Published:Updated:

‘புத்தாண்டை வரவேற்கிற பூஜை!’

சேத்பட் பூஜையில் வாசகி குதூகலம்!

‘புத்தாண்டை வரவேற்கிற பூஜை!’
##~##

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகில் உள்ள சேத்பட் ஸ்ரீகற்பகாம்பாள் உடனுறை ஸ்ரீகாரணீஸ்வரர் கோயிலில், கடந்த 31.12.13 அன்று மாலை, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்துகிற திருவிளக்கு பூஜையில் ஏராளமான வாசகிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சக்திவிகடனின் 129-வது திருவிளக்கு பூஜை இது.

சேத்பட், ஆரணி, செய்யாறு, வந்தவாசி எனப் பல ஊர்களில் இருந்தும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட வாசகிகள், 'இந்த விளக்கு பூஜை, 2013-ஐ வழியனுப்புவது போலவும், 2014-ம் வருடத்தை வரவேற்பது போலவும் அமைந்துள்ளது’ எனப் பூரிப்புடன் தெரிவித்தனர்.

''எங்க ஊர்ப் பக்கமெல்லாம் இந்த முறை மழை சரியாவே பெய்யலீங்க. இந்த வருஷமாவது நல்ல மழை பெய்யணும். காடு- கரையெல்லாம் நிறைஞ்சு, கழனி வாசல் செழிக்கணும். அதுதான் என் வேண்டுதல்!'' என்று தெரிவித்தார் வாசகி முத்துலட்சுமி.

''எங்க அக்கா பையனுக்கு முப்பது வயசுதான் ஆகுது. அவனுக்குக் கண்ணுல எப்பவும் ஏதாவது பிரச்னை! டாக்டர்கள் அவனுக்குக் கண்ணுல ஆபரேஷன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. புத்திசாலிப் பையன். நல்லாப் படிச்சு, தேர்வுகள்ல நிறைய மார்க் வாங்கினவன் அவன். சீக்கிரமே அவன் கண் பிரச்னைகள் சரியாகி, அவன் நல்லபடியா இருக்கணும்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார், செய்யாறு வாசகி தமிழரசி.

‘புத்தாண்டை வரவேற்கிற பூஜை!’

''சொந்த வீடு கட்டணும்னு முடிவு பண்ணி, இடமெல்லாம் வாங்கிப் போட்டுட்டோம். ஆனா, அஞ்சாறு வருஷமாவே, வீடு கட்டறது தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு. இந்த 2014-ம் வருஷத்துலயாவது, நாங்க வீடு கட்டிக் குடிபோகணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று ஆரணி வாசகி கண்ணகி கூறினார்.

''எங்க அண்ணி, கர்ப்பப் பை புற்றுநோயால அவதிப்படுறாங்க. இப்ப கர்ப்பப் பையை அகற்றியாச்சு! அவங்களுக்கு ஒரு குறைவும் இல்லாம ஆரோக்கியமா, ஆயுளோட இருக்கணும். அவங்க பொண்ணுக்கு வரன் பார்த்துக்கிட்டிருக்காங்க. அந்தக் கல்யாணத்தை எங்க அண்ணி, முன்னாடி நின்னு ஜாம்ஜாம்னு நடத்தணும்'' என்று வேண்டிக்கொண்டதாக ------- ஊரிலிருந்து வந்திருந்த வாசகி தெரிவித்தார்.

அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றித் தருவார் ஸ்ரீகாரணீஸ்வரர்.

படம்: பா.கந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு