Published:Updated:

'கடவுளுக்கு நன்றி சொல்ல வந்தேன்!’

வேலூர் விளக்கு பூஜையில் வாசகி நெகிழ்ச்சி

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் ஸ்ரீமார்க்க பந்தீஸ்வரர் கோயிலில், கடந்த 28.1.14 அன்று திருவிளக்கு பூஜை இனிதே நடைபெற்றது. சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த விளக்கு பூஜையில், ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள் பெண்கள். சக்திவிகடனின் 131-வது விளக்கு பூஜை இது.

இந்த பூஜையில் வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, சென்னை எனப் பல ஊர்களில் இருந்தும் வாசகியர் கலந்துகொண்டனர்.

''எனக்கு வேண்டுதல்னு எதுவும் இல்லீங்க. சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்றதுக்காகத்தான் இதுல கலந்துக்கிட்டேன்'' என்று கலகலவெனப் பேசினார் வாசகி வள்ளிநாயகி.

'கடவுளுக்கு நன்றி சொல்ல வந்தேன்!’

''என் பையன் பத்தாம் வகுப்பு வரைக்கும் நல்லா படிச்சிட்டிருந்தான். ஆனா, ப்ளஸ் டூ ஆரம்பத்துலேருந்தே சரியா படிக்கிறது இல்லை. உடம்புக்கும் எதுனா வந்து வாட்டிக்கிட்டே இருக்கு. சோர்ந்து சோர்ந்து படுக்கிறான். அவன் ஆரோக்கியமா இருந்து, நல்லா படிச்சு, நிறைய மார்க் எடுக்கணும். அதான் என் வேண்டுதல்!'' என்றார் வாசகி கல்யாணி.

ஆரணி வாசகி தேன்மொழி. ''என் தங்கைக்குக் கல்யாணமாகி ஒன்பது வருஷமாச்சு. நல்ல கணவர், நல்ல மாமியார்னு கிடைச்சாலும், இன்னும் குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கலை. அவளுக்கு சீக்கிரமே ஒரு குழந்தை பிறக்கணும்; அதுதான் என் ஒரே வேண்டுதல்!'' என்றார் அவர்.

கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று திருப்பத்தூர் வாசகி நிர்மலா பிரார்த்தித்துக் கொண்டார்.

மார்க்கபந்தீஸ்வரர் சந்நிதியில் முறையிட்டுவிட்டீர்கள். உங்கள் பிரச்னைகள் அகன்று, சீக்கிரமே நல்ல மார்க்கம் உண்டாகும்; கவலை வேண்டாம்!

படங்கள்: கா.முரளி