முன்னேற்றம் தரும் முன்னூற்று மங்கலம்வி.ராம்ஜி
''புதிதாகக் கோயில் கட்டுவதைவிட, புராதன பெருமைகள் கொண்ட ஆலயத்தைச் செப்பனிட்டு, புனர்நிர்மாணம் செய்து, கும்பாபிஷேகம் செய்வதே உத்தமம். நம் நாட்டில் புராணத் தொடர்பு கொண்ட கோயில்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் பல கோயில்கள் நித்தியப்படி பூஜைக்குக்கூட வழியில்லாமல், விளக்கேற்றக்கூட வசதிகள் இல்லாமல்... அவ்வளவு ஏன், உள்ளே நுழையவே முடியாதபடி சிதிலம் அடைந்து கிடக்கின்றன. அந்த மாதிரியான கோயில்களுக்கு தனவந்தர்களும் பக்தர்களும் மனமுவந்து நிதி வழங்கினால், சாந்நித்தியம் நிறைந்த அந்தக் கோயில்கள் விரைவிலேயே பொலிவுக்கு வரும். நித்தியப்படி பூஜைகளும் குறைவின்றி நடைபெறும். எனவே, புதிது புதிதாகக் கோயில் கட்டாமல், இருக்கிற கோயிலைச் செப்பனிடுவதற்கு உதவுங்கள்'' என்று அருளினார் காஞ்சி மகா பெரியவா.

திண்டிவனத்தின் அருகில் உள்ள முன்னூர் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் கோயிலும் ஒருகாலத்தில் அப்படித்தான், உள்ளே நுழையக்கூட முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக இருந்தது.
திருப்பைஞ்ஞீலி திருத்தலமல தெற்குப் பார்த்த ஆலயம் என்பதால், யம பயம் போக்கி, ஆரோக்கியம் தரும் தலம் என்று போற்றப்பட்டது. முனிவர் பெருமக்களுக்கு திருநடனக் காட்சி தந்து அருளிய தலம் என்பதால், தில்லை சிதம்பரத்துக்கு இணையான ஆலயம் என பக்தர்களால் கொண்டாடப் பட்டது. தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் என்றே அமைந்ததால், சிதம்பரம் நடராஜ பெருமானைப் போன்றே இங்கே உள்ள நடராஜ பெருமானும் அழகு ததும்பக் காட்சி தருகிறார் என அனைவராலும் வர்ணிக்கப்பட்டது.
இங்கே ஸ்ரீபிரஹன்நாயகி, ஸ்ரீகாமாட்சி அம்பாள் என இரண்டு அம்பிகைகள் குடிகொண்டிருப்பதால், சக்தி தன் ஆட்சியைப் பூரணமாகச் செலுத்தி பக்தர்களைக் காத்தருளும் திருத்தலம் இது என்று பெண்கள் சொல்லிச் சிலிர்க்கிறார்கள்.
நல்லியக்கோடன் எனும் மன்னனின் பக்தியில் நெகிழ்ந்து, அவனது படை போருக்குச் செல்லும் வேளையில், முருகக் கடவுளே வேல் எடுத்துத் தந்து அவனைப் போருக்கு அனுப்பி வைத்தார் என்றும், அந்த யுத்தத்தில் நல்லியக்கோடனுக்குப் பக்கபலமாக கந்தக் கடவுளே இருந்தார் என்றும் வரலாறு போற்றுகிறது. இங்கு வந்து எவரொருவர் சிவ-பார்வதியையும் முருகப்பெருமானையும் தரிசிக்கிறார்களோ, அவர்களுக்கு எதிரி பயம் இல்லை. அவர்கள் எதிர்ப்புகள் விலகி, மனத் தெளிவுடனும் ஆரோக்கியத்துடனும் சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்வார்கள் என்பது உறுதி என்று பூரிப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.
''காஞ்சி மகான் உத்தரவை சிரமேற்கொண்டு, பக்தர்கள் சிலர் இணைந்து திருப்பணிக் குழு ஏற்படுத்தி, சிதைந்சு கிடந்த இந்தக் கோயிலை சீரமைக்கும் திருப்பணியில் முழுமையாக ஈடுபட்டார்கள். அவர்களில், என் பெரியப்பா பெருமாள் ரெட்டியாரும் ஒருவர்'' என்கிறார் இல. தர்மசிவம்.

''அப்போது நான் சிறுவன். என்றாலும், கோயில் உருமாறியதைப் பார்த்துப் பார்த்து வியந்திருக்கிறேன். குறிப்பாக, ஸ்ரீபிரஹன்நாயகிக்கு சந்நிதி அமைத்து, அம்பிகையின் திருமேனியை உள்ளே பிரதிஷ்டை செய்யும்போது, பக்கத்தில் இருந்த நான் சிலிர்த்துப்போனேன். விழிகளில் கருணை, இதழில் சிரிப்பு, அபய வரத ஹஸ்தம் என, நம் அம்மாவைப் போன்ற சாந்தமும் அன்பும் கலந்த அந்தத் திருமேனியைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். இன்றைய என் வாழ்க்கை வளமுடன் இருப்பதற்கு ஸ்ரீஆடவல்லீஸ்வரரும் பிரஹன்நாயகி அம்பாளுமே காரணம்!'' என்று சொல்லி நெகிழ்கிறார் தர்மசிவம்.
வரதராஜுலு எனும் அன்பர், ''முன்னூர்தான் எனக்குச் சொந்த ஊர். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இங்குதான். இந்த ஊரில் பிறந்து, வளர்ந்து, இன்றைக்குச் சென்னையில் நல்லபடியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு எங்கள் ஊரில் குடிகொண்டிருக்கும் ஈசனும், அம்பிகையின் பேரருளும்தான் காரணம்'' என்கிறார்.

''சின்ன வயசுல வறுமையோடு போராடினவன் நான். அப்ப எனக்கு இருந்த ஒரே ஆறுதல், இந்தக் கோயில்தான். மண் மேடா, குழியா, புதர் மண்டிக்கிடந்த ஸ்ரீஆடவல்லீஸ்வரர் கோயிலுக்கு அப்ப யாருமே வர மாட்டாங்க. வழிபாடோ, பூஜையோ கிடையாது. நான் மட்டும் தனியா உள்ளே போய், சிவனார் சந்நிதிக்கு எதிர்ல உக்கார்ந்துக்கிட்டு அழுவேன். 'எங்க குடும்பத்துக்கு நல்ல வருமானம் கொடு. எங்களுக்கு நிம்மதியைக் கொடு’னு புலம்புவேன். வசதி இல்லாததால, என் படிப்பு நின்னுபோச்சு! நான் எங்காவது கூலியாளா வேலைக்குப் போய் சம்பாதிச்சாதான் சாப்பிட முடியும்கற நிலைமை. அந்த நேரத்துல, காஞ்சி மகா பெரியவா வந்து கோயிலைப் பார்த்துட்டு, திருப்பணி பண்ணச் சொன்னதுதான் ஊர் முழுக்கப் பேச்சா இருந்தது.

அப்புறம், திருப்பணிகளை ஆரம்பிச்சு வேலைகள் மளமளன்னு நடந்தப்ப, நானும் வந்து இந்தக் கோயில்ல சித்தாள் வேலை பார்த்தேன். டிராயரும், சட்டை போடாத உடம்புமா மண்ணைச் சுமந்தேன். ஆனா, படிக்கணும்கற ஆசை மட்டும் உள்ளுக்குள்ள அப்படியே இருந்துச்சு.
அப்புறம், அந்த ஈசனோட அருளால, நல்லவங்களோட உதவியால, சென்னையில படிப்பைத் தொடர்ந்தேன். பிறகு கோ- ஆப்டெக்ஸ்ல விற்பனை மேலாளரா வேலையும் கிடைச்சுது. இன்னிக்குக் கடவுள் புண்ணியத்துல, ஸ்ரீஆடவல்லீஸ்வரரோட அருளால, என் பொண்ணு அமெரிக்காவுல எம்.எஸ். படிச்சு, அங்கேயே வேலையும் பார்த்துக்கிட்டிருக்கா. அதேபோல, பையனும் பி.டெக் முடிச்சிட்டு, நல்ல உத்தியோகத்துல இருக்கான்.
சின்ன வயசுல, வயித்துப்பாட்டுக்கு ஒரு வழியைக் காட்டுப்பானு சிதைஞ்சு கிடந்த கோயிலுக்குள்ளே நுழைஞ்சு, சிவனார்கிட்ட முறையிட்டு அழுத என்னை... அவரோட கோயில் திருப்பணியில கலந்துக்கிட்டு மண் சுமந்த என்னை அந்த ஈசன் கை விடவில்லை. என்னைக் கைதூக்கிவிட்டு, இன்னிக்கி வரைக்கும் என்னையும் என் குடும்பத்தாரையும் வாழ வைச்சுக்கிட்டிருக்கார் ஸ்ரீஆடவல்லீஸ்வரர்!'' என்று நா தழுதழுக்கச் சொல்கிறார் வரதராஜுலு.
இப்படித்தான்... முன்னூர் ஆடவல்லீஸ்வரரைக் கண்கண்ட தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் கொண்டாடுகிற அன்பர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு சித்திரையிலும் வருடப் பிறப்பு நாளில், இங்கு வந்து சிவனாருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி வேண்டிக் கொள்கிற அன்பர்கள் ஏராளம். 'தமிழ் வருஷத்து முதல் நாள்ல சிவனாரையும் அம்பாளையும் தரிசனம் பண்ணி, வேண்டிக் கிட்டுப் போனா, அந்த வருஷம் முழுக்கவே நல்லா இருக்கும். முக்கியமா, அந்த வருஷம் குடும்பத்துல எதுனா நல்ல காரியம் ஒண்ணு நடந்தே தீரும்'' என்று உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சொல்கிற பக்தர்களைப் பார்க்கப் பார்க்க, ஸ்ரீஆடவல்லீஸ்வரர் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார்.

முன்னூற்றுமங்கலம் எனப் போற்றப்படும் திருத்தலம், காஞ்சி மகான், கிருபானந்த வாரியார், திருவலம் சுவாமிகள் எனப் பலரும் போற்றிய ஆலயம் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பக்தர்களுக்கு இன்னும் இன்னும் அருளையும் பொருளையும் அள்ளித் தந்து உய்விக்கப் போகிறது என்பதை உணர முடிகிறது. ''இத்தனைப் பெருமைகள் கொண்ட கோயிலில் முக்கால்வாசி திருப்பணிகளைச் செய்துவிட்டோம். கோயிலுக்கு ஒரு மதிலையும் எழுப்பிவிட்டால், கோயில் இன்னும் பாதுகாப்பாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும். அதற்கு அன்பர்கள் உதவினால், மொத்த கிராமமும் நன்றி சொல்லும்'' என்கிறார்கள் முன்னூர் கிராம மக்கள்.
யாரிடம் என்ன கேட்க வேண்டும் என்பதும், யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் அந்த ஆடவல்லீஸ்வரருக்குத் தெரியும். முன்னூருக்கு வாருங்கள்; உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் வழங்கியருள்வார். தனக்கு என்ன தேவையோ அதை உங்களிடம் கேட்டுப் பெறுவார்.
ஸ்ரீஆடல்வல்லானே, ஸ்ரீஆடவல்லீஸ்வரா... உன் நடன பாதங்களுக்கு நமஸ்காரம்!
- வேண்டுவோம்
படங்கள்: ரா.மூகாம்பிகை
எங்கே இருக்கிறது?
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது திண்டிவனம். இங்கிருந்து மரக்காணம் செல்லும் வழியில், சுமார் 19 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால், முன்னூர் கிராமத்தையும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம்.
திண்டிவனம்- முன்னூர் இடையே 22-ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயங்குகிறது. எனினும், பஸ் வசதி குறைவுதான். ஆலங்குப்பத்தில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.