நினைத்ததை நிறைவேற்றும் புற்று வழிபாடு! வி.ராம்ஜி
வாழ்க்கையில் நல்லதொரு திருப்புமுனை அமையவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறோம். தடதடவென ஓடிக் கொண்டிருக்கிற வாழ்க்கைச் சக்கரத்தில், ஏற்றமும் இறக்கமுமான பயணத்தில் நல்லதொரு திருப்பம் நிகழ்ந்து, எல்லா நலமும் வளமும் கிடைத்து நிம்மதியாகவும் நிறைவாகவும் இருக்கமாட்டோமா என்றுதான் அனைவருமே ஏங்குகிறோம்; கவலைப்படுகிறோம்; கண்ணீர் விடுகிறோம்; இறைவனின் சந்நிதியில் மனமுருகி, மன்றாடிப் பிரார்த்தனை செய்கிறோம்.
துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை அப்படிச் சரணடைந்து, அவர் சந்நிதியே கதி என்று வாழ்ந்து வரும் பிரசன்னம் எனும் அன்பர், தற்போது குறையொன்றுமில்லாத நிறை வாழ்வு வாழ்ந்து வருவதாகச் சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார். கொள்ளிடக் கரையையொட்டி அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில்.
''என் வாழ்வில் இந்தக் கோயிலை மறக்கவே முடியாது. இது வேண்டும், அதைக் கொடு என்று கேட்டதெல்லாம் போய், இந்தக் கோயிலுக்கு வந்து, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு எதிரில் சற்று நேரம் உட்கார்ந்து எழுந்திருந்தாலே, அதுவே போதுமானதாக இருக்கிறது; மனசே அமைதியாகிவிடுகிறது. ஸ்வாமியிடம் எதுவும் கேட்கத் தோன்றுவதே இல்லை. வந்து தரிசித்தாலே, நமக்கு என்ன தேவையோ அதையெல்லாம் தந்துவிடும் கருணாமூர்த்தி அல்லவா இறைவன்! அப்படியிருக்க, கேட்டுப் பெற வேண்டிய அவசியமே இல்லையே?'' என்று சிலாகித்துச் சொல்கிறார் பிரசன்னம்.

கல்லால மரத்தடியில், சனகாதி முனிவர்கள் சூழ அமர்ந்த நிலையில் உபதேசித்தபடி காட்சி தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, ஆலயங்களில் தரிசித்திருப்போம். இங்கே, கையில் வீணையுடன் நின்ற திருக்கோலத்தில், காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இவரை 'வீணாதர தட்சிணாமூர்த்தி’ என்கிறார்கள் பக்தர்கள்.
தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரசேகரன் என்கிற அன்பர் உற்சாகத்துடன் பேசினார்... ''என் பையன் ஜகதீஷ், படிப்புல கெட்டி! ஸ்ரீதட்சிணாமூர்த்தியோட பரிபூரண அருள் அவனுக்குக் கிடைச்சதுதான், கல்வியில் அவன் ஜெயிச்சதுக்குக் காரணம்னு சொல்வேன். முதுகலைப் பட்டதாரியான பையனுக்கு நல்ல வேலை கிடைக்கலையேங்கிற குறையைத் தவிர, வேற எந்தக் கவலையும் இல்லை எங்களுக்கு.
அப்பதான், வியாழக்கிழமைகள்ல இங்கு வந்து ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தியை தரிசனம் பண்ற பழக்கம் ஏற்பட்டுது. 'என் பையனுக்குக் கல்வி ஞானத்தைக் கொடுத்தியே... கூடவே, ஒரு நல்ல உத்தியோகத்தையும் கொடுத்து, அவன் வாழ்க்கைல ஒளியேத்தக் கூடாதா?’னு மனசார வேண்டிக்கிட்டேன். 'திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ன்னு சொல்லுவாங்க. 'திக்கு திசை தெரியாம இருக்கற என் பையனுக்கு நல்ல திசையைக் காட்டுப்பா!’னு பிரார்த்தனை பண்ணினேன். 'இங்கே கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற புற்றுக் கோயிலுக்கு விளக்கேத்தி வழிபட்டீங்கன்னா, சீக்கிரமே நல்லது நடக்கும்’னு ஒருநாள் சொன்னார் கோயில் குருக்கள். அதன்படி செஞ்சேன். அடுத்த நாலே மாசத்துல நல்லது நடந்துது'' என்று சிலிர்த்துச் சொல்கிறார் சந்திரசேகரன்.
கோயிலுக்கு முன்னதாகவே உள்ளது புற்று. இதனை, விஷ்ணு அம்சம் எனப் போற்றுகின்றனர். காளிங்க நாகதேவதை 'சங்கமவல்லி நாகதேவதை’ எனும் திருநாமத்துடன் இங்கு அருள்பாலிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திர நாளில் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், ராகு- கேது தோஷம் நீங்கி, நினைத்த காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
''மாதந்தோறும் வருகிற திருவோணம் நட்சத்திர நாள்ல, புற்று வழிபாடு இங்கே பிரசித்தம்! பையனின் வேலைக்காக ஸ்ரீதட்சிணாமூர்த்திகிட்ட வேண்டிக்கிட்டேன். பலன் கிடைச்சுது. அதேபோல, எம் பொண்ணு சாந்தி, பி.எஸ்ஸி., பி.எட் படிச்சு, அடுத்து எம்.ஏ., எம்.ஃபில்லையும் முடிச்சிட்டு, மதுரைல கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்துட்டிருந்தா.
திடீர்னு அவளுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டுட்டாங்க. கொச்சியிலேருந்து கப்பல்ல 24 மணி நேரம் பயணம் பண்ணணும். இங்கே, குழந்தைங்க ரெண்டு பேரும் அம்மா இல்லாம தவிச்சுப் போயிட்டாங்க.

நாங்க திருச்சில இருக்கோம்; பேரக் குழந்தைங்க மதுரைல படிக்கிறாங்க; பொண்ணு கொச்சிக்குப் பக்கத்துல வேலை பார்க்கறா. இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைல இருந்தா, எப்படி நிம்மதியா இருக்கமுடியும்? திருவோணம் நட்சத்திர நாள்ல, இங்கே வந்து, புற்றுக்கு விளக்கேத்தி, சந்தனம் குங்குமம் வைச்சு, 11 முறை வலம் வந்து வேண்டிக்கிட்டேன். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாசமும் திருவோணம் நட்சத்திரத்துல இங்கே வந்து, என் பொண்ணுக்காகவும் அவளுக்கு மதுரைக்கே மறுபடி டிரான்ஸ்ஃபர் கிடைக்கணுங்கறதுக்காகவும், மகளும் பேத்திகளுமா சந்தோஷமா இருக்கணுங்கறதுக்காகவும் புற்று வழிபாடு பண்றதைத் தொடர்ந்தேன்.
நாலாவது மாசம், திருவோணத்தன்னிக்குப் புற்றுக்குப் பாலூற்றி, சந்தனம் குங்குமம் வைச்சு, அர்ச்சனை பண்ணி, வலம் வந்து வேண்டிக்கிட்டு வந்த அஞ்சாம் நாள்... என் பொண்ணு சாந்திக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சுது. அதுவும் எங்கே தெரியுமா? மதுரையில இல்லாம, கடவுள் ஒரு படி மேலேயே போய், நான் இருக்கிற திருச்சிக்கே அவளுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கும்படி பண்ணிட்டார். இப்ப, மகளோடும் பேத்திகளோடும் இந்த வயசுல இன்னும் உற்சாகமாவும் தெம்பாவும் இருக்கேன்'' என்று கண்ணீர் மல்க, அதே நேரம் உற்சாகத்துடன் விவரிக்கிறார் சந்திரசேகரன்.
''பொதுவாக சிவாலயத்தில் புற்று வழிபாடு என்பதெல்லாம் இருக்காது. ஆனால், இங்கே அமைந்திருப்பது சிறப்பு! குறிப்பாக, அந்தப் புற்று விஷ்ணு அம்சமாக இருந்து அருள்பாலிப்பது மிகுந்த பலன்களைத் தரக்கூடியது'' என்கிறார் ஹரி குருக்கள்.
''திருவோணம் நட்சத்திரத்தன்னிக்கி, காலைலேருந்தே கூட்டம் வர ஆரம்பிச்சிடும். கல்யாணம் நடக்கணுங்கறதுக்காகவும், கணவன்- மனைவி ஒத்துமையா வாழணுங்கறதுக்காகவும், எதிரிகளின் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகணுங்கறதுக் காகவும், வீட்டில் எப்பவும் சுபிட்சம் நிலவணும்கறதுக்காகவும் எத்தனையோ பக்தர்கள், எங்கிருந்தெல்லாமோ வந்து புற்று வழிபாடு பண்ணி வேண்டிகிட்டுப் போறாங்க. அவங்களுக்கெல்லாம் சீக்கிரமே நல்லது நடந்திருக்கு'' என்கிறார் ஹரி குருக்கள்.
திருவோண நட்சத்திர நாளில் இங்கு வந்து, புற்றுக்குப் பால் வார்த்து, அர்ச்சித்து, சந்தனம் குங்குமமிட்டு மனதார வேண்டுங்கள். ராகு- கேது தோஷங்கள் விலகிவிடும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். எல்லா மங்கல காரியங்களும் இல்லத்தில் தடையின்றி அரங்கேறும்.
ஸ்ரீவிஷமங்களேஸ்வரர், ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீயோக ஞான சரஸ்வதி, ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கும் இந்தத் தலத்தில் புற்று வழிபாடு போலவே இன்னொரு வழிபாடும் அரிதானது. அது... வாதக்கல் முனி வழிபாடு.
அதென்ன, வாதக்கல் முனி வழிபாடு?!
- வேண்டுவோம்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்