சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பஞ்சாங்கம் பார்க்கலாமா...

பஞ்சாங்கம் பார்க்கலாமா...

சித்திரை மாதப் பிறப்பே தமிழ் வருடப் பிறப்பாகவும் இருப்பதால், சித்திரை மாதப் பிறப்பு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மகா முனிவரான அகத்தியர், 'சித்திரைத் திங்களில் வந்து அருள் செய், அம்மா!’ என அம்பிகையிடம் வேண்டிப் பாடியிருக்கிறார்.

வருடப் பிறப்பு அன்று நவகிரக பூஜை செய்வார்கள்; பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்யும் வழக்கமும் உண்டு; பெரியவர்களைக் கொண்டு, காலை அல்லது மாலையில் கோயிலிலோ அல்லது ஊர்ப் பொது இடத்திலோ பஞ்சாங்கம் படித்து, அந்த வருடத்துக்குரிய பலன்களைச் சொல்லச் செய்வார்கள். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள்.

அப்போது வெயிலுக்கு ஏற்ற நீர்மோர், பானகம், பழங்கள், விசிறி போன்றவை வழங்கப்படும்.

பஞ்சாங்கம் பார்க்கலாமா...

பஞ்சாங்கம் படிப்பது

வருடம் என்னும் கால தேவதைக்கு 12 மாதங்களும் கை, கால், முகம் போன்ற உறுப்புகளாகச் சொல்லப்பட்டுள்ளன. நவநாயகர்கள் (9) என்ற பெயரால், சூரியன் உட்பட நவகிரகங்களும் உலகை நிர்வாகம் செய்வார்கள். அந்தந்த வருடத்துக்குரிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை- அதாவது; யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் ஆகியவை அங்கே விவரிக்கப்படும் (இந்தப் பஞ்ச அங்கங்களையும் கொண்டதால்தான் அது 'பஞ்சாங்கம்’ எனப்பட்டது).

இந்த ஐந்தும் என்னென்ன பலன்களைக் கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

யோகம்- ரோகங்களைப் போக்கும்; திதி- நன்மையை அதிகரிக்கும்; கரணம்- வெற்றியைத் தரும்; வாரம்- ஆயுளை வளர்க்கும்; நட்சத்திரம்- பாவத்தைப் போக்கும்.

முந்தைய காலத்தில் தினந்தோறும் பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. வருடப் பிறப்பு அன்றாவது

பஞ்சாங்கம் படிக்கும் இடத்துக்குப் போய், வரவிருக்கும் வருடத்தின் பலாபலன்களைக் கேட்க வேண்டும்.

வருடப் பிறப்பன்று புதுப்பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு.

தமிழ் வருடப் பிறப்பு அன்று, பூத்துக் குலுங்கிக் கொட்டிக் கிடக்கும் வேப்பம்பூக்களைச் சேகரித்துப் பச்சடி செய்து சாப்பிடுவார்கள். கசப்பும் இனிமையும் கலந்தது வேப்பம்பூ பச்சடி. கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை இது உணர்த்துகிறது.

- எம்.அபிநயஸ்ரீ, நெல்லை-6