Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

? சக்திவிகடன் 11-ம் ஆண்டு சிறப்பிதழ் ஆன்மிகப் பொக்கிஷமாகத் திகழ்ந்தது. அதிலும் அட்டைப்பட ஓவியம் மிக அற்புதம். கண்களில் ஒற்றிக்கொண்டோம். எதையோ சூட்சுமமாக உணர்த்தும் அந்த ஓவியத்தின் தாத்பரியத்தை விளக்கினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

- எம். சிவானந்தி, மதுரை-2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாசகியின் கருத்தை ஓவியர் மணியம்செல்வன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர் தந்த விளக்கம் இங்கே...

சிவபெருமானை ஆனந்தக்கூத்தன் எனப் போற்றுவார்கள். அவரது ஆடல் ஒட்டுமொத்த மாக பிரபஞ்ச இயக்கத்தை உணர்த்தும். அவர், தம்முடைய திருக்கரங்களில் தாங்கியிருக்கும் முத்திரைகளும் பொருட்களும் ஐந்தொழிலையும் குறிக்கும். அவற்றுள் ஆக்கத்தை- படைப்பை உணர்த்தும் உடுக்கையை, அந்த ஓவியத்தில் பிரதானப்படுத்தியிருக்கிறேன்.

ஒலி ஆக்கும் சக்தி! ஈஸ்வரனின் உடுக்கை ஒலியில் இருந்துதான் பதினான்கு சப்த ஜாலங்கள் தோன்றியதாகச் சொல்வார்கள். அந்த பதினான்கு சப்த ஜாலங்களில் இருந்து தோன்றியதுதான் ஈரேழு பதினான்கு உலகங்கள். இதையே 'சப்த பிரம்மமயி சராசரமயி’ என்பார் ஆதிசங்கரர்!

இப்படி, அனைத்துக்கும் ஆதாரமான ஒலியின் முக்கியத்துவத்தைக் காட்ட வேண்டும் என்ற எனது எண்ணத்தையே வண்ண மாக்கியிருக்கிறேன். ஆக, உற்பத்தியின் துவக்கமான உடுக்கை எனது படைப்புக்கும் உந்துதலாகிவிட்டது.

எல்லாவற்றுக்கும் குருவருளும் திருவருளுமே காரணம். தென்னாடுடைய சிவனுக்கு நன்றி!

? சென்ற இதழ் சக்தி விகடனில் 'சிபாரிசுக் கடிதம்’ எனும் தலைப்பில் அற்புதமான ஒரு பாடலையும், தகவலையும் தந்திருந்தார் பி.என்.பரசுராமன். பாணபத்திரருக்காக இறைவன் தந்த சிபாரிசுக் கடிதம் குறித்து சுவைபட விவரித்திருந்தார். 'திருவிளையாடல்’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமும் இவர்தானே?

- கே.நமசிவாயம், மேலூர்

ஹலோ சக்தி

வாசகரின் இந்தக் கேள்வியை எழுத்தாளர் பி.என்.பரசுராமனிடம் தெரிவித்தோம். அதற்கு அவர் தந்த விளக்கம் இங்கே...

''வாசகர் சொல்வது மிகவும் சரி. அதே பாணபத்திரர்தான் இவர். இந்த அடியவருக்காக இறைவன் விறகு சுமந்ததோடு, பாடவும் செய்து ஹேமநாத பாகவதரை கர்வபங்கம் செய்தருளிய திருவிளையாடலை, மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள் அந்தத் திரைப்படத்தில்.

சிபாரிசுக் கடிதம், பாட்டு பாடியது மட்டுமல்ல... இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் உண்டு.

அனுதினமும் தனது சந்நிதிக்கு வந்து பாணபத்திரர் பாடும் பாடல்களைக் கேட்பதில் அவ்வளவு இஷ்டம் சிவனாருக்கு. தன் அன்புக்கு உரிய அந்த அடியவர் தரையில் அமர்ந்து பாடினால், தரையின் குளிர்ச்சியால் அவரது உடம்பு பாதிக்குமே என்று, பலகை ஒன்றை தந்தருள, அந்தப் பலகையில் அமர்ந்து பாணபத்திரர் இறைவனைப் பாடியதாகக் குறிப்பிடுகிறது திருவிளையாடற் புராணம்.

? 'முதல் வணக்கம் முதல்வனுக்கே’ என்ற தலைப்பில், விசேஷமான பிள்ளையார்களையும், அவரது திருப்பெயர் காரணங்களையும் சொல்லும் தொடர் சக்தி விகடனில் வெளியானது தெரியும். சில அத்தியாயங்களுக்குப் பிறகே படிக்க நேரிட்டது.

பிள்ளையார் பக்தரான என் பெரியப்பா, 'சாம கானம் கேட்ட பிள்ளையார்’ பற்றி ஒரு கதை சொன்னதாக ஞாபகம். இந்தப் பிள்ளையார் குறித்த தகவல் அந்தத் தொடரில் இடம்பெற்றதா? மீண்டும் வெளியிட்டால் உதவியாக இருக்கும்.

- சி.இசக்கியப்பன், செகந்திராபாத்

திருச்சியில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலும், லால்குடி யில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது அன்பில் எனும் திருத்தலம். அன்பில் ஆலந்துறை என்பது புராணப்பெயர்.

இங்கே, ஸ்ரீசௌந்திரநாயகி சமேத ஸ்ரீசத்திய வாகீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார் செவிசாய்த்த விநாயகர். கொள்ளிடக் கரைக்கு வந்த திருஞானசம்பந்தப்பெருமான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், நதியின் தென்கரையில் இருந்தபடி இந்தத் தலத்தைப் பாடியருளினாராம். அந்தப் பாடலைச் செவி மடுத்ததால் பிள்ளையாருக்கு இப்படியொரு திருப்பெயர் வந்ததாக செவிவழித் தகவல் உண்டு.

ஹலோ சக்தி

பராந்தகச் சோழர் அக்னிஹோத்ரிகள் நூற்றியெட்டு பேரை இங்கு குடியேற்றி வேத பாராயணம் செய்யச் சொன்னதாகவும், ஜைமினி சாம வேதத்தைச் சேர்ந்த இவர்களது சாம கானத்தையும் செவிமடுத்தவர் என்பதால் சாமகானம் கேட்ட பிள்ளையார் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். நமது பிரச்னைகளையும் செவிமடுத்து தீர்த்துவைப்பவர் என்பதால், இவரை மனமுருகி வழிபட்டு வேண்டுதல் வைக்கிறார்கள் பக்தர்கள்.

? 'சிவன் சொத்து குலம் நாசம்’ என்கிறார்கள். சிவன் சொத்து என்று குறிப்பிட்டுச் சொல்வதன் அர்த்தம் என்ன?

- எம். ராமநாதன், கும்பகோணம்

இதே கேள்விக்கு ஏற்கெனவே சேஷாத்ரி நாத சாஸ்திரிகள் பதில் அளித்திருக்கிறார்.

''தியாகத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வடிவம் சிவலிங்கம்; பக்தர்களுக்கு பற்றற்ற நிலையை ஊட்டுவது. அவரிடம் வருபவன் பற்றற்று இருக்கவேண்டும். அவரின் அடியார்களுக்கு பற்று மிகுதியால் பொருளைக் கவரும் எண்ணம் வரக்கூடாது. அப்படி வந்தால் குலமே அழியும் எச்சரிக்கையாக அந்த வாக்கியத்தை எடுத்துக் கொள்ளலாம். ஈட்டிய பொருளை தேவைப்படுபவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது நல்லறம். தன்னிடம் உள்ள அத்தனையையும் பிறருக்கு அளிப்பவன் ஈசன். அவனது பொருளைக் களவாடுவது பாவம் என்பதால் அந்தச் சொற்றொடர் அர்த்தம் மிகுந்ததாகத் திகழ்கிறது.

மற்றபடி, சிவன் கோயில் என்றில்லை எந்தக் கோயிலின் சொத்தை அபகரித்தாலும் குலம் நாசம்தான்! தவறு செய்த மனம் தவறான வழியில் சென்று குலநாசத்தைச் சந்திக்கும்.''