மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! 28

ஞானமும் யோகமும் தருவாள் ஸ்ரீயோக ஞான சரஸ்வதி! வி.ராம்ஜி

''காசும் பணமும், வீடும் வாசலுமாக எத்தனை சந்தோஷங்கள் வாழ்வில் இருந்தாலும், அவை எல்லாவற்றையும்விட முக்கியமான சந்தோஷம்... குழந்தைச் செல்வம்தான்! ஒரு வீட்டில் குழந்தை இருந்துவிட்டால், அந்த வீட்டுத் தலைவனுக்கு எத்தனை துயரங்கள் வந்தாலும், அந்தக் குழந்தையின் முகம் பார்த்த மாத்திரத்தில் அத்தனையும் பறந்துவிடும்.

குழந்தைகளே ஒரு சந்தோஷம் என்றால், அவர்கள் புத்திசாலிக் குழந்தைகளாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் விளங்கிவிட்டால், பெற்றோர்களின் சந்தோஷத்துக்கும் பெருமைக்கும் கேட்கவேண்டுமா?

திருச்சி-  நாமக்கல் சாலையில், நொச்சியத்துக்கு அருகில் உள்ள துடையூர் எனும் தலத்துக்கு ஒருமுறை வாருங்கள். அங்கே, காவிரியிலிருந்து கிளை பிரிந்திருக்கிற கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் கோயிலுக்கு ஒருமுறையேனும் வந்து தரிசியுங்கள்.

மிக அற்புதமான ஆலயம்! புத்திக்குள் மோசமான எண்ணங்கள் விஷமெனப் பரவி வியாபித்து, துர்குணங்களைச் செய்வதற்குத் தூண்டுகிற, கெடுதலான காரியங்களில் ஈடுபடுத்திச் சிக்க வைக்கிற நிலையில் இருந்து நம்மை மீட்டெடுத்து, நம்மைச் சுற்றிலும் எப்போதும் நல்ல அதிர்வுகளை உண்டு பண்ணி, மங்கல காரியங்களை நிகழ்த்திக் காட்டியருள்வார் ஸ்ரீவிஷமங்களேஸ்வரர்.

இதோ... எந்தன் தெய்வம்! 28

ஒருகாலத்தில் கடம்பவனமாகத் திகழ்ந்த இடம் இது. கடம்பவனத்து மகாதேவன் என்றும், கடம்பந்துறை சிவனார் என்றும் போற்றப்பட்டிருக்கிறார் இந்தத் தலத்து இறைவன் என்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள். காண்பதற்கு அரிதாக இங்கே சிவனாரின்  கோஷ்டத்தில், ஸ்ரீயோக ஞான சரஸ்வதி அற்புதமாகக் காட்சி தருகிறாள்.

தன்னை நாடி வரும் குழந்தைகளுக்கு, மாணவ மாணவிகளுக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறாள் ஸ்ரீசரஸ்வதி தேவி. வியாழக்கிழமைகளில் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து, தேனபிஷேகம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், புத்தியில் தெளிவு ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

இன்றைக்கு ஒற்றைப் பிராகாரத்துடன் காட்சி தரும் இந்த ஆலயம், ஒருகாலத்தில் பஞ்சப் பிராகாரங்களுடன், அதாவது ஐந்து சுற்றுப் பிராகாரங்கள் கொண்ட பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்ந்ததாம். அப்போது, வேறொரு பிராகாரத்தில் ஸ்ரீசரஸ்வதிதேவி தனிச்சந்நிதியில் இருந்திருக்கலாம் என்றும், பின்னர் நடைபெற்ற திருப்பணியின்போது, ஒரே பிராகாரமாகச் சுருங்கிவிட்ட நிலையில், ஞானமும் யோகமும் தருகிற ஸ்ரீசரஸ்வதி தேவியின் விக்கிரகத் திருமேனியை சிவனாரின் கோஷ்டத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

குருவுக்கு உகந்த வியாழக்கிழமை நாளில் இங்கு வந்து, ஸ்ரீயோக ஞான சரஸ்வதிதேவியை 11 முறை பிராகார வலம் வந்து வேண்டிக் கொண்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; புத்தியில் தெளிவு பிறக்கும்; குழப்பங்கள் யாவும் நீங்கும்; மந்த நிலை மாறும்; படிப்பு, இசை, நடனம் என சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றுத் திகழலாம் என்று பூரிப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

''முன்பெல்லாம் வியாழக்கிழமைகளில் வந்து, ஸ்ரீசரஸ்வதி தேவிக்குத் தேனபிஷேகம் செய்யச் சொல்வார்கள் பக்தர்கள். இப்போது அந்தப் பக்கம் மதுரை, திருநெல்வேலி இந்தப் பக்கம் ஈரோடு, சேலம், முதலான ஊர்களில் இருந்தும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் எனப் பல ஊர்களில் இருந்தும் ஏராளமான அன்பர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து தரிசிக்கிறார்கள்'' என்கிறார் கோயிலின் ஹரிஹர குருக்கள். ஒளரவ மகரிஷி  கடம்ப வனத்தில் தங்கி, பல காலம் தவமிருந்து, சிவ பூஜை செய்து வழிபட்ட தலம் இது. ஆதிசங்கரர் இந்தத் தலத்து சிவனாரையும் ஸ்ரீமங்கள நாயகியையும் வழிபட்டிருக்கிறார்; தேவலோக நடன

இதோ... எந்தன் தெய்வம்! 28

மங்கை ஊர்வசி, தன் சாபம் தீர இங்கு வந்து தவமிருந்து, தினமும் மனோரஞ்சித மலர்களால் சிவ-பார்வதியை அலங்கரித்து, பூஜை செய்து, விமோசனம் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம்.

''திருப்பதி சென்று வந்தால் ஒரு திருப்பம் நேரும் என்பதுபோல், துடையூர் தலத்துக்கு வந்து, கோயில் வாசலில் நம் பாதம் பட்டாலே போதும்... நம் மனோபலத்தைப் பெருக்கி, புத்தியில் தெளிவை உண்டு பண்ணிவிடுவாள் ஸ்ரீசரஸ்வதி தேவி'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் ஹரிஹர குருக்கள்.

திருக்கரத்தில் வீணையுடன் திகழும் ஸ்ரீயோக ஞான சரஸ்வதி தேவிக்கு, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி வழிபடுங்கள்; வெண் தாமரை மலர்கள் சூட்டி, வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு அந்தப் பிரசாதத்தை விநியோகித்து மகிழுங்கள்; தேனபிஷேம் செய்து, அந்தத் தேனை தினமும் உங்கள் குழந்தைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுங்கள். இப்படி அனுதினமும் கொடுத்து வர... புத்தியிலும் பேச்சிலும் தெளிவும் கனிவும் பிறக்கும். உங்களின் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ஒரு குழந்தை, கலை மற்றும் கல்வியில் மேன்மையுடன் திகழ்வதுமட்டும்தான் உண்மையான  சொத்து!

உங்கள் குழந்தைகளுடன் துடையூருக்கு ஒருமுறை வாருங்கள். ஞானமும் யோகமும் பெறுவது நிச்சயம்!

 - வேண்டுவோம்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்