தொடர்கள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 17

சென்னைக்கு அருகே... திருக்கச்சூரில் கிரிவலம்!வி.ராம்ஜி

லையே சிவமெனத் திகழும் மலையை வலம் வருவது மகா புண்ணியம் என்பார்கள். அப்படி அண்ணாமலையார், மலையெனக் காட்சி தரும் திருவண்ணாமலையில், பௌர்ணமிதோறும் கிரிவலம் வந்து ஈசனை வணங்குகின்றனர், லட்சக்கணக்கான பக்தர்கள்.

மலை வழிபாடு என்பதும், மலையைச் சுற்றி வலம் வந்து வணங்கி வழிபடுவதும் பல தலங்களில் நடந்து வருகின்றன. சென்னை, மறைமலைநகருக்கு அருகில் உள்ள திருக்கச்சூர் எனும் புண்ணிய பூமி, மலையே சிவமாகவும் மாமருந்தாகவும் திகழும் அற்புதத் தலம். அங்கேயும் பௌர்ணமிதோறும் பக்தர்கள் கிரிவலம் வந்து, ஸ்ரீமருந்தீஸ்வரரையும் ஸ்ரீஇருள்நீக்கி அம்பாளையும் வணங்கிச் செல்கின்றனர். ஸ்ரீகச்சபேஸ்வரரையும், ஸ்ரீதியாகராஜ ஸ்வாமியையும், ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளையும் கண் குளிரத் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

''திருக்கச்சூரோட அழகுன்னா... இதோ, இந்த மலையும் ஊருக்குள்ளே இருக்கிற சிவன் கோயிலும்தான். மலையை ஒளஷத மலைன்னு சொல்லுவாங்க. அதாவது, மருந்தே மலை! நம்மைப் போல மனித உயிர்களுக்கெல்லாம் மாமருந்துன்னா, அது சிவபெருமான்தான்!'' என்கிறார், பேரமனூரில் வசித்து வரும் குமார்.

இதோ... எந்தன் தெய்வம்! - 17

மலை பிரமாண்டமில்லைதான். ஆனால், இந்த மகோன்னதமான மலையைப் பார்த்துப் பிரமிக்காதவர்களே இல்லை. மலை நெடுக செடிகொடிகளும் மரங்களுமாக அடர்ந்திருக்க... கோயிலில் இருந்து மலையையட்டிச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் பயணித்தால், உங்களின் மனம், புத்தி, சுவாசம் எல்லாமே சட்டென்று மலர்ச்சியாவதை உணர்வீர்கள்.

''பௌர்ணமி கிரிவலத்துக்குத் தவறாம திருவண்ணாமலை போறது என் வழக்கம். ஒருமுறை போகமுடியாத சூழல். சரி, பக்கத்துல இருக்கிற தியாகராஜர் கோயிலுக்குப் போயிட்டு வருவோமேனு இங்கே வந்தேன். கச்சபேஸ்வரர் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு நிறையப் பேர் அவசரம் அவசரமா மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் போனாங்க. அங்கே ஏதோ விசேஷம் போல, அவரையும் போய் தரிசனம் பண்ணுவோம்னு நினைச்சு, நானும் அந்தக் கோயிலுக்குப் போனேன். சிவன் சந்நிதியில கும்பிட்டு முடிச்சதும், அங்கே எல்லாரும் கிரிவலம் போக ஆரம்பிச்சிட்டாங்க. அட... அண்ணாமலை கிரிவலத்தை மிஸ் பண்ணிட்டோமேனு நினைச் சிட்டிருந்த எனக்கு, சிவனாரே இப்படியரு அற்புதத்தைக் காட்டிட்டார்னு சிலிர்த்துப் போயிட் டேன். அன்னிலேருந்து சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், திருக்கச்சூர் கோயில்ல அம்மையப்பனை தரிசனம் பண்ணிட்டு, கிரிவலம் போறதை வழக்கமாவே வைச்சிருக்கேன்'' என்று பரவசம் பொங்கச் சொல்கிறார் பேரமனூர் குமார்.

இதோ... எந்தன் தெய்வம்! - 17

சென்னையில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர், திருக்கச்சூர் என்றதுமே பரவசமாகிவிடுகிறார். ''ரொம்ப சக்தி வாய்ந்த கோயிலுங்க இது! இங்கே இருக்கிற ரெண்டு சிவன் கோயிலுக்கும் ஒருதடவை வந்துட்டாப் போதும்... குழப்பங்கள், கவலைகள் எல்லாம் நீங்கி மனசு தெளிவாயிடும்.

வாழ்க்கைல எல்லாருக்கும் கஷ்டமும் காயமும் இருக்கத்தான் செய்யுது. அந்தக் கஷ்டத்துக்கான, காயத்துக்கான மருந்தா இங்கே சிவபெருமான் இருக்கார்னுதான் சொல்லணும்.

இதோ... எந்தன் தெய்வம்! - 17

இப்படித்தான் என் நண்பரோட உறவினர் ஒருவருக்கு கேன்சர். 'ரொம்ப முத்திருச்சுங்க. ஆபரேஷன் பண்ணினாலும் வேஸ்ட்! இனிமே கடவுள் விட்ட வழி!’ன்னு சொல்லிட்டார் டாக்டர்.

நண்பர் துடிச்சுப் போயிட்டார். அவருக்குத் தைரியம் சொல்லிக் கூட்டிக்கிட்டு, திருக்கச்சூர் கோயிலுக்கு வந்தேன். ரெண்டு கோயில்லயும் சாமி கும்பிட்டது கால் மணி நேரம்தான்னாலும், அங்கே உட்கார்ந்து அப்படியே மலையையும், கோயிலையும், சந்நிதியையும் மெய்ம்மறந்து பார்த்துக்கிட்டே இருந்தது ரெண்டு மணி நேரம்!

கிளம்பும்போது, மண் பிரசாதத்தை எடுத்துக் கிட்டோம். ஊருக்குப் போனதும், அந்தக் கேன்சர் நோயாளிக்கு, 'இந்த சிவப் பிரசாதத்தை தினமும் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டு, சாமியை நல்லா வேண்டிக்கங்க’ன்னு சொல்லிக் கொடுத்தாராம் நண்பர்.

அதுக்குப் பிறகு ரெண்டு மாசம் கழிச்சு, ஆச்சரியமும் சந்தோஷமுமா வந்து எதிர்ல நின்னார் நண்பர். 'அவருக்கு ஆபரேஷன் பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட்டார். கூடிய சீக்கிரமே ஆபரேஷன் நடக்கப் போகுது. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு டாக்டர் தைரியம் கொடுத்திருக்கார். இதுக்கெல்லாம் காரணம், இந்தச் சிவாலயமும், இங்கே உள்ள மண் பிரசாதமும்தான்’னு சொல்லிக் கரகரன்னு அழுதுட்டார் நண்பர். அப்படிப்பட்ட மகத்துவமான தலம் இது!'' என்று பெருமிதத்துடன் சொன்னார் ஆறுமுகம்.

இதோ... எந்தன் தெய்வம்! - 17
இதோ... எந்தன் தெய்வம்! - 17

''திண்டிவனம் பக்கத்துல உள்ள கிராமம்தான் என் சொந்த ஊர். இங்கே திருக்கச்சூர்ல இப்ப வேலை. அந்த வேலையும் முடியப் போகுது. அதை நினைக்கும்போதே, 'அடடா... இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா போகும்போது, வரும்போதெல்லாம் கோயிலைப் பார்ப்போமே..! இப்ப ஊருக்குப் போகப் போறோமே’னு மனசுக்குள்ள கவலை இருந்தாலும், சிவனாரையும் அம்பாளையும் தரிசிக்கறதுக்காகவே இனிமே அடிக்கடி திருக்கச்சூர் வரணும்னு முடிவு பண்ணிட்டேன்.'' என்கிறார் திண்டிவனம் குமார்.

திருக்கச்சூரில் அன்னாபிஷேகமும், திருக்கார்த்திகையும் கோலாகலமாக நடைபெறும் விழாக்கள்! வருடந்தோறும் அன்னாபிஷேகத்துக்கு வரும் அரிசியும், கார்த்திகை தீபத்துக்கு அன்பர்கள் தருகிற எண்ணெய்யும் அதிகரித்தபடியே இருக்கின்றன.

''கேட்டது கிடைக்கும், நினைச்சது பலிக்கும்னு ஒரு வார்த்தை உண்டு. இந்தத் திருக்கச்சூர் இறைவனும் இறைவியும் நாம கேட்டது மொத்தத்தையும் கொடுக்கறவங்க. இங்கே வந்து வேண்டிக்கிட்டு வியாபாரத்தைத் துவக்கின பல பேர் ரொம்பச் சிறப்பாவும் செழிப்பாவும் முன்னுக்கு வந்திருக்காங்க. நல்ல நாள் பெரிய நாள்னா, குடும்பத்தோட இங்கே வந்து, லாபத்து லேருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைத் தந்து, ஸ்வாமிக்கு அன்னதானமாகவோ, அபிஷேக ஆராதனையாகவோ, பொங்கல் படைய லாகவோ செய்யறதை வழக்கமா வைச்சிருக்காங்க. அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம்னு ஸ்வாமி திருவீதியுலா வர்ற அழகே தனி! இந்த வாகனங்களைத் தயார் பண்றதுக்கும் வர்ணங்கள் தீட்டி அழகு படுத்துறதுக்கும் அன்பர்கள் பலர் உதவி செஞ்சிருக்காங்க. இப்படி அவங்க கேட்டது கிடைச்ச உடனே, நினைச்சது பலிச்ச உடனே, அவங்களால முடிஞ்சதைக் கோயிலுக்குச் செஞ்சுடறாங்க!'' என்கிறார் முரளி குருக்கள்.

மண்ணே மருந்தெனத் திகழும் தலத்தை மனத்தில் நினைத்துக் கொள்ளுங்கள். திருக்கச்சூர்... திருக்கச்சூர்... திருக்கச்சூர்... என்று கண்கள் மூடி, மனசுக்குள் சொல்லுங்கள். பௌர்ணமி கிரிவல நன்னாளில், உங்களை உங்கள் எண்ணமே இங்கு கொண்டு வந்து நிறுத்திவிடும். பிறகு, நீங்கள் கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்!

- வேண்டுவோம்

படங்கள்: ரா.மூகாம்பிகை