Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 21

‘இன்றே திருப்பணி தொடங்குக!’காஞ்சி மகான் அருளிய தலம் - முன்னூர் வி.ராம்ஜி, படங்கள்: ரா.மூகாம்பிகை

இதோ... எந்தன் தெய்வம்! - 21

‘இன்றே திருப்பணி தொடங்குக!’காஞ்சி மகான் அருளிய தலம் - முன்னூர் வி.ராம்ஜி, படங்கள்: ரா.மூகாம்பிகை

Published:Updated:
##~##

குருவின் ஆசிர்வாதமும் அருளும் கிடைத்துவிட்டால், இந்த உலகில் எல்லாவற்றையும் வென்றுவிடலாம். கல்லால மரத்தடியில், சிவ சொரூபமான ஸ்ரீதட்சிணாமூர்த்தி, குருவின் ஸ்தானத்தில் இருந்து, சனகாதி முனிவர்களுக்கு ஞானம் போதித்தார் என்கிறது புராணம். இங்கே, முன்னூர் திருத்தலத்தில், தெற்குப் பார்த்தபடி, கருவறையில் குடிகொண்டு, குரு ஸ்தானத்தில் இருந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் ஞானமும் யோகமும் தந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீஆடவல்லீஸ்வரர்.

அத்தனைப் பெருமைமிக்க கோயில், ஒரு காலத்தில் புதர் மண்டிக் கிடந்தது. உள்ளே செல்ல ஒற்றையடிப் பாதை மட்டுமே வழியாக இருந்தது. குண்டும் குழியுமாக, சந்நிதிகளெல்லாம் சரிந்து, ஸ்வாமி விக்கிரகங்களெல்லாம் பின்னமுற்று (உடைந்து), எப்போதும் இருள் சூழ்ந்த நிலையில் இருந்த ஆலயத்தைக் கண்டு முன்னூர் மக்கள் பெரிதும் வருந்தினார்கள். அக்ரஹாரத்தில் இருந்த அந்தணர்கள், 'இப்படி இருந்தால் கோயிலில் கைங்கர்யம் எப்படிச் செய்வது? தினப்படி பூஜைகள் நடக்கவேண்டாமா?’ என்று கண்ணீர் விட்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது, முன்னூரைச் சொந்த ஊராகக் கொண்ட விஜயராகவலு ரெட்டியார் என்பவர், சென்னையில் வசித்து வந்தார். 'மாம்பலம் ரெட்டியார்’ என்று இவரைச் சொல்வார்கள். மிகுந்த பக்தியும், காஞ்சி சங்கர மடத்தின் மீது அளவற்ற மரியாதையும் கொண்டிருந்த விஜயராகவலு ரெட்டியார், கடந்த நூற்றாண்டின் நடமாடும் தெய்வமாகவும், லோக குருவாகவும் திகழ்ந்த காஞ்சி மகாபெரியவாளைத் தரிசித்து, முன்னூர் பற்றியும், அங்கே சிதிலம் அடைந்து கிடக்கும் சிவாலயம் குறித்தும் சொன்னார்.

இதோ... எந்தன் தெய்வம்! - 21

அதையடுத்து, 1969-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில், காஞ்சி மகா பெரியவா முன்னூர் கிராமத்துக்கு விஜயம் செய்தார். அன்று மாலை, சாயரட்ஷை பூஜைகளையெல்லாம் முடித்துவிட்டு, 'அந்தக் கோயிலுக்குப் போகணும்’ என்றபடி, உடனே கிளம்பி கோயிலுக்கு வந்தார். பிரம்மதீர்த்தக் குளத்தைக் கண்டார். 'அந்தப் பக்கம் புதர் மண்டிக் கிடக்கிறது. பாம்புகள் நிறைய உண்டாம் இங்கே!’ என்று அவரிடம், அருகிலிருந்தவர்கள் தகவல் சொன்னார்கள்.

''அந்தப் பாம்புகள்தான் இங்கே இருக்கிற விக்கிரகங்களை யாரும் சேதப்படுத்தாம காவல் காத்துண்டி ருக்கு!'' என்ற பெரியவா, 'லாந்தர் விளக்கு இருந்தா கொண்டாங்கோ’ என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென மண்டப இடிபாடுகளைக் கடந்து, சந்நிதிக்குச் சென்றார். 'ஈஸ்வரா... ஈஸ்வரா...’ என ஈஸ்வர நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தார்.

அரிக்கேன் விளக்கு ஏற்றப்பட்டது. அதன் வெளிச்சத்தைப் பெரிதுபடுத்தி, சந்நிதிக்குள்ளே காட்டினார்கள். அந்த வெளிச்சத்தில், பிரமாண்ட லிங்கத் திருமேனி தகதகவென ஜொலித்தது. 'ஈஸ்வரா...’ என்று கண்மூடி சிவனாரை வேண்டினார் பெரியவா. வெளிச்சத்தையும் மனிதர்களையும் கண்டு, அங்கிருந்த பாம்புகள் இருளில் சலசலத்து மறைந்தன. ஊர்மக்கள் 'ஸ்வாமிகள் அடுத்து என்ன சொல்லப் போகிறார்’ என்று அவரையே பவ்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

''முன்னே இங்கே ரெண்டு சிவாலயங்கள் இருந்திருக்கு. அதுல ஒண்ணுல, ஸ்ரீகாமாட்சி அம்பாள் கோயில் கொண்டிருக்கா. இன்னொரு கோயில்ல, ஸ்ரீபிரஹன்நாயகிங்கிற திருநாமத்துல ஆட்சி பண்ணிண்டிருக்கா!'' என்ற பெரியவா, ஒரு ஐந்து நிமிடம் மௌனமாக சிவலிங்கத் திருமேனியையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென்று ஜனங்களிடம் திரும்பி, 'இன்னிக்கே திருப்பணிகளைத் தொடங்கிடுங்கோ!’ என்று சொல்லி, கைதூக்கி அனைவரையும் ஆசிர்வதித்தார்.

இதோ... எந்தன் தெய்வம்! - 21

பிறகு, விஜயராகவலு ரெட்டியாரிடம், ''இந்தக் கோயில் வழிபாடு இல்லாம இருக்கப்படாது. அது இந்த ஊருக்கும் தேசத்துக்கும் ஆகாது. உடனே, திருப்பணிகளை நீங்க முன்னெடுத்துப் பண்ணுங்கோ. ஊர் செழிச்சு, எல்லாரும் சௌக்கியமா இருப்பேள்!'' என்று அருளினார். அத்துடன், கோயில் திருப்பணியைத் துவக்குவதற்கு 1,121 ரூபாயை வழங்கி அருளினார் காஞ்சி மகான்.

''அந்தக் காலத்துல, அதாவது 1969-ம் வருஷம், தினசரி பத்திரிகைகள்ல இந்த நியூஸ் வந்திருக்கு. அன்னிக்கு ராத்திரி விஜய ராகவலு ரெட்டியார் கனவுல, கோயில் தீர்த்தக் குளத்துக்குப் பக்கத்துல இருக்கிற இலுப்பை மரத்துல இருந்தபடி சிவனாரும் பார்வதிதேவியும் தரிசனம் கொடுக்கிற மாதிரி ஒரு காட்சி வந்துதாம். கூடவே, 'திருப்பணி செய்’னு அசரீரி மாதிரி ஒரு குரல் கேட்கவும், மளமளன்னு வேலையைத் துவக்கினார் ரெட்டியார். 78-ம் வருஷம் கோயில் திருப்பணிகள் பூரணமா முடிஞ்சு, கும்பாபிஷேகமும் சிறப்பா நடந்து முடிஞ்சுது. விஜயராகவலு ரெட்டியார் நூறு வயசு வரை பெருவாழ்வு வாழ்ந்த அற்புதமான பக்திமான். இதையெல்லாம் அவரே அடிக்கடி சொல்லக் கேட்டு வியந்து போயிருக்கோம்'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கின்றனர் முன்னூர் பேரூராட்சித் தலைவர் வசந்தியும், அவர் கணவர் முருகேசனும்.

காஞ்சி மகா பெரியவா எனும் மகா குரு, தெற்குப் பார்த்தபடி குருவாகவே ஈசன் கோலோச்சுகிற சிவாலயத்தில் தீபாராதனை செய்து வழிபட்டு, பூஜை செய்து, திருப்பணிக்குத் தொகையும் தந்து பணிகளை முடுக்கிவிட்ட அற்புதமான ஆலயம் இது.

இதோ... எந்தன் தெய்வம்! - 21
இதோ... எந்தன் தெய்வம்! - 21

ஸ்ரீஆடவல்லீஸ்வரர் கோயிலுக்கு ஒருமுறையேனும் வந்து, அவரை மனதாரப் பிரார்த்தியுங்கள். 'இந்த லிங்கத் திருமேனிக்குதானே காஞ்சி மகா பெரியவா பூஜை செய்தார்! அரிக்கேன் விளக்குவெளிச்சத்தில் பார்த்து, 'ஈஸ்வரா... ஈஸ்வரா...’ என்று மனம் உருகினாரே, அது இந்த பிரமாண்ட லிங்கத் திருமேனிதானே? பிரம்மதீர்த்தக் குளத்துக்கு அருகில் சிவ- பார்வதி காட்சி தந்தது இந்த இடம்தானா?’ என்று ஒவ்வொரு இடமாக வந்து நின்று, நிதானமாகக் கவனியுங்கள். ஆடல்வல்லான் ஸ்ரீஆடவல்லீஸ்வரரின் அருளும், காஞ்சி மகானின் ஆசிர்வாதமும் கிடைத்து, சிறப்பும் செம்மையுமாக வாழ்வீர்கள்!

இதோ... எந்தன் தெய்வம்! - 21

''இந்தக் கோயில்ல ரெண்டு அம்பாள். ஸ்ரீபிரஹன்நாயகியும், ஸ்ரீகாமாட்சி அம்பாளும் ரெண்டு சந்நிதிகள்ல இருந்தபடி அருள் பாலிக்கிறாங்க. செவ்வாய், வெள்ளில அரளிப் பூமாலை வாங்கிண்டு வந்து கொடுத்து, ரெண்டு அம்பாளுக்கும் புடவை சார்த்தச் சொல்லி, மனசாரப் பிரார்த்தனை பண்ணிட்டுப் போறவங்க நிறையப் பேர். இன்னொரு விஷயம்... ஸ்வாமி தெற்குப் பார்த்தபடி இருக்கிற ஸ்தலங்கள் ரொம்பவே குறைவு. தென் திசை பார்த்து இருக்கிற ஸ்வாமியைத் தரிசனம் பண்ணினா, யம பயமெல்லாம் நீங்கிடும்னு ஒரு ஐதீகம் உண்டு!'' என்றார் முருகேசன்.

உண்மைதான். தென் திசை நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீஆடவல்லீஸ் வரரை வணங்கினால், நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான தேகமும் பெறலாம். அதனால்தான் இந்தக் கோயில் திருப்பணியில் ஈடுபட்ட விஜயராகவலு ரெட்டியார் மாதிரியான அன்பர்கள் நூறு வயது வரை கடந்து வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள்போல! ஸ்ரீஆடவல்லீஸ்வரர் கோயிலுக்குச் சென்று உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நீண்ட ஆயுளுடன் கூடிய நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம்!

- வேண்டுவோம்

எங்கே இருக்கிறது?

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்துக்கு அருகில் உள்ளது முன்னூர். திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது முன்னூர். திண்டிவனம்- முன்னூர் இடையே 22-ஆம் நம்பர் அரசு டவுன் பஸ் இயங்குகிறது. எனினும், பஸ் வசதி குறைவுதான். ஆலங்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism