மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 18

தேர்ப்பணிக்கு உதவுவோம்... வி.ராம்ஜி

##~##

'நம்முடைய காலத்துக்குப் பிறகும், மக்கள் அனைவரும் வந்து வழிபடவேண்டும்; மனத்தில் அமைதியுடனும் முகத்தில் மகிழ்ச்சியுடனும் எப்போதும் வலம் வரவேண்டும்; அப்படி அமைதியோடும் மகிழ்ச்சியோடும் இருந்து குழந்தைகளை வளர்த்தால்தான், அவர்கள் நல்ல தலைமுறையினராக, அருமையான சந்ததியாக, சிறப்பாக வளர்வார்கள்’ என்கிற உயரிய நோக்கில், மன்னர் பெருமக்கள் அற்புதமான கோயில்களை எழுப்பி, அவற்றைச் சுற்றிலும் கிராமங்களை உருவாக்கினார்கள்; அங்கே மக்களைக் குடியமர்த்தினார்கள்; அந்தணர்களை வரச் செய்து, வீடுகள் கட்டிக் கொடுத்து, சதா சர்வ காலமும் வேதங்கள் முழங்கும்படி செய்தார்கள்.

கோயிலில் விளக்கெரியவும், கோயிலைக் காவல் காக்கவும், முழுவதுமாகச் சுத்தம் செய்து பராமரிக்கவும் ஆட்களை நியமித்தார்கள். நிலங்கள் ஒதுக்கித் தந்தார்கள். சின்னச் சின்ன விழாக்களின்போது வலம் வருவதற்கு ஸ்வாமிக்காக வாகனங்கள் தயார் செய்து வழங்கினார்கள். முக்கியமான நாட்களில் ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதற்கு, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட, சிற்ப நுட்பங்களுடன் கூடிய பிரமாண்ட தேரைத் தயாரித்து வழங்கினார்கள். விசேஷ நாட்களில், மிகப் பெரிய தேரில் ஸ்வாமியும் அம்பாளும் வீதியுலா வருவதைத் தரிசிக்க, அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் ஆர்வமும் பக்தியுமாக வந்து கலந்து கொண்டார்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 18

''தியாகராஜ ஸ்வாமி எனும் திருநாமத்துடன் கொலுவிருக்கும் திருக்கச்சூர் திருத்தலத்திலும் தேர் உண்டு. வருடந்தோறும் சித்திரையில் பிரம்மோத்ஸவம் சிறப்பாக நடைபெறும். அப்போது, நான்கு வீதிகளிலும் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். திருக்கச்சூர் தேர்த் திருவிழாவைத் தரிசிக்க, தொண்டை தேசத்தின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் திரண்டு வருவார்கள்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் முரளி குருக்கள்.

சுந்தரரின் பசியைப் போக்குவதற்காக, வயோதிகராக வந்து சிவபெருமானே யாசகம் கேட்ட ஸ்தலம் அல்லவா..! எனவே, பிரதோஷம், பௌர்ணமி என முக்கிய நாட்களில் இங்கே அன்னதானம் சிறப்புற நடைபெறுகிறது. அதேபோல், திருத்தேரோட்ட வைபவத்தின்போதும், எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து அன்னதானம் செய்வார்களாம். ஆனால், கடந்த சில வருடங்களாகத் தேரோட்டம் நடைபெறவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள், திருக்கச்சூர் மக்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 18

''கோயிலுக்கு முன்னே உள்ள தேர்முட்டி மண்டபம் கொள்ளை அழகு! பல வருடங்களாகவே, செப்பனிடுவதற்காகவும் பொலிவுறுவதற்காகவும் காத்துக்கொண்டிருக் கிறது தேர். அதற்கான திருப்பணிகள் விரைவில் துவங்கினால், தேரும் பொலிவாகும்; ஊரும் புத்தொளி பெற்று ஜொலிக்கும்'' என்கிறார் முரளி குருக்கள்.

''ஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும்! இழுப்பது இருக்கட்டும்... முதலில் தேர் பொலிவு பெற வேண்டும்; தேர் முழுமையாகச் செப்பனிடப்பட்டு, பழையபடி கம்பீரமாக உயர்ந்து நிற்கவும், தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெறவும் நாம்தான் திருப்பணிக்குக் கை கொடுக்கவேண்டும். நம்மால் முடிந்ததை தேர்ப் பணிக்குச் செய்தால், அந்தத் தியாகேசர் தேரில் திருவீதியுலா வந்து நமக்கெல்லாம் கண்ணாரத் தரிசனம் தருவார். நம்மையும் நம் சந்ததியையும் தழைக்கச் செய்வார். தேர்ப் பணிக்கு உதவுவோம், வாருங்கள்!'' என உற்சாகத்துடன் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

உண்மைதான். சுந்தரருக்காக யாசகம் கேட்டு வீதிவீதியாக நடந்த திருக்கச்சூர் பூமியில், ஸ்வாமி ஒய்யாரமாக நின்றபடி தேரில் பவனி வரட்டும். அந்தத் தேரின் திருப்பணிக்கு நம்மால் முடிந்ததைத் தந்து, 'இந்த இப்பிறவியே போதும் என் சிவனே! பிறவிப் பிணி தீர்ப்பாய் ஈசனே!’ என்று வேண்டிக் கொள்வோம்.

இதோ... எந்தன் தெய்வம்! - 18

மண்ணே மருந்தெனத் திகழும் தலத்தில், பழையபடி சித்திரை பிரம்மோத்ஸவம் கோலாகலமாக நடந்தேறட்டும். அந்த விழாவின் முத்தாய்ப்பாக, தேரோட்ட வைபவமும் விமரிசையாக நடந்தேறட்டும்.

''தேர்த் திருப்பணிக்குப் பல லட்ச ரூபாய் செலவாகும். அந்த அழகான தேரும், அந்தத் தேரில் ஸ்வாமியும் அம்பாளும் வீதியுலா வரும் அழகைக் கண்டாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும். தேரோட்டம் நடைபெற்று, பிரம்மோத்ஸவம் முடிந்த பிறகு, கோடை மழையும் ஐப்பசி மழையும் தப்பாமல் பெய்து, காடு - கரைகளை நிறைத்து, வளப்படுத்தும். மலையும், பச்சை வயல்களுமாக, திருக்கச்சூர் முழுக்க நெல்மணிகளின் வாசம் வீசியபடி இருக்கும். இதையெல்லாம் எங்கள் தாத்தாவும் அப்பாவும் பலமுறை சொல்லி வியந்திருக்கிறார்கள்'' என்கிறார் முரளி குருக்கள்.

ஊர் கூடித் தேரிழுப்பதற்கு முன்பாக, ஊர் கூடித் தேர்த் திருப்பணிக்குக் கை கொடுப்போம். தென்னாடுடைய சிவனாரின் அருளால் எல்லா வளமும் பெற்று இனிதே நாம் வாழலாம் என்பது உறுதி!

'அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்
ஆரூரன் பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்கோன்
செஞ்சொல் நாவல் வன்தொண்டன்
பன்னும் தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேல் பயில்வாரே!’

- சுந்தரர்

- வேண்டுவோம்

படங்கள்: ரா.மூகாம்பிகை