சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 27

இசை ஞானம் தரும் துடையூர்! வி.ராம்ஜி

ப்போதும் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை வாழ்க்கை. துன்பத்தில் உழல்பவர், அதிலேயே சிக்கித் தவித்து மறுகுகிற நிலை, வாழ்நாள் முழுக்க நீடிப்பதில்லை. பள்ளம் என்றிருந்தால், மேடு என்று ஒன்று இருக்கும். அதேபோல், வாழ்க்கையில் சில நேரம் கஷ்ட நஷ்டங்களும், துன்பங்களும்- துயரங்களும் இருக்கலாம். அவற்றின் தாக்கத்தில் தவித்துக் கதறுபவர்கள், ஒரேயொரு முறை துடையூர் தலத்துக்கு வந்து சிவனாரிடம் கண்ணீர் விட்டு முறையிட்டால் போதும்... மொத்தத் துயரத்தையும் துடைத்து, நம் கவலைகளைப் போக்கிவிடுவார் ஈஸ்வரன்.

திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது துடையூர் திருத்தலம். கொள்ளிடக் கரையையொட்டி அமைந்துள்ள அற்புதமான ஆலயம். இங்குதான், தன்னை நாடி வரும் அன்பர்களின் அத்தனை கஷ்டங்களையும் களைந்து, நிம்மதியையும் சந்தோஷத்தையும் வாரி வழங்கி அருள்கிறார் ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர்.

இறைவனுக்கு நிகரானது இசை! அந்த இசையால் இறைவனையும் வசப்படுத்த முடியும் என்பார்கள் பெரியோர்கள்.  இசைக் கலைஞர்களை அவர்கள் வாசிக்கும் வேளையில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். வாத்தியங்களை இசைப்பவர்கள் தங்களின் துடைகளை ஆட்டிக்கொண்டே வாசிப்பார்கள். அதேபோல், பாடுபவர்களைக் கவனித்தால், வலது துடையில் கையைக் கொண்டு தட்டியபடியே, கண்கள் மூடி தங்களை மறந்து பாடுவார்கள். எனவே, சங்கீதத்துக்கும் துடைக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. அதேபோல், சங்கீதத்துக்கும் துடையூர் தலத்துக்கும்கூடத் தொடர்பு இருக்கிறது என்று முன்னோர்கள் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறார் ஹரி குருக்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 27

தங்கள் குழந்தைகள் சங்கீதக் கலையில் தேர்ச்சி பெற்றுச் சிறந்து  விளங்க வேண்டும் என்று விரும்புவோர், குழந்தைகளை அழைத்துக்கொண்டு இங்கு வந்து ஸ்ரீவிஷ மங்களேஸ்வரரையும் ஸ்ரீமங்களாம்பிகையையும் மனதார வணங்கினால் போதும்... அந்தக் குழந்தைகள் சங்கீதத்தில் மனம் லயித்து, இசைப் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். இசைத் துறையில் முக்கியமான இடத்தைப் பிடிப்பார்கள். அந்த இசை, செல்வத்தையும் புகழையும் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் வாரி வழங்கும் என்று பெருமிதம் பொங்கத் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

அதேபோல், துடையூர் குறித்து இன்னொன்றும் சொல்கிறார்கள். அதாவது வேஷ்டி, புடவை முதலான வஸ்திரங்களைத் தயாரிப்பதற்குரிய நூல்களைத் துடையில் வைத்துக்கொண்டு, இழை இழையாக உள்ள மெல்லிய திரிகளாக ஆக்குவார்கள். பிறகு அவற்றைக் கொண்டு, ஆடைகள் தயாரிப்பார்கள். நம் மானம் காப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது, ஆடை. அதனால் தான், வஸ்திர தானம் செய்வது சிறப்பு என்று வேதங்களும் ஞானநூல்களும் தெரிவித்துள்ளன.

இதோ... துடையூரில், சிவ- பார்வதிக்கு வஸ்திரம் அணிவித்து, வேண்டிக் கொண்டால், நம் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள். நெசவாளர்களும் துணி வியாபாரம் செய்பவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், வியாபாரத்தில் லாபம் கொழிக்கும் என்பது ஐதீகம்!

இதோ... எந்தன் தெய்வம்! - 27

அந்தணர்களுக்கோ ஆதரவற்றவர்களுக்கோ வஸ்திரங்களை தானமாகத் தருவது மிகுந்த புண்ணியத்தைத் தரும்; சந்ததி செழித்தோங்கும் என்பர் பெரியோர். அப்படி வஸ்திர தானம் செய்வோர், இங்கு வந்து ஸ்ரீவிஷ மங்களேஸ்வரரை வணங்கி, ஸ்ரீமங்களாம்பிகையையும் மனதாரத் தொழுதுவிட்டு, பிறகு தானம் செய்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் நீங்கிவிடும் என்று சொல்கிறார்கள் துடையூர் மக்கள்.

ஒருகாலத்தில் பிரமாண்டமாகத் திகழ்ந்த ஆலயம், இன்றைக்கு சிறிய அளவில் அமைந் திருப்பதையும் அறிவோம்தானே! ஆனால், சிவ சந்நிதியில் கண் மூடி, உங்கள் பிரார்த்தனைகளை சிவனாரிடம் வைக்கும்போது, உங்களால் உடனே மீண்டு வரமுடியாது. அப்படியே ஒரு பத்து நிமிடம் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தபடியே அமர்ந்திருக்கத் தோன்றும். அத்தனை சாந்நித்தியம் மிக்க சிவலிங்கத் திருமேனி இது!

''சிறு வயதில், பூஜைக்காக இங்கு வரும்போது, ஆரம்பத்தில் இந்தக் கோயில் மூர்த்தத்தின் பலம் தெரியவில்லை. ஆனால் நாளடைவில் சிவ லிங்கத் திருமேனியைத் தொட்டு பூஜை செய்யச் செய்ய, என்னுள் ஏகத்துக்கும் மாற்றங்கள். மின் கம்பியில் காது வைத்துக் கேட்டால், மெல்லியதாக ஓர் அதிர்வை உணரமுடிவது போல, இங்கே சிவனாரிடம், சிவலிங்கத்திடம் மெல்லியதான ஓர் அதிர்வை என்னால் உணர முடிந்தது.

குழந்தை பாக்கியம் இல்லை என்றோ, கல்யாணம் இன்னும் தகையவில்லை என்றோ, கொடுத்த கடன் திரும்ப வரவில்லை என்றோ பக்தர்கள் இங்கு வேண்டுதல்களுடன் வருவார்கள். வந்து, சிவனாருக்கு வில்வ மாலையும் அரளி மாலையும் சார்த்தி, கண்ணீர் விட்டுத் தங்கள் வேண்டுதலை சிவனாரிடம் சமர்ப்பிப்பார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கு விரைவிலேயே நல்ல பலன் கிடைத்துவிடும். பிறகு, எந்த சந்நிதிக்கு வந்து கண்ணீர் விட்டுப் புலம்பினார்களோ அதே சந்நிதியில், ஸ்ரீவிஷ மங்களேஸ்வரருக்கு முன்னே உற்சாகத்துடனும் பக்தியுடனும் நிம்மதியுடனும் வந்து நின்று வணங்கிச் செல்வார்கள். பார்க்கவே பூரிப்பாக இருக்கும்!'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் ஹரி குருக்கள்.

இந்த மகிமையை உணர்ந்துதான் ஞானிகளும் முனிவர்களும் இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும் தவம் செய்து வணங்கினார்களோ என்னவோ! ஒளரவ மகரிஷி இந்தச் சிவ மூர்த்தத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். தெற்கே பொதிகை மலை நோக்கிப் பயணப்பட்ட அகத்திய முனிவர், இங்கு வந்து கொள்ளிடக் கரையிலேயே தங்கி, சிவனாருக்கு தினமும் அபிஷேகம் செய்து, வில்வம் சார்த்தி, பூஜித்திருக்கிறார். அதன் பிறகு, அவர் தெற்குப் பகுதியை அடைந்த போது, அவருக்கு ரிஷபாரூடராக தரிசனம் தந்தருளியிருக்கிறார் சிவபெருமான்.

சிவ- பார்வதியின் திருமணக் கோலத்தைக் கண்டு சிலிர்த்துப் போன அகத்திய முனிவர், ''இங்கே தங்களைக் கல்யாணக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாகவும் விருப்பமாகவும் இருந்தது. அது இப்போது நிறைவேறிவிட்டது. ஆனால், மாந்தர்களுக்கு கல்யாணம் என்பதே பிரச்னையாகவும், எப்போது நடைபெறும் என்கிற ஏக்கமாகவும் இருக்கிறது. வழியில் அடியேன் தரிசித்த சிவ ஸ்தலங்களில் யார் எந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக் கொண் டாலும் சரி.... அவருக்கு விரைவில் கல்யாண யோகம் கைகூடி வரவேண்டும், இறைவா!’ என வேண்டினாராம் அகத்தியர். அதன்படியே, துடையூர் முதலான திருத்தலங்களுக்கு வருவோரின் கல்யாணத் தடைகளை அகற்றி, அவர்களின் வாழ்க்கைக்கு உற்றதொரு துணையையும் தந்து, பக்கத்துணையாகவும் இன்றளவும் இருந்து வருகிறார் ஸ்ரீபரமேஸ்வரன்.

ஊர் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் வேண்டிக்கொண்ட முனிவர்களின் பிரார்த்தனையை ஏற்றுச் செயல்படுத்தி வருகிறார்  ஈசன் என்பதற்கு இந்தத் துடையூர் தலமே சாட்சி!

- வேண்டுவோம்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்