எண்ணங்களின் சங்கமம்!
'மக்கள் சேவையே உயர்வானது. அதுவே மகேசன் சேவை’ என்று வாக்காலும் செயலாலும் உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். அந்த யுகபுருஷரின் அறிவுரையை ஆதர்சமாகக் கொண்டு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தோன்றி, மக்கள் நலப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த அமைப்புகளின் சேவைகள் குறித்த செய்திகள் பெருமளவு வெளிச்சத்துக்கு வரவில்லை.
சுகாதாரம், நீராதாரம், கல்வி போன்ற பல துறைகளில் அரும் சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் எனும் நோக்கத்துடன் 2005-ல் சுவாமி விமூர்த்தானந்தர் பெயர் சூட்ட, ஓவியர் ஜெ.பிரபாகர் அவர்களால் உருவானதே, 'எண்ணங்களின் சங்கமம்’ எனும் அமைப்பு. இதன் 9-ஆம் ஆண்டு விழா, சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் 15-ம் தேதி நடைபெற்றது.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 'எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பின் உறுப்பினர்களான ஜெ.பிரபாகர், டாக்டர் அழகர் ராமானுஜம், ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் 100 தொண்டு நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. 800-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டது சிறப்பு!
- கண்ணன் கோபாலன்
படம்: க.பாலாஜி