சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

விளக்கு பூஜை... சொற்பொழிவு!

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! உற்சாகத்தில் திருச்சி வாசகிகள்

''விளக்கு ஏற்றி வைப்பதால், இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. முதலாவது, அங்கே அதுவரை இருந்த இருள் காணாமல் போகிறது. அடுத்தது, அதுவரை அங்கே இல்லாத வெளிச்சம் முழுவதுமாக வியாபித்து விடுகிறது. தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள்; நம் வீட்டுக்கு ஐஸ்வரிய லட்சுமி உடனே வந்து தங்கிவிடுவாள்..!'' - தமிழகத்தின் பெண் ஓதுவார்- திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வர ஸ்வாமி கோயிலின் ஓதுவார் அங்கயற்கண்ணி பேசப் பேச, மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருந்தது கூட்டம்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் விளக்கு பூஜை, திருச்சி ஏர்போர்ட் எதிரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலில், கடந்த 25.3.14 அன்று  நடைபெற்றது. சக்திவிகடன் நடத்தும் 135-வது திருவிளக்கு பூஜை இது!

''இதுவரை விளக்கு பூஜை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த முறை, பூஜைக்கு முன்னதாக பிரபலம் ஒருவரைக் கொண்டு சின்னதாக சொற்பொழிவு நடத்தியது புதுமையாக இருந்ததோடு, மனசுக்கு இதமாகவும் இருந்தது. விளக்கு பூஜையின் மகத்துவம் குறித்துப் பல விஷயங்களை அறிந்துகொண்டோம். சக்திவிகடனுக்கு நன்றி!'' என்றார் ப்ரியா.

விளக்கு பூஜை... சொற்பொழிவு!

''செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்ற வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். ஆனால், வீட்டுப் பூஜையறையில் எப்போதும் விளக்கேற்றி வைப்பது, நம்மையும் அறியாமல் நம் மனத்துக்கு எத்தனை மகிழ்ச்சியையும் தெளிவையும் தரும் என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். எங்கள் பிரார்த்தனை மொத்தமும் நிறைவேறி விடும் என்கிற நம்பிக்கை வலுவாகிவிட்டது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கலைவாணி.

விளக்கு பூஜை... சொற்பொழிவு!

''சக்திவிகடன் நடத்தும் விளக்கு பூஜைகள் சிலவற்றில் ஏற்கெனவே  கலந்துகொண்டிருக்கிறேன். இந்த பூஜை, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, ஓதுவாரின் சொற்பொழிவும் திருவிளக்கு பூஜையுமாக அமைந்து, எங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இங்கே வந்திருப்பவர்களின் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறட்டும்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் தையல்நாயகி அம்மாள்.

பூஜைக்கு வந்தவர்களுக்கு பாக்கெட் சைஸ் ஸ்வாமி படங்களும் வழங்கப்பட்டன.

''சக்திவிகடனோட 11-ம் வருடத்தையொட்டி, விளக்கு பூஜைல இப்படி நல்ல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கீங்க.அதுவும் பிள்ளையார் கோயில்லேருந்து! சந்தோஷமா இருக்கு. இன்னும் இன்னும் புதுமைகள் சேர்த்து, எல்லாரோட மனசும் வீடும் நிறைஞ்சு போற மாதிரி, விளக்கு பூஜையை சக்திவிகடன் நடத்தும்னு நம்பறோம்! எங்களோட வேண்டுதல்களை வரசித்தி விநாயகர் பார்த்துப்பார்'' என்று உற்சாகத்துடன் பேசினார் கமலாம்பாள்.

விக்னங்கள் தீர்த்தருள்வார் விநாயகப் பெருமான்!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்