மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 24

மாங்கல்யம் காக்கும் பிரம்மோத்ஸவ தரிசனம்! வி.ராம்ஜி

##~##

பால்ய வயதில், நாம் பார்க்கிற நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே நம் மனத்துள் பதிந்துவிடும். அது சிறுவயதில் நாம் பார்த்த கபடி விளையாட்டாகவும் இருக்கலாம்; கடவுள் வழிபாடாகவும் இருக்கலாம். அப்படிப் பதிந்த நல்ல விஷயங்கள் நெஞ்சில் நினைக்க நினைக்க, தித்திப்புக் கரைசலென வழிந்து, மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்.

''சின்ன வயசுல நான் பார்த்து பிரமிச்சுப்போன பிரமாதமான கோயில், முன்னூர் சிவன் கோயில். எங்க அம்மாவோட ஊர் இதுதான். இப்ப வளர்ந்து பெரியாளாகி, குடும்பம் குழந்தை கள்னு வந்துட்டதால, அடிக்கடி இங்கே வரமுடியலை. ஆடவல்லீஸ்வரரை அடிக்கடி தரிசனம் பண்ணவும் முடியலை. ஆனா, என் பள்ளி வயசுல லீவுன்னா, உடனே முன்னூருக்கு ஓடி வந்துடுவேன். இதோ, இந்த ஆடவல்லீஸ்வரர் கோயிலும், பக்கத்துல இருக்கிற குளமும்தான் எங்களுக்கு விளையாட்டுக் களம்'' என்கிறார் ராசு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், சென்னை- கோயம்பேடு பணிமனையில் பணிபுரிகிறார்.

''அப்பெல்லாம் வழிபாடு, கோயில் திருவிழா எதுவும் நடக்காமதான் இருந்துச்சு. கோயில் ஒரே முள்ளும் புதருமா இருந்தா, விழா எப்படி நடக்கும்? அப்புறமா ஊர்ப் பெரியவங்க எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து, கோயிலை சுத்தம் பண்ணினாங்க. ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சு, வழிபாட்டுக்கு வழிசெஞ்சாங்க.

அப்ப நான் ஏழாவதோ எட்டாவதோ படிச்சிட்டிருந்தேன். கோயிலைச் சுத்தம் பண்ற கூட்டத்துல நானும் சேர்ந்து, கல்லைச் சுமந்துட்டுப் போய், வெளியே போட்டிருக்கேன். புதரா மண்டிக் கிடக்கிற செடிகளையெல்லாம் அறுத்து ஓரமா எறிஞ்சிருக்கேன். சின்ன வயசுலயும் சரி, இப்ப இவ்ளோ வளர்ந்துட்ட பிறகும் சரி... மனசுல ஏதாவது துக்கமோ கஷ்டமோ ஏற்பட்டுச்சுன்னா, உடனே ஆடவல்லீஸ்வரரைத்தான் நினைச்சுக்குவேன். மனசார வேண்டிக்குவேன். என் கஷ்டமும் துக்கமும் சட்டுன்னு விலகிப் போயிடும்'' என்று சிலிர்த்தபடி சொல்கிறார் ராசு.

இதோ... எந்தன் தெய்வம்! - 24

''லீவுல அம்மாவோட ஊருக்கு, அதாவது பாட்டியோட வீட்டுக்கு வர்றது தனி சுகம். 'கோயில் திருவிழா அன்னிக்கு எல்லாரும் அவசியம் வந்து சேருங்க’ன்னு பாட்டிகிட்டேர்ந்து கடுதாசி வரும். அந்த அழைப்புக்காகத்தானே காத்துட்டிருக்கோம்னு அப்பா- அம்மாவோடு நாங்க கிளம்பிப் போய் பண்ற லூட்டி இன்னிக்கு வரைக்கும் பசுமையா நினைவுல இருக்கு!

சித்திரை மாசத்துல ஸ்ரீஆட வல்லீஸ்வரர் கோயில்ல, வேல் பூஜைன்னு ஒரு விழா நடக்கும். அதாவது, யுத்தத்துல மன்னர் வெற்றி பெறணுங்கறதுக்காக, முருகப்பெருமானே இங்கே வந்து வேல் கொடுத்து, வெற்றி நிச்சயம்னு சொல்லி அருளினாராம். அதனால, வருஷாவருஷம் சித்திரை மாசத்துல வேல் பூஜை சிறப்பா நடக்கும். அப்ப, முருகக் கடவுள்தான் பிரதான தெய்வம்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத் துல, முருகன் திருவீதியுலா வருவார். நாங்கள்லாம் பின்னாடியே போவோம். அப்படிப் போற இடங்கள்ல சர்க்கரைப் பொங் கல், புளியோதரை, தயிர்சாதம்னு பிரசாதம் கிடைக்கும். ஒவ்வொண்ணும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். உண்மையா சொல்ல ணும்னா, சின்ன வயசுல இதையெல்லாம் சாப்பிடணுங்கறதுக்காகத்தான் கோயிலுக்கே போனோம். ஆனா, பிரசாதத்தைவிட கடவுள்தான் முக்கியம்கறதை அப்புறம்தான் உணர்ந்தோம்'' என நெக்குருகிச் சொல்கிறார் மேல்மருவத்தூர் புனிதா.

இதோ... எந்தன் தெய்வம்! - 24

''வேல் பூஜைக்குப் போயிட்டு வந்துட்டோம்; இனி, பில்லி சூனியமோ, காத்துக்கருப்போ நம்மளை அண்டாதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க. இன்னிக்கு நான் அரசு வேலை, அரசுப் போக்குவரத்துக் கழகத்துல கௌரவமான சம்பளம், குடும்பம், குழந்தைகள்னு நல்லா இருக்கேன்னா, அதுக்கு இந்த முன்னூர் கோயில்தான் காரணம்; ஸ்ரீஆடவல்லீஸ்வரர்- ஸ்ரீபெரியநாயகியோட பேரருள்தான் காரணம்'' என்கிறார் ராசு.

''மாசி மாசம் நடக்கற பிரம்மோத்ஸவ விழா இங்கே பிரசித்தம்! பத்து நாள் விழாவுல, ஊரே அமர்க்களப்படும். ஒவ்வொரு நாளும் ஸ்ரீஆடவல்லீஸ்வரரையும் ஸ்ரீபெரியநாயகி அம்பாளையும் விதம்விதமான அலங்காரத் துல பார்க்கும்போதே, நம்ம பாவமெல்லாம் பறந்தோடிட்ட மாதிரி ஓர் உணர்வு ஏற்படும். இங்கேயுள்ள விநாயகர், ரொம்பவே சக்தி வாய்ந்தவர். 'இவருக்கு ஒரு கை நிறைய அருகம்புல் எடுத்து சார்த்தி வேண்டிக்கிட்டா போதும்... நமக்கு எப்பவுமே வழித்துணையா, பக்கத்துணையா வருவார்’னு அப்பா சொல்லுவார். அன்னிலேருந்து, போகும் போதெல்லாம், விநாயகருக்கு மறக்காம அருகம்புல் சார்த்தறதை வழக்கமாவே வைச்சிருக்கேன்'' என்கிறார் ரமேஷ்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகில் உள்ள முன்னூர் தலத்தைப் பற்றி, இப்படி உருகி உருகி ஏராளமான தகவல்களைச் சொல்கிறார்கள் வாசகர்கள்.

முன்னூற்று மங்கலம் என்று போற்றப்பட்டு, இன்றைக்கு முன்னூர் என்று சொல்லப்படுகிற இந்தத் தலத்துக்கு ஒருமுறையேனும் வந்து, சிவ தரிசனம் செய்து வணங்கி வழிபட்டால், வாழ்வில் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது கண்கூடு. தீராத நோயுடன் அவதிப்பட்டு வந்தவர் கள், இங்கு வந்து நோய் தீர்ந்து ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 24

தோஷங்களால் கல்யாணம் தடைப்பட்ட ஆண்களும் பெண் களும் இங்கு வந்து, அம்பாளுக்குப் புடவையும் சிவனாருக்கு வஸ்திரமும் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டதில், சீக்கிரமே கல்யாண வரம் கைகூடி, ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தேறிய சம்பவங்கள் ஏராளம்.

''எனக்குத் தெரிந்து, திருச்சியில் இருந்து ஒரு குடும்பம் இங்கே வந்திருந்தது. 'என் பெண்ணுக்குக் கல்யாணம் தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு. போகாத கோயில் இல்லை; செய்யாத பரிகாரம் இல்லை. ஆனாலும், 34 வயசாகியும் இன்னும் அவளுக்குக் கல்யாணமாகலை’ன்னு சொல்லி, இங்கே வந்து வேண்டிக்கிட்டுப் போனாங்க. அடுத்த ரெண்டாவது மாசமே வந்து, 'பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சு. நல்ல குடும்பம். மாப்பிள்ளை அருமையான குணம். கல்யாணப் பத்திரிகை அடிச்சாச்சு! அதான், இங்கே ஸ்வாமி சந்நிதில பத்திரிகை வைச்சு, வேண்டிக்கலாம்னு வந்தோம்’னு சொன்னாங்க. நெகிழ்ந்து போயிட்டேன். இந்தக் கோயிலோட சாந்நித்தியத்தை உணர்ந்து, தேடி வர்ற பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே இருக்கு!'' என்கிறார் பஞ்சாயத்துத் தலைவி வசந்தி.

மகான்களும் ரிஷிகளும் வழிபட்டுப் பலன் பெற்ற தலத்தில், மன்னர் பெருமக்களுக்கு அருள் புரிந்த திருக்கோயிலில், வாழ்வில் ஒருமுறையேனும் உங்களின் பாதம் பட்டால் போதும்... நீங்கள் நினைத்த காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறி, உங்கள் வாழ்க்கையே நல்லவிதமாக மாறும்.

இதோ... எந்தன் தெய்வம்! - 24

''இதோ, வருகிற பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதியில் இருந்து பிரம்மோத்ஸவ திருவிழா நடை பெறுகிறது. இந்தப் பத்து நாள் விழாவில், ஏதேனும் ஒருநாளில் இங்கு வந்து ஸ்ரீஆடவல்லீஸ்வரரையும் ஸ்ரீபெரியநாயகி அம்பாளையும், மற்றொரு சந்நிதியில் திகழும் ஸ்ரீகாமாட்சி அம்பாளையும் ஸ்ரீசுப்ரமணியரையும் வணங்கி வழிபடுங்கள். வாழ்க்கையில் நிச்சயம் முன்னுக்கு வருவீர்கள். இது உறுதி!'' என்று பூரிப்புடன் சொல்கிறார் வழக்கறிஞர் முருகேசன்.

காஞ்சி மகான் தரிசித்து, 'திருப்பணியைத் துவக்குக’ என்று அருளிய ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோத்ஸவ விழாவில் கலந்துகொள்ளுங்கள்.

வியாக்ரபா தருக்கும் பதஞ்சலி முனிவருக் கும் காட்சி தந்த ஸ்ரீஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானின் அழகுத் திருமேனியை கண்ணார தரிசியுங்கள். ஆயுள் பலம் தரும் ஸ்ரீவாஞ்சியம் தலத்துக்கு இணையான இந்தத் தலத்து இறைவனை வணங்குங்கள். இறையருள் கிடைக்கப் பெற்று இனிதே வாழ்வீர்கள்!

- வேண்டுவோம்

படங்கள்: ரா.மூகாம்பிகை

எங்கே இருக்கிறது?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது திண்டிவனம். இங்கிருந்து மரக்காணம் செல்லும் வழியில், சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரில் இருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால், முன்னூர் கிராமத்தையும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம். திண்டிவனம்- முன்னூர் இடையே 22-ம் நம்பர் அரசு டவுன்பஸ் இயங்குகிறது. எனினும், பஸ் வசதி குறைவுதான். ஆலங்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.