ஆடல் வல்லானே சரணம் முன்னூர்வி.ராம்ஜி
##~## |
'குரு பலம் இருந்தால்... சகல யோகமும் பெறலாம்’ என்பார்கள். நவக்கிரகங்களில் சுபக்கிரகமாகத் திகழும் ஸ்ரீ குருபகவான், இழந்த தன் தவ வலிமையைப் பெறுவதற்காக, ஸ்ரீபிரம்மாவின் அறிவுரைப்படி சிவனாரைத் தொழுது, தவமிருந்து, பலன் பெற்று, பலம் பெற்ற திருத்தலம் எதுவென அறிவீர்களா நீங்கள்?
* 'பித்ரு தோஷம் நீங்கினால்தான், இந்தப் பிறப்பில், வாழ்வில் எல்லா வளத்தையும் நலத்தையும் பெறலாம்’ என்பார்கள். பித்ரு தோஷங்கள் யாவற்றையும் போக்கி, சிவனருளை வழங்கும் தலம்... முழுக்க முழுக்கக் கற்றளிக் கோயிலாக அமைந்திருக்கிறது; அதுவும், சென்னையில் இருந்து இரண்டு மூன்று மணிநேரப் பயணத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் என்பது தெரியுமா உங்களுக்கு?
*அதுமட்டுமா? ஒய்மா எனும் தேசத்தை ஆட்சி செய்த நல்லியக்கோடன் எனும் மன்னன், போரில் வெற்றி பெறுவதற்காகச் சிறப்பு பூஜைகள் நடத்தி, ஸ்ரீசிவசுப்ரமணியரை மனதார வழிபட்டு, வாகை சூடிய அற்புதமான க்ஷேத்திரமும் இதுவே!


* ராஜராஜ சோழன், குலோத்துங்கன், சம்புவராயர், திருபுவன வீரன், நந்திவர்மன், நல்லியக்கோடன், இரண்டாம் புலிகேசி, அதியமான், கோப்பெருஞ்சிங்கன், காங்கேயராயன், பங்களராயன் என மன்னர் பெருமக்கள் பலர் இந்தத் தலத்தில் வழிபட்டு, அருள் பெற்று, தேசத்தைச் செழிக்கச் செய்திருக்கிறார்கள்.
* காஞ்சி மகா பெரியவா, திருவலம் மௌனகுரு சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் என இந்தக் கால மகான்களும், அருளாளர்களும் இங்கு வந்து சிவனாரை வணங்கி, ஆலயத்தின் பெருமையையும், தலத்தின் அருமையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இத்தனைப் பெருமைகளுக்கும் போற்றுதலுக்கும் உரிய தலத்தில் குடியிருக்கும் இறைவனை, 'இதோ... எந்தன் தெய்வம்’ என்று நெக்குருகிச் சொல்வதற்கு மிகப்பெரிய பக்தர் கூட்டமே இருக்கிறது. அந்தத் திருத்தலம், முன்னூர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பயணித்தால், முன்னூர் எனும் கிராமத்தையும், அங்கே அமைந்துள்ள ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம்.

இந்திராதி தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்ய புருஷராக, குருநாதராகத் திகழ்ந்தவர் பிரகஸ்பதி. அதனால்தான் அவரை தேவ குரு என்று போற்றுகிறது புராணம். அவரின் கடும் தவமும், அதன் மூலம் அவருக்குக் கிடைத்த ஞானமும் எல்லை இல்லாதவை. முக்காலமும் உணர்ந்தவர். ஞான யோகங்களைப் பெற்ற மகா குரு.
ஆனாலும் என்ன... ஒருவருக்கு உலகின் மிகப் பெரிய எதிரி, அவரின் கர்வம்தான். தனக்கு இணையானவர் எவரும் இல்லை எனும் இறுமாப்புடன் இருந்தார் பிரகஸ்பதி. மொத்த தேவர்களுக்கும் குருவாகத் திகழ்பவன் என்கிற மமதையில் இருந்தார்.

தலையில் கர்வம் ஏற ஏற, முகத்திலும் உள்ளிலும் ஒளியை இழந்தார். தேஜஸ் மெள்ள மெள்ளக் குறைந்துகொண்டே வந்தது. அவரின் செருக்கு, அவரையும் அவரின் திருமுகத்தையும் உருக்குலைத்துப் போட்டது. உள்ளளி குறையக் குறைய, ஞானமும் குறைந்துகொண்டே வந்தது. நினைவில் தங்கியவை கொஞ்சம் கொஞ்சமாக மறந்தபடியே இருந்தன. வார்த்தைகளில் இருந்த தெளிவும், நடையில் இருந்த திடமும் காணாது போயின.
''கடவுளே, என்னைப் படைத்தவனே! என்னைப் பெற்றெடுத்தவனே! என் ஞானத் தந்தையே! ஸ்ரீபிரம்மாவே... கர்வமே வாழ்வுக்குச் சத்ரு என ஞானம் பெற்றேன். இழந்த என் தேஜஸை, என் பொலிவை, தெளிவைத் திரும்பப் பெற தாங்களே வழிகாட்ட வேண்டும். அடியேன் என்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுங்கள்!'' என்று பிரம்மாவிடம் மன்றாடினார்.

''நம்மையெல்லாம் கட்டி ஆள்கிற தென்னாடுடைய சிவனார், அன்னை உமையவளுடன் பூவுலகில் திருநடனம் புரிந்து, மகிழ்ச்சியில் மூழ்கியபடி இருக்கிற திருத்தலத்துக்குச் செல். அங்கே, உனக்காக ஒரு திருக்குளத்தை உருவாக்கித் தருகிறேன். அதில் நீராடி, சிவனாரை அனுதினமும் பூஜித்து வா. இழந்ததை விரைவில் பெறுவாய்'' என அருளினார் ஸ்ரீபிரம்ம தேவர்.
அதன்படி, பூவுலகில் வந்திறங்கி, அந்தக் குறிப்பிட்ட திருத்தலத்துக்குச் சென்றார் பிரகஸ்பதி. அந்த ஊரின் பெயர், முன்னூற்று மங்கலம். ஒருகாலத்தில், 300 அந்தணர்கள் தங்கியிருந்து, வேதங்கள் சொல்லி, மிகப்பெரிய ஆன்மிக அதிர்வை உண்டாக்கிய தலம் அது என்பார்கள்.

முன்னூற்றுமங்கலத்துக்குச் சென்றார் பிரகஸ்பதி. அங்கே, ஸ்ரீபிரம்மா உருவாக்கிய தீர்த்தக் குளத்தில் நீராடினார் (அதை பிரம்மதீர்த்தம் என்கிறது ஸ்தல புராணம்). தன் மொத்த கர்வத்தையும் அகங்காரத்தையும் அலட்டலையும் விட்டொழித்த பிரகஸ்பதி, அடியவர்களுக்கெல் லாம் அடியவராக இருந்து, சிவ பூஜை செய்தார்.
அந்த பூஜையிலும், அவரின் பல வருட தவத்திலும் மகிழ்ந்துபோன சிவபெருமான், பிரகஸ்பதிக்கு ஸ்ரீபார்வதிதேவியுடன் ஸ்ரீஆடவல் லீஸ்வரராக மிக அற்புதமாகக் காட்சி தந்தார். இழந்த தேஜஸையும், தெளிவையும், ஞானத்தையும், யோகத்தையும் பெற்றார் பிரகஸ்பதி.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உறைந்திருக்கும் ஈசனுக்கு ஸ்ரீஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமம் அதனால்தான் அமைந்தது. உலகுக்கே நாயகி யாக, தலைவியாகத் திகழும் அம்பிகைக்கு, ஸ்ரீபிரஹன்நாயகி என்பது திருநாமம்; அதாவது, ஸ்ரீபெரியநாயகி எனப் பெயர்.
இதுபோன்று எத்தனையோ அருளாடல்கள் இந்தத் திருத் தலத்தில் நிகழ்ந்திருக்கின்றன. அதனால்தான் இதை தென் திருக்கயிலாயம் என்று போற்றுகின்றனர்.
முன்னூர் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் கோயிலின் பெருமைகள், இன்னும் ஏராளமாக இருக்கின்றன.
அவற்றை அடுத்தடுத்துக் காண்போம்.
- வேண்டுவோம்
படங்கள்: ரா.மூகாம்பிகை