Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

தியாகராஜ ராமாயணம்!

திருவையாற்றில் வசித்த மகான் தியாகராஜர், அதே சோழதேசத்தைச் சேர்ந்த கம்பன் படைத்த ராமாயணத்தை வாசித்திருப்பாரா?

நிச்சயம் படித்திருப்பார் என்பதற்கு ஓர் ஆதாரம் உண்டு.

கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஒரு காட்சி.

ராம-ராவண யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் 'இன்று போய் போருக்கு நாளை வா’ என்கிறான் ராமன். இதை விளக்கும் கம்பராமாயண பாடல்...

ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை யாயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளங்கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடைவள்ளல்

(யுத்த காண்டம் - 586)

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

இந்த பாடலை விவரிக்கும் ஆன்றோர்கள், 'நீ செய்த தவறுகளை மறந்து, மன்னிப்புக் கேட்டு, மனம் திருந்தி என்னுடன் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டால், என்னுடைய அயோத்தி ராஜ்ஜியத்தையே உனக்கு கொடுத்துவிட்டு நான் வனத்திலேயே தங்கிக் கொள்கிறேன்...’ என்று ஸ்ரீராமன், ராவணனுக்கு அருள் செய்ததாக அவனது கருணையை- வள்ளல் தன்மையைச் சிலாகித்துச் சொல்வார்கள்.

இந்த இடத்தில் ஒன்றை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். பொன் - பொருள் தானம் செய்வது மட்டுமே வள்ளல் தன்மை என்பதில்லை. தவறு களை மன்னிப்பதும் மறப்பதுவும், தேவையான நேரத்தில் ஒருவரது தேவையைப் பூர்த்தி செய்யும் குணமும் அதில் அடங்கும். ஸ்ரீராமனின் இந்தக் கல்யாண குணத்தை கம்ப ராமாயனம் மிக அற்புதமாகச் சொல்கிறது.

தியாகபிரம்மமும், 'ஸரஸ ஸாம தான பேத தண்ட’ என்ற பிரபலமான காபி நாராயணி ராகப் பாடலில், 'ஸதமுக நயோத்ய நிச்சேநண்டிவி’ எனும் வரியில், 'நிரந்தரமாக அயோத்தியா ராஜ்ஜியத்தை உனக்கு அளிக்கிறேன் என்று ராவணனிடம் கூறினாயே...’ என் கிறார். 'தீயவனான ராவணனுக்கே இவ் வாறு அருள்செய்த நீ, எனக்கு எவ்விதம் அருள்செய்யப் போகிறாய்?’ என்று அவர் பிரார்த்திக்கும் பொருளில் திகழ்கிறது இந்தப் பாடல் வரி.

(கிருஷ்ண கான சபாவில் டி.என். சேஷகோபாலன் நிகழ்த்திய 'தியாக ராஜ ராமாயணம்’ ஹரி கதை தொடரில் கேட்டது)

- வெ.ஸ்ரீனிவாசன், சென்னை-4

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

கார்த்திகை புராணத்தில் ஒரு தகவல்!

ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம்தானே

கார்த்திகை புராணத்தில் வரும் பாடல் இது.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கார்த்திகை மாதம்- சுக்ல பட்சத்தில்... அரசு, ஆல், வேம்பு ஆகிய மரங்களில் ஒவ்வொன்றும், விளா, வில்வம், நெல்லி ஆகிய மரங்கள் மும்மூன்றும், பத்து புளிய மரங்கள், மாமரம் ஐந்து, தென்னை ஐந்து... இப்படி ஒன்பது வகை மரங்களையும் நட்டு வளர்த்தால், அவருக்கு நரகம் என்பதே இல்லையாம்.

மரங்களின் மகத்துவத்தையும், அவசியத்தையும், அவற்றை நட்டு வளர்ப்பதற்கு உரிய காலத்தையும் நம் முன்னோர்கள் எவ்வளவு அழகாக சொல்லிவைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? உலகெங்கும் மழை வளம் சிறக்கவும், சுபிட்சம் தழைக்கவும் இதுபோன்ற கருத்துள்ள பாடல்களை ஆலயங்களில் எழுதிவைத்து செயல்படுத்தலாமே.

- ஆர். சந்திரிகா, சத்தியமங்கலம்

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

வீடு வரம் தரும் சிங்கபெருமாள்!

டந்த இதழில் சிங்கபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் குறித்த தகவலும் படங்களும் மிக அருமை. அட்டையிலும் அந்தக் கோயிலின் ஸ்ரீபிரதோஷ நரசிம்மரின் படம் வெகு அழகு!

சிங்கபெருமாள் கோயில் குறித்த ஒரு விஷயத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தக் கோயிலில் பிராகார வலம் வரும் வழியில் செங்கற்கள் அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் சில செங்கற்களை எடுத்து, சிறிய வீடு போன்று அடுக்கி வைத்து, 'சொந்தமாக வீடு வாங்க  அருள் செய்யவேண்டும் ஸ்வாமி’ என்று ஸ்ரீநரசிம்மரைப் பிரார்த்தித்துக் கொண்டால், விரைவிலேயே வீடு வாங்கும் யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனது சகோதரி ஒருத்தி இப்படிப் பிரார்த்தனை செய்துவிட்டு வந்தாள். அடுத்த ஓரிரு மாதங்களிலேயே சொந்தவீட்டுக்காரியாகிவிட்டாள். வாசக நண்பர்களும் சிங்கபெருமாளை வேண்டி வணங்கி வரம்பெற்று வரலாம்.

- சி.சோமசுந்தரி, திருவண்ணாமலை

சிற்ப அற்புதம்!

பொள்ளாச்சி அருள்மிகு சுப்ரமணிய ஸ்வாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், அந்த ஆலயத்தின் மண்டப விதானத்தில் தொங்கும் இந்தச் சங்கிலியைப் பார்த்து ரசிக்கலாம்; வியக்கலாம்! கல்லிலே செய்த இந்தச் சங்கிலியின் வளையங்கள் தனித் தனியே அசையும்- காற்றில் ஆடும். சிற்ப அற்புதம்!

- கவிதா ராமஜெயம்

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

கேட்கிறோம்...

ஸ்ரீஜீரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சியில் சந்நியாசம் பெற்றுக் கொண்டவர். ஆனால், பீடாதிபதியாக பதவி ஏற்கவில்லை. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீகோவிந்த தீட்சிதரின் குரு இவர்.

ஸ்ரீஜீரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.தெரிந்தவர்கள் யாராவது தகவல் தந்து உதவுங்கள்.

- சுந்தரராஜன், சென்னை

னக்குச் சொந்த ஊர் வேலூர் மாவட்டம்- காவேரிப்பாக்கம். எங்கள் குல தெய்வம் 'ஏரி  காத்த அம்மன்’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அந்த அம்மனுக்கான கோயில் எங்கு உள்ளது, எப்படிச் செல்வது என்று எந்தத் தகவலும் தெரியவில்லை. எங்கள் குலதெய்வக் கோயில் பற்றி அறிந்த வாசக நண்பர்கள், தகவல் தந்து உதவுங்களேன்.

- எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.