மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 20

ஆடல்வல்லானே சரணம்... முன்னூர் வி.ராம்ஜி

##~##

வீடு என்பது இனிமையும் சுதந்திரமும் நிறைந்த இடம். எத்தனை சோதனைகள் வந்தாலும், வீட்டுக்கு வந்து விட்டால் நம் மனசுக்குள் ஒருவித நிம்மதியும் தைரியமும் வந்து விடுவதை அநேகமாக நாமெல்லாருமே உணர்ந்திருப்போம். நமக்கெல்லாம் வீடுபேறு தரக்கூடிய, சோதனைகள் தந்து, அவற்றை எதிர்கொள்ளும் சக்தியையும் தந்து அருள்பாலிக்கக்கூடிய சிவபெருமானின் வீடு... திருக்கயிலாயம். இங்கே, பூரணத்துவமாக, புன்னகை தவழும் முகத்தோடு, களிநடனம் புரிந்த நிறைவோடு, உமையவளுடன் வசிக்கிறார் சிவனார் என்கின்றன ஞானநூல்கள். இத்தனைப் பெருமைகளைக் கொண்ட இறைவனின் வீடான திருக்கயிலாயத்துக்கு இணையான திருத்தலம் என்று முன்னூரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் தாயுமானவராக, அதாவது தாய்க்கு இணையானவராக இருந்து அருள்பாலிக்கும் சிவனார், இங்கே, இந்த முன்னூர் தலத்தில் தகப்பன் ஸ்தானத்துக்கு நிகராக இருந்து, திக்குத் திசை தெரியாமல் தவிக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அருள்மழை பொழிகிறார். இங்கே இவரின் திருநாமம் ஸ்ரீஆடவல்லீஸ்வரர்.

ஒய்மா தேசம் என்று அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. அப்போது தேசம் முழுவதுமான பிரச்னைகள் இந்தத் தலத்தில் வாசிக்கப்பட்டு கோரிக்கையாக, வேண்டுதலாக வைக்கப்படுமாம். விவசாயம் செழிக்க வேண்டும் என்று விதை நெல்லை வைத்து வணங்கிச் செல்வார்கள். பெண்ணுக்குத் திருமணம் நடைபெற வேண்டுமே என்று அம்பிகைக்குத் தாலி வாங்கிச் சார்த்தி வேண்டிக்கொள்வார்கள். பொன்னும் பொருளுமாகச் சிறந்து வாழ வேண்டும் என்று அன்னதானம், பொருள் தானங்கள் செய்து பிரார்த்தித்துக் கொள்வார்கள். 'வீட்டில் எல்லாம் இருக்கிறது. அள்ளியெடுத்துக் கொஞ்சுவதற்கு ஒரு குழந்தை இல்லையே...’ என்று தவிப்பவர்கள், இங்கு வந்து தொட்டில் கட்டிப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்கள் அத்தனை பேரின் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி அருள்வார் ஈசன்.

இதோ...  எந்தன் தெய்வம்! - 20

அதேபோல், ஒய்மா தேசம் பகைவர்களின் கைகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், எதிரிகள் படையெடுத்து வந்து தேசத்தைக் கைப்பற்றாமல் இருக்கவும், இங்கே முருகப்பெருமானின் திருச்சந்நிதியில் மிகப் பெரிய பூஜை நடைபெறுமாம்! வீரர்கள் தங்கள் ஆயுதங்களையெல்லாம் சந்நிதிக்கு முன்னே குவித்து வைத்து, அந்த ஆயுதங்களுக்குச் சந்தனம்- குங்குமம் இட்டு, முருகப்பெருமானுக்குப் படையல் போடுவார்கள். அதையடுத்துப் போர் வந்தால், ஒய்மா தேசத்து வீரர்களே வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இப்போது ஆயுதங்களை வைத்து பூஜைகள் நடப்ப தில்லை. ஆனாலும், இந்தத் தலத்து முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொண்டால் எதிரிகள் தொல்லை, சத்ருக்களின் சதி ஆகியவை அகன்றுவிடும்; என்று பூரிப்புடன் சொல்கிறார்கள், பக்தர்கள்.

''என் கணவருக்கு இந்த ஊர்தான் பூர்வீகம். வக்கீலா இருக்கார். சின்ன வயசுலேருந்தே ஊர் மேல பாசமும் கோயில் மேல பக்தியும் உண்டு என்றாலும், அதை வெளிக் காட்டிக்க மாட்டார். பஞ்சாயத்து போர்டு எலெக்ஷன்ல கிட்டத்தட்ட வெற்றிக்குப் பக்கமா வந்தாரே தவிர, வெற்றி பெற முடியலை. அதையடுத்து, கோயிலைச் சுற்றிலும் முள்ளும் புதருமா இருந்ததையெல்லாம் சரிபண்ணுவோம்னு சொன்னேன். ஆளுங்களை வைச்சு சுத்தப்படுத்தி, சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சோம். அந்த முறை எங்க வார்டு, பெண்களுக்காக ஒதுக்கப் பட்டது. நான் நின்னேன். சிவனருளால ஜெயிச்சேன்'' என்று நெகிழ்ந்து சொல்கிறார், முன்னூர் பஞ்சாயத்து போர்டு தலைவி வசந்தி முருகேசன்.

இதோ...  எந்தன் தெய்வம்! - 20

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்- மரக்காணம்  வழியில், ஆலங்குப்பம் எனும் கிராமத்துக்கு அருகில் உள்ள முன்னூர், பெரிதாக பஸ் வசதி என்று எதுவுமில்லாத மிகச் சிறிய கிராமம்தான். ஆனால், இங்குள்ள கோயில் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. பிரமாண்டமாகவும் கலை நுணுக்கத்துடனும் திகழ்கிறது ஆலயம். சிற்பங்கள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. ஒய்மா தேசத்தில் மிகச் சிறப்பான முறையில் நல்லாட்சி நடந்திருக்கிறது என்பதை அவை வெளிக்காட்டுவதாக உள்ளன.

சந்நிதியில் முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் அழகே அழகு! அத்தனை நேர்த்தியுடனும் நுட்பத்துடனும் வடிக்கப்பட்டி ருக்கிறது கந்தனின் திருவடிவம். ஸ்ரீவள்ளியும் ஸ்ரீதெய்வானையும் கொள்ளை அழகில் தரிசனம் தருகிறார்கள்.

ஆடல்வல்லானான ஸ்ரீநடராஜ பெருமா னின் திருநாமமாக ஸ்ரீஆடவல்லீஸ்வரர் எனும் திருப்பெயருடன் ஈஸ்வரன் கோலோச்சும் இந்தத் திருத்தலத்தில், அழகிய- பிரமாண்ட லிங்கத் திருமேனியராக சிவனார் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்தில், திருவாதிரை நட்சத்திர நாளில், சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் கோலாகலமாக நடைபெறுகின்றன.

குறிப்பாக, மார்கழி திருவாதிரைத் திருநாள் எல்லா சிவாலயங்களிலும் சிறப்புற நடைபெறும். இங்கே, முன்னூர் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத் திலும் பூஜைகள், வழிபாடுகள், ஆராதனைகள் என அமர்க்களப்படுமாம்.

முன்னூற்றுமங்கலத்தில் உள்ள ஸ்ரீஆடவல்லீஸ்வரர் கோயிலில் நடைபெறும் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவைக் காண விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், பாண்டிச் சேரி, கள்ளக்குறிச்சி எனப் பல ஊர்களில் இருந்தும் வண்டி கட்டிக்கொண்டு மக்கள் வந்து, திருவிழாவில் கலந்து கொள்வார்கள். திருவாதிரையில் சிவ தரிசனம் செய்த பின்பு, தை மாதம் பிறந்ததும் வருகிற செய்திகள் அனைத்தும் நல்ல விதமாகவே அமையும் என்பது ஐதீகம்.

இதோ...  எந்தன் தெய்வம்! - 20

எத்தனைப் பெருமைகள், சிறப்புகள் இருந்தென்ன... காலப்போக்கில் கோயில் பராமரிப்பு இல்லாமல் போனது. பராமரிப்பு இல்லாததால், முள்ளும் புதரும் மண்டிப் போய், கோயிலுக்குச் சென்று வர வழிகளே இல்லாத நிலை ஏற்பட்டது. போக வர வழியே இல்லாதபோது, வழிபாடுகள் மட்டும் எப்படி நடைபெறும்?

''ஒருகாலத்துல மிகப் பிரமாதமா விழாக்கள் நடத்தப்பட்ட கோயில் இப்படிக் கிடக்குதேனு தவிச்சுப் போயிட்டோம். இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்டு சில அன்பர்கள் சென்னையில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒண்ணாச் சேர்ந்து திருப்பணிக் குழு ஒன்றை உருவாக்கி, உழவாரப் பணிகளை ஆரம்பிச்சு, கோயில் மொத்தத்தையும் சீரமைச்சு, சுத்தம் செஞ்சாங்க. ஒரு கால பூஜை மட்டுமாவது நடந்தா பரவாயில்லைனு சந்தோஷப்பட்டு, பூஜைக்கும் தரிசனத்துக்கும் ஏற்பாடு பண்ணினாங்க. அப்புறம்தான் கோயில் மெள்ள மெள்ள இப்ப எல்லார்க்கும் தெரிய ஆரம்பிச்சிருக்கு!'' என்கிறார் வக்கீல் முருகேசன்.

''இதோ... மார்கழி திருவாதிரை வரப்போகுது. கோயில் கொள்ளாத கூட்டம் நிரம்பி வழியப் போகுது. 'இப்படியரு கோயில், சக்தி வாய்ந்த ஆலயம், உங்க ஊர்ல இருக்கறது உங்களுக்கே தெரியலைன்னா எப்படி? பார்த்துண்டே இருங்கோ... இந்தக் கோயில் நன்னா, பிரமாதமா வளரப் போறது. இந்தக் கோயிலால அக்கம்பக்கத்து ஊர்களும் செழிக்கப் போறது. எல்லாரும் சௌக்கியமா இருங்கோ!'' என்று ஆசீர்வதித்து, இந்தக் கோயில் திருப்பணிக்கு வித்திட்டவர் வேறு யாருமல்ல... காஞ்சி மகா பெரியவாதான்!'' என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் ஊர்மக்கள்.

- வேண்டுவோம்

படங்கள்: ரா.மூகாம்பிகை