Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

? 1.4.14 சக்தி விகடன் இதழின் முகப்பில் மூன்று முக விநாயகரின் வண்ணப்படத்தைத் தரிசித்து  மகிழ்ந்தோம். விநாயகருக்கு ஏன் மூன்று முகங்கள்?

- தி. ஹரிஹரன், சேலம்

இப்படித்தான் என்றில்லாமல், எப்படி வேண்டு மானாலும் வழிபடலாம் பிள்ளையாரை. வண்ண வண்ணப் பூக்கள்தான் வேண்டும் என்பதில்லை; நதிக்கரை ஓரங்களில் வளரும் அருகம்புல் போதும் அவரை வழிபட! கோபுர மாடங்களுடன் கூடிய பெருங் கோயில்கள் என்றில்லாமல், சிறு கூரையின் கீழும், ஏன் மரத்தடியிலும்கூட அழகாய் கொலுவீற்றிருப்பார் ஆனைமுகன். அவ்வளவு ஏன்... மஞ்சளைக் கொஞ்சம் பிடித்து வைத்தால் பிள்ளையார்! அவரின் திருவுருவை தத்தம் கற்பனைக்கு ஏற்ப சித்திரமாகவும், சிற்பமாகவும் அமைத்து மகிழ்வார்கள் கலைஞர்கள். அதற்கொரு வரையறையே கிடையாது.

ஞானநூல்கள் 16 வகை பிள்ளையார் திருவுருவங்களைச் சிலாகிக்கின்றன. அவற்றுள் ஒன்று த்ரிமுக கணபதி. மூன்று முகங்கள் முக்காலத்தை, மூன்று தொழிலை, முக்குணங்களைக் குறிப்பதாக தத்தமது கருத்துக்கேற்ப பெரியோர்கள் விளக்கியுள்ளனர்.

ஹலோ சக்தி

? சக்தி விகடன் பழைய இதழ் ஒன்றில், ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் பூர்விகம் குறித்த தகவல்களைப் படித்ததாக ஞாபகம். அதில், அவர் தமது பாடலால் தீபம் ஏற்றிய கதையும் வரும். அந்தக் கட்டுரையில் தியாகராஜ ஸ்வாமிகளின் பெற்றோர், பாட்டனார் குறித்த தகவல்களும் இருந்தன. அதை மீண்டும் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- ஆர். சீதாலட்சுமி, பாளை

வாசகர் கேட்டிருக்கும் தகவல், சக்திவிகடன் 17.2.07 இதழில் 'தந்தையை மிஞ்சிய தனயன்’ பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒருமுறை, புதுக்கோட்டை மன்னர் விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தார். எண்ணெயும் திரியும் கொண்ட விளக்கு ஒன்றை சபையில் வைத்து, ''உங்களில் யாராவது, தமது பாடலின் சக்தியால் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்!'' என்றார். எல்லோரும் திகைத்திருக்க, ஒருவர் மட்டும் எழுந்து குருநாதரைப் பணிந்து வணங்கிவிட்டு, ஜோதிஸ்வரூபிணி ராகத்தில் ஒரு பாடலைப் பாடினார். சற்று நேரத்தில், அந்த விளக்கில் தீபம் சுடர்விட்டது.

இந்த அதியசயத்தை நிகழ்த்தியவர் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள். இவரின் தாத்தா, கிரிராஜ கவி. இவர், ஷாகாஜி மகாராஜாவின் (1684-1710) சமஸ்தான வித்வானாக விளங்கியவர். ஏராளமான பாடல்களை இயற்றியவர். கிரிராஜ கவியின் மகன் ராமப்பிரம்மம்; ஸ்ரீராம பக்தியில் சிறந்தவர். இவருக்கும் இவருடைய மனைவி சீதம்மாவுக்கும் மூன்று பிள்ளைகள். முதல் இருவர்- ஜப்பேசன், ராமநாதன். மூன்றாவது பிள்ளையே ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்.

? தொலைபேசியின் மூலமாக வாசகர்கள் உங்கள் முன்வைக்கும் சந்தேகங்களைக் கேட்டறிந்து, அவற்றுக்கான விளக்கங்களைத் தரும் 'ஹலோ சக்தி’ எனும் இந்தப் பகுதி மிகப் பயனுள்ளது. கடந்த முறை, சிவலிங்க தத்துவத்தை விளக்கியிருந்தீர்கள். அதே போன்று, சிவ வடிவங்களில் உன்னதமான ஸ்ரீபிட்சாடனர் திருவடிவம் குறித்தும் தெரிந்துகொள்ள ஆசை!

- கே.பரமேஸ்வரன், முசிறி

தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள் தாங்கள் செய்யும் வேள்விகளாலும் யாகங்களாலும் எதையும் சாதிக்கலாம் என்று நம்பினார்கள். அதன் விளைவாக, தங்களை மிஞ்சிய சக்தி வேறில்லை என்ற கர்வத்துக்கு ஆளானார்கள். அவர்களது கர்வத்தை பங்கம் செய்ய நினைத்த சிவனார், பிட்சாடனராக வடிவெடுத்து வந்தார் என்கின்றன புராணங்கள்.

'எல்லா உலகங்களுக்கும் தலைவனான ஈசன், பிச்சை ஏற்பவர் வடிவில் வருவது எதற்காக? இரவலர் தொழிலை மேற்கொண்டதால் அவருக்கு நாம் ஈயப்பெறும் வாய்ப்பை வழங்கி, அதன் மூலம், எட்டாத  அவரது திருவடிகளைப் பிடித்துக்கொள்ளும்படி இன்னருள் புரிகிறார் இறைவன்’ என்கிறார் திருமூலர்.

? ஸ்ரீகந்த சஷ்டி கவசம் அருளிய ஸ்ரீலஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் வேறு ஏதேனும் நூல்கள் எழுதியுள்ளாரா?

- கீர்த்தனா சம்பத், கோபிச்செட்டிபாளையம்

தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட ஸ்வாமிகள், திருச்செந்தூர்  கடலில் உயிர்விடத் தீர்மானித்து அந்தத் தலத்தை அடைந்ததாகவும்,  அன்று ஸ்ரீகந்த சஷ்டி ஆரம்ப நாளாக இருந்ததால், ஸ்வாமியைத் தரிசித்துவிட்டு சமுத்திரம் புகலாம் என்றெண்ணி அவர் கோயிலை வலம் வந்து முடிக்க, நோய் குணமானதாகக் கூறுவர். உடனே, ஒரு நாளைக்கு ஒரு கவசமாக, அறுபடை வீடுகளுக்கும் ஆறு கவசங்களை அவர் பாடியருளியதாகக் கூறுவர்.

ஹலோ சக்தி

தவிரவும் கிருத்திகை கவசம், சூத சம்ஹிதை, குசேலோபாக்கியானம், சத்ருசம்ஹாரவேல் பதிகம், சாமுண்டிப் பதிகம், பஸவண்ண பாசுரம் முதலான நூல்களையும் அருளியதாகத் தகவல்கள் உண்டு.  இவர் கந்தர் சஷ்டி கவசம் பாடியது சென்னிமலையில் என்று அந்த ஊர் தலபுராணம் விவரிக்கிறது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவரான வல்லூர்த் தேவராசரும், ஸ்ரீலஸ்ரீ தேவராய ஸ்வாமிகளும் ஒருவரே என்றும் சிலர் கூறுவர். இவர் குறித்த வேறு விவரங்கள் அறிந்த வாசகர்கள் அவற்றையும்  'ஹலோ சக்தி’யில் பகிர்ந்துகொள்ளலாம்.

? ஸ்ரீராமன் நான்கு கரங்களுடன் அருளும் திருத்தலம் எது?

- சி.கோபிநாத், மதுரை-2

திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள திருத்தலம் பொன்விளைந்த களத்தூர். இங்குள்ள ஸ்ரீராமர் ஆலயத்தில் நான்கு திருக்கரங் களுடன் அருளும் ஸ்ரீராமனைத் தரிசிக்கலாம். படிக்காசுப் புலவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார், புகழேந்தி ஆகியோரை உலகுக்குக் தந்த பெருமையும் இந்த ஊருக்கு உண்டு.

அடுத்த கட்டுரைக்கு