசுலதான் பிரச்னையே! மனசுல இருக்கிற பிரச்னையைத் தீர்த்து வை’ன்னு வேண்டிக் கிட்டேன். கிளம்பி வீட்டுக்கும் வந்துட்டேன்.

அதுக்கு அடுத்த நாள்லேருந்து, எங்க ஊர்ல இருக்கிற சிவன் கோயில் வேலைகள்ல தீவிரமா ஈடுபட ஆரம்பிச்சேன். 'என்னப்பா திடீர்னு இந்தப் பக்கம் வந்திருக்கே...’ன்னு நிறையப் பேர் கேட்டாங்க. அவங்களுக்கெல்லாம் ஒரு புன்னகையைத்தான் பதிலா கொடுக்க முடிஞ்சுது. எல்லாம் சிவ கட்டளை; அவன் போட்ட உத்தரவுன்னுதான் மனசு சொல்லுது!'' என்று கண்ணீர் மல்கச் சொல்கிறார் மனோகரன்.

இதோ எந்தன் தெய்வம்! - 16

''எனக்கு எல்லாமே சிவபெருமான்தான். சின்ன வயசுலேருந்தே, சிவ வழிபாட்டு மேல ஈடுபாடு உண்டு. இங்கே, இந்தத் திருக்கச்சூர் பூமியில வேலைக்கு வந்ததும், அப்படியே ஊரைச் சுத்தி வந்தேன். ஊருக்கு நடுவுல மண்டபம், தேர்முட்டி, மொட்டைக் கோபுரம்னு பிரமாதமா இருக்கிற இந்தக் கோயில் அமைப்பே என்னை ஈர்த்துச்சு. உள்ளே போய் ஸ்ரீகச்சபேஸ்வரரையும், அஞ்சனாட்சி அம்பாளையும், ஸ்ரீதியாகராஜரையும் தரிசனம் பண்ணிட்டு வாசலுக்கு வந்தா, 'மலைக்கோயிலுக்குப் போறீங்களா, நானும் வரட்டுமா?’னு ஒருத்தர் கேட்டார். 'அட... இன்னொரு கோயிலும் இங்கே இருக்குபோல...’ன்னு சந்தோஷமாயிட்டேன். இங்கிருந்து அரை கி.மீ. தூரத்துல சின்னதா, அழகா இருந்த கோயிலும், அதன் அமைதியும் மனசை என்னவோ பண்ணுச்சு. ஸ்வாமி பேரு மருந்தீஸ்வரர். அம்பாள் பேரு ஸ்ரீஇருள்நீக்கி அம்பாள். மண்ணே மருந்துன்னு பிரசாதம் வைச்சதையெல்லாம் பார்த்து, நெக்குருகி நின்னேன். ஏற்கெனவே தியானம் பழகியிருந்ததால, அங்கே உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானம் பண்ணினேன். மிச்சம் மீதியிருந்த சின்னச் சின்ன பாரம்கூட காணாம போயிடுச்சு!'' என்கிறார் குமார். விழுப்புரம் மாவட்டம்- திண்டிவனம், அன்னம்புத்தூரைச் சேர்ந்தவர் இவர்.

''மருந்தீஸ்வரர் கோயில் ரொம்பவே சாந்நித்தியமான இடம். இந்த மலையை ஒளஷத மலைன்னும், இங்கே உள்ள தீர்த்தத்தை ஒளஷத தீர்த்தம்னும் சொல்றாங்க. இதுவரை நான் எந்தக் கோயில்லயும் பார்க்காத ஒரு அற்புதம் இந்தக் கோயில்ல இருக்கு. அதாவது... எல்லா சிவன் கோயில்லயும் பிராகாரத்துல ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குச் சந்நிதி இருக்கும். இங்கேயும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் இருக்கார். ஆனா, நான்கு சிரசோட, அதாவது ஸ்ரீபிரம்மசிர சண்டிகேஸ்வரரா அருள்பாலிக்கிறார்.

இதோ எந்தன் தெய்வம்! - 16

இவரை கண்ணார தரிசனம் பண்ணினாலே, நம்ம பாவமெல்லாம் பறந்தோடிடும். இவருக்குத் தேனபிஷேகம் பண்ணி வேண்டிக்கிட்டா, தீராத நோயும் தீரும்கறது நம்பிக்கை. அது மட்டுமா... ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குப் பண்ணின தேனபிஷேகப் பிரசாதத்தை, பேச்சு வராம இருக்கிற குழந்தைகளுக்கும், திக்கித் திக்கிப் பேசுற குழந்தைகளுக்கும் கொடுத்தா, சீக்கிரமே பேச்சு சரியா வந்துடும்; பேச்சுக் குறைபாடு மொத்தமும் நிவர்த்தியாயிடும்னு சொல்றாங்க.

இந்த ஜென்மம் முடியற வரைக்கும், காசு பணத்தோட இருக்கோமோ இல்லியோ, தேக ஆரோக்கியத்தோடயும் மன ஆரோக்கியத் தோடயும் இருக்கணும்னு நினைக்கிறவன் நான். தேகமும் மனசும் ஆரோக்கியமா, திடமா இருந்துட்டா, நல்ல சிந்தனைகளைத் தவிர, வேற எதுவும் நமக்கு வராது. வாழ்க்கைல ஒரேயரு தடவையாவது திருக்கச்சூர் புண்ணிய பூமிக்கு வந்து, ஸ்ரீகச்சபேஸ்வரரையும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமியையும், இதோ இங்கே இன்னொரு கோயில்ல குடிகொண்டிருக்கிற ஸ்ரீமருந்தீஸ்வரரையும் வில்வம் சார்த்தி தரிசனம் பண்ணினா போதும், நம்ம வாழ்க்கையே நிறைவாயிடும்னு உள்ளுணர்வு சொல்லுது'' என்று நெக்குருகிச் சொல்கிறார் குமார்.

பசியுடன் இருப்பது மகா பாபம்! நோயுடன் போராடுவது மிகப்பெரிய கொடுமை. சுந்தரரின் பசியைப் போக்கி அவருக்குத் தெம்பைக் கொடுத்த சிவனார் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இது. இங்கே ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்கும் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோயிலுக்கும் இடையே ஒரு தெருவில், ஒரு சின்ன பிள்ளையார் கோயில் போல, ஒரேயொரு சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார் இன்னுமொரு சிவனார். இவருக்கு ஸ்ரீஇரந்திட்ட ஈஸ்வரர் என்பது திருநாமம். அதாவது, யாசகம் கேட்டு உணவிட்டவர் என்பதால் இந்தப் பெயர். ஸ்ரீகச்சபேஸ்வரர் கோயிலுக்குள் விருந்திட்ட ஈஸ்வரர்; இங்கே, இரந்திட்ட ஈஸ்வரர். ஆக, பசியின்றி நம்மை வாழ வைக்கும் திருத்தலம் இது.

அத்துடன், மண்ணையே மருந்தாகத் தரும் ஈசனும், குரலையும் பேச்சையும் தரும் ஸ்ரீபிரம்மசிர சண்டிகேஸ்வரரும், கண் நோய் தீர்க்கும் இருள்நீக்கி அம்பாளும் கோலோச்சும் அற்புதமான திருத்தலம். ஸ்ரீஅஞ்சனாட்சியைப் போலவே இந்த அம்பிகைக்கும் கண்மலர் சார்த்தி வழிபடுகிறார்கள், பக்தர்கள்.

திருக்கச்சூர் என்னும் புண்ணியத் தலத்துக்கு ஒருமுறை வந்து பாருங்கள். ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள். தேகம் திடமாகும்; மனசு லேசாகும்!

- வேண்டுவோம்

படங்கள்: ரா.மூகாம்பிகை