மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - முன்னூர் - 22

இதோ... எந்தன் தெய்வம்!
News
இதோ... எந்தன் தெய்வம்! ( வி.ராம்ஜி )

வாரியார் சுவாமிகள்... திருவலம் சுவாமிகள்... முன்னூர் பெருமைகள்! வி.ராம்ஜி

##~##

எதற்கெடுத்தாலும் பயந்து பயந்தே வாழ்க்கையை ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள்; 'எதற்கும் பயப்பட மாட்டேன்’ என்று அசட்டுத் துணிச்சலோடு செயல்படுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், யாராக இருந்தாலும், ஒரு விஷயத்தில் கண்டிப்பாக பயம் இருக்கத்தான் செய்யும். அது... மரணம் குறித்த பயம். அப்படியான மரண பயத்தைப் போக்கி, வாழும் நாளில் நம்மை நிம்மதியாக வாழச் செய்யும் திருத்தலமாக நாம் போற்றுவது ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தை.

சோழ தேசத்தில் உள்ள கும்பகோணத்துக்கும் மயிலாடுதுறைக்கும் அருகில் உள்ள ஸ்ரீவாஞ்சியம், எம பயம் போக்கும் தலம் எனும் பெருமை கொண்டது. இந்த ஆலயத்துக்கு இணையான ஆலயம் எனப் போற்றப்படுகிறது முன்னூர் திருத்தலம்.

திண்டிவனம் அருகில் உள்ள முன்னூர் கிராமத்தில் உள்ள சிவாலயம், தெற்குப் பார்த்த வாசலைக் கொண்டது. இங்கே குடிகொண்டிருக்கும் ஸ்ரீஆடவல்லீஸ்வரரும் தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்ரீஆடவல்லீஸ்வரரை மனதார வேண்டினால், எம பயம் நீங்கும்; மரண பயமின்றி நிம்மதியாகவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வாழலாம் என்பது ஐதீகம்.

''இந்தக் கோயிலின் அருமைபெருமைகளை உணர்ந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், இங்கே வந்து ஸ்ரீஆடவல்லீஸ்வரரையும், நல்லியக்கோடன் எனும் மன்னனுக்கு அருள் புரிந்து, போருக்கு உறுதுணையாக இருந்த முருகப்பெருமானையும் தரிசித்தார். தவிர, மூன்று நாட்கள் இங்கே சொற்பொழிவாற்றினார். அப்போது கோயிலின் பெருமைகளையும் புராண- புராதனப் பெருமைகளையும் மக்களுக்கு விவரித்துச் சொன்னார். 'அப்பேர்ப்பட்ட சிறப்புகள் வாய்ந்த ஆலயம் பொலிவு பெற நாம் எல்லோரும் இணைந்து செயல்பட்டு, கோயில் திருப்பணியில் இறங்கி, கும்பாபிஷேகம் நடக்க உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, கோயில் திருப்பணிக்காக நன்கொடையும் அளித்து, அருளாசி வழங்கினார்!'' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார், சென்னை- பழவந்தாங்கலில் வசித்து வரும் ரமேஷ்.

இதோ... எந்தன் தெய்வம்! - முன்னூர்  - 22

இவருக்கு முன்னூர் கிராமம்தான் பூர்வீகம். நீண்ட காலமாக, கோயிலில் வழிபாடுகளும் பூஜைகளும் இல்லாத நிலை கண்டு வருந்திய ரமேஷ், நண்பர்களின் உதவியுடனும் ஊர்க்காரர் களின் பேராதரவுடனும் திருப்பணிக்குழு ஒன்றை அமைத்தார். சிவனடியார்களின் நன்கொடைகளுடன் கோயில் திருப்பணி வேலைகள் செவ்வனே நடந்து, இன்றைக்கு வழிபாடுகளும் பூஜைகளும் குறைவின்றி நடைபெறுகின்றன. அரசுப் பணியில் இயங்கி வரும் ரமேஷ், தன் ஊரில் உள்ள சிவாலயத் திருப்பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

''சின்ன வயசிலிருந்தே இந்தக் கோயில் பத்தி எங்க அப்பா சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு. பசங்களோட விளையாடுறதுக்கு மட்டுமே கோயில் பக்கம் போவேன். அப்படிப் போகும்போதெல்லாம், இவ்ளோ பெரிய கோயில்ல திருவிழாக்கள் நடந்தா எவ்ளோ சிறப்பா இருக்கும்னு நினைச்சுக்குவேன். மனசுல ஏதாவது குழப்பமோ தவிப்போ இருந்தா, இங்கே வந்து ஆடவல்லீஸ்வரர்கிட்ட வேண்டிக்குவேன். அரசாங்கத்துல உத்தியோகம் கிடைச் சதுக்கும், உத்தியோகத்துல பதவி உயர்வுகள் கிடைச்சதுக்கும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர்தான் காரணம். இந்தக் கோயிலின் திருப்பணிகளில் ஈடுபட ஈடுபட, மனசுல இருந்த பயமும் பதற்றமும் காணாமப் போயிடுச்சு. கடவுள் எப்பவும் நம்ம கூடவே இருக்கிற மாதிரியான ஓர் உணர்வும் நம்பிக்கையும் வர ஆரம்பிச்சிடுச்சு.

ஒரு காலத்துல ஓஹோன்னு இருந்த முன்னூர், சீக்கிரமே பழையபடி எல்லாராலும் புகழப்படும் ஊரா, எல்லாரும் வந்து தரிசனம் பண்ற தலமா ஆகிடும்கிற உறுதியான நம்பிக்கை வந்துடுச்சு. ஏன்னா, மன்னர்களும் முனிவர்களும் அருள் பெற்ற புண்ணிய பூமி இது!'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் ரமேஷ்.

காஞ்சி மகா பெரியவா இங்கு வந்து, விஜயராகவலு ரெட்டியாரிடம் 'இன்றே திருப்பணி தொடங்குக!’ என்று அருளியதைப்போல, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வந்து, சொற்பொழிவின் மூலமாகவே கோயில் திருப்பணியில் ஈடுபடச் சொல்லி அறிவுறுத்தியதைப்போல, திருவலம் சுவாமிகளும் முன்னூரின் பெருமையை அறிந்து, இங்கு வந்து தங்கி, ஸ்ரீஆடவல்லீஸ்வரருக்கும் ஸ்ரீபிரஹன்நாயகிக்கும் அபிஷேகங்கள் செய்து பூஜித்திருக்கிறார்.

இதோ... எந்தன் தெய்வம்! - முன்னூர்  - 22

''இப்படியொரு அழகு ததும்பும் முருகக் கடவுளின் விக்கிரகத்தைப் பார்ப்பது அரிது! அதுவும், போருக்குச் செல்வதற்கு முன்னதாக, முருகப் பெருமானின் திருவடியில் ஆயுதங் களை வைத்து, 'இந்த தேசத்தை நீதான் காப்பாத்தணும்’னு ஒய்மா தேசத்து மன்னன் நல்லியக்கோடன் பூஜை நடத்திச் சென்றிருக்கிறான். அவன் படை ஜெயிப்பதற்கு கந்தக்கடவுளின் பேரருளே காரணம். அவனுடைய தேசம் செழித்திருந்ததற்கு இங்கே உள்ள சிவனாரும் அம்பிகையுமே காரணம். கருணையே வடிவான ஸ்ரீகாமாட்சி அம்பாளும் அருளாட்சி செய்து வருகிறாள், இங்கே!'' என்று திருவலம் சுவாமிகள், கோயிலின் சாந்நித்தியத்தை ஊர்மக்களுக்கு எடுத்துச் சொல்லி அருளியிருக்கிறார்.

''இப்படி மன்னர் பெருமக்களும் மகான்களும் கொண்டாடிய கோயி லுக்கு இன்றைக்கு நம்மால் முடிந்த பணிகளைச் செய்ய முடிகிறது என்பதே பூர்வ ஜென்ம பலன்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, கோயிலைச் சுற்றிலும் கோயில் மதிலைச் சுற்றி லும் அசுத்தமாக இருந்தது. அந்த இடத்தை முழுவதுமாகச் சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினோம். முட்களையும் புதர்களையும் அசுத்தங்களையும் நீக்கிச் சீர்படுத்திய பின்பு, அந்த இடமே ரம்மியமாகிவிட்டது.

பிறகு, கோயில் மதிலைச் சுற்றிலும், திருக்குளத்தைச் சுற்றிலும் மரக் கன்றுகளையும் செடிகளையும் நட்டு வைத்தோம். அவற்றை உரிய முறையில் பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்தோம். இன்றைக்கு அவை மளமளவென வளர்ந்து, கோயிலுக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன. இந்தக் காரியங்க ளெல்லாம் நம்மை மலர்ச்சிப்படுத்தி, நமக்குள் நிம்மதியையும் நிறைவையும் தரு கின்றன. சிவத் தொண்டு செய்வதில் கிடைக்கிற ஆனந்தமே அலாதிதான்!'' என்கிறார் முன்னூர் பேரூராட்சித் தலைவி வசந்தி.

இதோ... எந்தன் தெய்வம்! - முன்னூர்  - 22

வியாழக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்புகிறார் கள். ஸ்ரீஆடவல்லீஸ்வரருக்கு வஸ்திரம் அணிவித்து, வில்வமும் அரளியும் சார்த்தி, ஸ்ரீபிரஹன்நாயகிக்குப் புடவையும் அரளியும் தாமரையும் சார்த்தி, உமையவளுக்கு நெய் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், தீராத நோயும் தீரும்; மரண பயம் நீங்கி, நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம். எனவே, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் ஸ்வாமிக்கு வஸ்திரமும், அம்பாளுக்குப் புடவையும்  குவிகிறது என்று பூரிப்புடன் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

வாழ்வில் ஒருமுறையேனும் முன்னூர் வந்து, ஸ்ரீஆடவல்லீஸ்வரரை தரிசனம் செய்யுங்கள். அம்பாளிடம் உங்கள் மனக்குறைகளையெல்லாம் கொட்டித் தீருங்கள். பிறகு, இனிமையாகவும் நிம்மதியாகவும் செல்லும் உங்கள் வாழ்க்கையே முன்னூரின் பெருமையை உங்களுக்கு உணர்த்தும்!

- வேண்டுவோம்

படங்கள்: ரா.மூகாம்பிகை

எங்கே இருக்கிறது?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகில் உள்ளது முன்னூர். திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது முன்னூர். திண்டிவனம்- முன்னூர் இடையே 22-ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயங்குகிறது. எனினும், பஸ் வசதி குறைவுதான். ஆலங்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.