##~## |
சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில்தான் வேதாத்திரி மகரிஷி அவதரித்தார். இந்த பூமியில் இருந்துதான், சக்தி விகடன் தன் வாசகர்களுக்காக, மகரிஷி வழங்கிய மனவளக் கலை யோகா பயிற்சியை இலவச பயிற்சி முகாம்கள் மூலம் அளிக்கத் தொடங்கியது.
அதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான ஊர்களில் இலவச பயிற்சி முகாம்கள் நடத்தியதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். மகரிஷி சமாதி அடைந்துள்ள ஆழியாறில் முகாம் நடத்தி நிறைவு செய்வது என அப்போதே முடிவு செய்திருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன்படி, சக்தி விகடன் மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் இணைந்து நடத்தும் மனவளக் கலை இலவச யோகா பயிற்சி முகாம், 13.10.13 அன்று சென்னை திருவான்மியூர் அறிவுத் திருக்கோயிலிலும், நிறைவாக 27.10.13 அன்று பொள்ளாச்சி அருகில் உள்ள ஆழியாறு அறிவுத் திருக்கோயிலிலும் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த லலிதா, திருவான்மியூர் முகாமில் கலந்துகொண்டு நெகிழ்ச்சி யுடன் பேசினார். 'மனவளக் கலைப் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. அது சக்தி விகடன் மூலமாக இப்போது நிறைவேறிவிட்டது'' என்றார். இதேபோல் வாசகர்கள் பலரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆழியாறு அறிவுத் திருக் கோயிலில் வேதாத்திரி மகரிஷியின் திருச்சமாதி அமைக் கப்பட்டு, தியான மையமும் செயல்பட்டு வருகிறது.

இங்கு நடைபெற்ற முகாமில் திடீர் விருந்தினராக நடிகர் பாண்டு கலந்து கொண் டார். 'சக்தி விகடனின் முயற்சி பாராட்டுக்கு உரியது. மக்களுக்கு விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த முயற்சி தொடரட்டும்’ என வாழ்த்தினார்.
''எனக்கு ரொம்ப வருஷமாவே கை வலி இருந்துச்சு. இங்கே வந்து, இந்தப் பயிற்சியை செஞ்சு முடிச்ச பின்பு, வலியே காணாம போயிட்ட மாதிரி இருக்கு'' என சேலம் வாசகி மருதாம்பாள், வியப்புடன் தெரிவித்தார். ''நான் இளம் வயதில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன். கெட்ட பழக்கவழக்கங்களில் உழன்றிருக்கிறேன். அதில் இருந்து என்னை மீளச் செய்தது, மனவளக் கலைப் பயிற்சி தான்! இப்போது என் 14 வயது மகளுக்கு இந்தப் பயிற்சியைத் தர விரும்பினேன். அதற்கு இந்த முகாம் உதவியுள்ளது'' என்றார் வாசகர் இளங்கோவன்.

''தசைப் பிடிப்பு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் என்னிடம், மனவளக் கலைப் பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தாத நண்பர்களே இல்லை. விடுமுறையில் வந்த எனக்கு, ஆழியாறில் பயிற்சி முகாம் எனும் அறிவிப்பே, பாதி வியாதியைப் போக்கி விட்ட உணர்வைத் தந்துவிட்டது'' என்று சிலிர்ப்புடன் சொன்னார், அபுதாபியில் இருந்து வந்திருந்த வாசகர் சந்திரன். இவர் தன் குடும்பத்தாருடன் வந்து கலந்துகொண்டார்.
முகாமில் நிறைவாக, ஆழியாறு அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் சின்னசாமி, வாசகர் களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். சக்திவிகடன், உலக சமுதாய சேவா சங்கத்துடன் இணைந்து நடத்தி வந்த இலவசப் பயிற்சி முகாம் தற்போது நிறைவடைந்துள்ளது. அதுவும் தற்காலிகமாக..! ஆனால், தமிழத்தில் அறிவுத் திருக்கோயில்களிலும் மனவளக் கலை மையங்களிலும் இந்தப் பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாசகர்கள் முழுமையாகக் கற்றுக்கொண்டு, தங்கள் உடலையும் மனத்தையும் பக்குவப்படுத்தி பலப்படுத்தி ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதே சக்தி விகடனின் விருப்பம்!
பயன்படுத்திக் கொள்ளுங்கள். பண்பட்டு வாழுங்கள் வாசகர்களே! வாழ்க வளமுடன்!
- தி.ஜெயப்பிரகாஷ்
படங்கள்: ரா.மூகாம்பிகை, மு.சரவணகுமார்