சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

 பகவத் கீதைக்கென ஒரு தனிக்கோயில் இருப்பதாக நண்பர் கூறுகிறார். அது எங்கிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

- எம்.ஸ்ரீநிவாஸன், ஸ்ரீவில்லிப்புத்தூர்

உங்கள் நண்பர் கூறுவது உண்மைதான். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளது வார்தா நகர். இந்த ஊருக்கு  அருகில் உள்ள ஓரிடத்தில் பகவத்கீதையைப் போற்றும் வகையில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. மேல் கூரை இல்லாத இந்தக் கோயிலில் விக்கிரகங்களும் கிடையாது. இங்கே 700 பளிங்குக் கற்களில் கீதையில் உள்ள 18 அத்தியாயங்களின் சுலோகங்களும் மராத்திய மொழியில் செதுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீமத் பகவத் கீதை பிறந்ததும், குருக்ஷேத்திரம் நிகழ்ந்ததும் ஹரியானா மாநிலத்தில் என்பார்கள்.  ஹரி ஆரண்யம் என்பதே ஹரியானா ஆனதாகச் சொல்வார்கள். இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் இருப்பின் வாசகர்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

 சிவலிங்கம் எதை உணர்த்துகிறது? அதன் தத்துவம் என்ன?

- கே.எஸ்.ராஜீவ்ரஞ்சன், திருச்சி.

ஹலோ சக்தி

உருவம், அருவம், அருவுருவம் இந்த மூன்றில் சிவலிங்க வழிபாடு என்பது அருவுருவ வழிபாட்டைச் சேர்ந்தது. லிங்கம் என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் என்று பொருள். லிங்- லயம்; கம்- தோற்றம். அதாவது, உலகம் தோன்றி ஒடுங்கும் இடம்; உலக முடிவில் அண்டசராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் என விளக்குகின்றன ஞானநூல்கள். லிங்கம் என்பதற்குப் பிரகாசம் என்றும் பொருள் உண்டு. சிவலிங்கம் குறித்த விரிவான தகவல்கள் இதே இதழில் இடம்பெற்று உள்ளது. பார்க்க 76-ம் பக்கம்.  

 கோயிலில் ஸ்வாமிக்கு திரை போட்டிருக்கும்போது வலம் வந்து வணங்கலாமா? சிலர் கூடாது என்கிறார்களே..?

- சி.கோகிலா கிருஷ்ணன், சென்னை- 44

திரை விலக்கிய பிறகு, கருணைக்கடலான இறைவனைக் கண்ணாரத் தரிசித்து மகிழ்வது சிறப்பு. திரை போட்டிருப்பது ஸ்வாமி அலங்காரத்துக்காக எனில், வலம் வந்து வணங்கலாம்; தப்பில்லை. நைவேத்தியத்துக்காக எனில், வலம் வருவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், நைவேத்தியம் ஆனதுமே ஆரத்தி ஆரம்பிக்கும். தீபாராதனை தரிசனத்தை இழக்க வேண்டாமே!

 ஸ்ரீபைரவரைத் தரிசித்து வழிபட வேண்டும் என்பது என் பிரார்த்தனை. ஏதோ ஒரு தலத்தில் அஷ்ட பைரவர்களும் அருள்வதாகச் சொல்கிறார்கள். அந்தத் தலம் எது? எப்படிச் செல்வது?

- சு.கணேசன், பத்தமடை

சேலம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஆறகலூரில் எட்டு பைரவர்கள் கொண்ட சிவன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் ஸ்ரீகாமநாதீஸ்வர சுவாமி திருக்கோயில். அங்கே அஜிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், கால சம்ஹார பைரவர் என எட்டு பைரவர்கள் காட்சி தருகிறார்கள். இந்தக் கோயிலில் அமைந்துள்ள லிங்கம் வசிஷ்ட மகரிஷி யால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பார்கள்.

ஹலோ சக்தி

சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேலத்துக்கு அருகே இருக்கும் நகரம் ஆத்தூர். இதே நெடுஞ்சாலையில், ஆத்தூரை அடுத்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது தலைவாசல். இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆறகலூர் பைரவர் கோயில். தலைவாசலில் இருந்து டவுன் பஸ், மினி பஸ் வசதி உண்டு. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

 சோழ மன்னர் ஒருவர் சிவ வழிபாடு முடிந்ததும், சிவபிரானின் சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்ததாக ஒரு தகவலை, திருவாதிரை குறித்த கதைகளைச் சொல்லும்போது பகிர்ந்து கொண்டார் என் தந்தை. அந்த மன்னரின் பெயர் அவருக்கும் நினைவில்லை. அந்தச் சோழ மன்னர் யார்?

- சுமதிப்ரியா, மதுரை-2

கண்டராதித்த சோழன். அனுதினமும் பூஜையின் முடிவில் சிவனாரின் சிலம்பொலி கேட்குமாம் அந்த அரசருக்கு. ஒருநாள் சிலம்பொலிக்கவில்லை. மன்னர் வருத்தத்தில் ஆழ்ந்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவன், 'அரசே, வருந்தாதே! அன்பன் சேந்தன் படைத்த களியமுதை ஏற்கச் சென்றதால், உன் இல்லத்துக்கு வர இயலவில்லை’ என்று அருளியதாகத்

ஹலோ சக்தி

திருக்கதை உண்டு. மறுநாள், தில்லைக்கோயிலில் இறைவனின் திருமேனியில் களியமுது சிதறிக் கிடந்ததையும் அடியவர்கள் கண்டார்களாம். அதுமுதல் திருவாதிரையில் களி படைப்பது வழக்கமாயிற்று!

 நான் முருகபக்தன். ஏதோ ஒரு திருத்தலத்தில் முருகப்பெருமான் குழந்தையாகவும், இளைஞனாகவும், வயோதிகனாகவும் என மூன்று பருவங்களில் காட்சி தருவதாகக் கேள்விப்பட்டேன். அது எந்தத் திருத்தலம் என்று சொல்ல முடியுமா?

- வி.நடராஜன், கடலூர்

ஆண்டார்குப்பம். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த ஊர். இந்தத் தலத்தில்தான் காலையில் பாலனாகவும், நண்பகலில் வாலிபனாகவும், மாலையில் வயோதிகராகவும் அருட்கோலம் காட்டுகிறார் முருகப்பெருமான்.  பிரம்மதேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணையுடன், இடுப்பில் கரம் வைத்து முருகப்பெருமான் அருளும் திருத்தலம் இது என்பதால், இங்கு வந்து வழிபட, அதிகாரப் பதவி வாய்க்கும் என்பது நம்பிக்கை.