Published:Updated:

'கோடை மழை பெய்யட்டும்!’

திருத்துறைப்பூண்டி வாசகி வேண்டுதல்

'கோடை மழை பெய்யட்டும்!’

திருத்துறைப்பூண்டி வாசகி வேண்டுதல்

Published:Updated:
'கோடை மழை பெய்யட்டும்!’

''விளக்கில் இருக்கும் தீபச் சுடரைப் பாருங்கள். எந்த ஆர்ப்பாட்டமோ, கர்வமோ இல்லாமல், சலனமே காட்டாமல் எரிந்து, ஒளி தந்துகொண்டிருக்கிறது. பெண்களுக்கே உண்டான குணம் இது. இப்படியான குணம் கொண்ட பெண்கள் இருக்கும் வீடு, செழித்து வளரும். அதனால்தான், வீட்டுக்கு வரும் மருமகளை 'விளக்கேற்ற வந்த மகாலட்சுமி’ என்று போற்றுகிறோம்...'' - கண் மருத்துவர் பா.சு.மணி பேசப் பேச, உற்சாகத்துடன் கைதட்டி ஆமோதித்தார்கள், பெண்கள்.

சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, திருத்துறைப்பூண்டி ஸ்ரீமானைக்கால் மாரியம்மன் கோயிலில், கடந்த 8.4.14 அன்று நடைபெற்றது. சக்தி விகடனின் 136-வது விளக்கு பூஜை இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திருத்துறைப்பூண்டி ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா, விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் விளக்கு பூஜைக்கு பெண்கள் வருவார்களா என்கிற சந்தேகத்தையெல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டார்கள் திருத்துறைப்பூண்டி பெண்கள்'' என்று டாக்டர் பா.சு.மணி சொல்லி முடிக்க, பலமாகக் கரவொலி எழுப்பி ஆரவாரித்தார்கள் வாசகிகள்.

''இந்தப் பக்கம் திருவாரூர், அந்தப் பக்கம் நாகப்பட்டினம், வேதாரண்யம்னு பெரிய பெரிய ஊர்களையெல்லாம் விட்டுட்டு, எங்களோட சின்ன ஊர்லயும் வந்து விமரிசையா விளக்கு பூஜை நடத்திய சக்தி விகடனுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை'' என்று நெகிழ்ந்து சொன்னார் ராசாத்தி. அக்கா, அண்ணி, தம்பி மனைவி என உறவுகள் சகிதமாக பூஜைக்கு வந்திருந்தார் இவர்.

''என் பொண்ணுக்கு டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசை. அந்த ஆசை நிறைவேறணும். மெடிக்கல் சீட் கிடைக்கணும். மத்தபடி,  கோடைல நல்ல மழை பெய்யணும். பூமியெல்லாம் குளிரணும்'' என்றார் உமா.

'கோடை மழை பெய்யட்டும்!’

''பூஜைக்கு முன்னாடி பேசிய டாக்டரின் சொற்பொழிவு, பூஜை நடத்திய விதம் எல்லாமே ஆத்மார்த்தமா இருந்தது. ராமேஸ்வரத்துல முன்னோர் ஆராதனைக்காக 51 தம்பதிகளை சக்தி விகடன் அழைச்சிட்டுப் போயிருந்துதே... அதுல நானும் என் கணவரும்கூட உண்டு. இப்படி வாசகர்களின் நலனுக்காகப் பல புண்ணிய காரியங்கள் செஞ்சு, எங்க மனசுல நீங்காத இடம் பிடிச்சிருக்கிற சக்தி விகடனுக்கு எப்பவுமே தாய்க்குலத்தின் அன்பும் ஆதரவும் உண்டு!'' என்று நெகிழ்ச்சியில் கண்கள் கசிய, மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் ரமா சுப்ரமணியன்.

மனம் கனிந்து, நம் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றித் தருவாள் ஸ்ரீமானைக்கால் மாரியம்மன்.

- வி.ராம்ஜி, படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism