Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

Published:Updated:
சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

ராசித் தூண்கள்!

கர்நாடக மாநிலம், மங்களூர் அருகில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதாதேவி திருக்கோயில். இங்கே கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு நுழைவாயில் பகுதிகளில் சிற்பக்கலையின் சிறப்பைக் காணலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்ப்பக்கிரகத்தின் முன் 12 ராசிகளுக்கும் உரிய அதிபதிகளின்  திருவுருவங்கள் தாங்கிய 12 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. அந்தந்த ராசிக்கு உரிய மாதத்தில், அந்தந்த ராசிக்கான தூணில் மட்டும் சூரிய வெளிச்சம் விழுமாறு இதை அமைத்திருப்பது விசேஷம்.

இந்த மண்டப விதானத்தில் உள்ள வட்டமும், அதிலுள்ள நான்கு பறவைகளும் சிற்ப அழகு! அம்பிகை சாரதாவைத் தரிசிக்க சிருங்கேரிக்குச் செல்லும் பக்தர்கள், கோயிலின் இதுபோன்ற சிற்பச் சிறப்புகளையும் அவசியம் ரசித்து வாருங்கள்.

- ஆ.யாழினி பர்வதம், சென்னை-78

பிணி தீர்க்கும் சந்தனம்...

திருச்செந்தூர் இலைவிபூதி போன்று திருத்தணியிலும் ஒரு சிறப்பு உண்டு. அது, சந்தனப் பிரசாதம். இங்கே அருள்பாலிக்கும்  ஸ்ரீமுருகப்பெருமானுக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனத்தைப் பூசுவதில்லை. முருகக்கடவுளுக்கு இந்திரன் காணிக்கையாகத் தந்த சந்தனக் கல்லில் அரைக்கப்படும் சந்தனத்தையே சாத்துகிறார்கள். இந்தச் சந்தனம் பக்தர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

இதை வாங்கிச் செல்லும் பக்தர்கள், இதை நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்துக் குடிக்கிறார்கள். இதனால் பல நோய்களும், குறிப்பாக கண் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. விழாக் காலங்களில் மட்டுமே இந்த அரிய அற்புதச் சந்தனம் கிடைக்கும்.

- மா.பா.சங்கர நாராயணன், திருவாரூர்

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

விக்கிரகம்... விசேஷம்..!

கேரள மாநிலம், ஆல்வாய் என்ற ஊருக்கு மேற்கில், பரூரில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது 'இளங்குன்ன புழா’ என்ற சுப்ரமணியர் திருத்தலம். இதை 'கேரளத்து திருச்செந்தூர்’ என்கிறார்கள்.

இங்குள்ள ஸ்வாமி விக்கிரகம் இடுப்புக்குக் கீழே பின்னமாகி இருந்தது. அதை எப்படிப் பிரதிஷ்டை செய்வது என்று பிரச்னம் பார்த்தபோது, இடுப்பு வரைக்கும் கற்சிலையாகவும், அதற்குக் கீழ் பஞ்சலோகமாகவும் அமைத்துப் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவானதாம். அதன்படியே பிரதிஷ்டை செய்துள்ளனர். பீடத்துடன் சேர்த்து மூல விக்கிரகம் சுமார் ஐந்தரை அடி உயரம். கீழ் வலது கரத்தால் அபயஹஸ்தம் காட்டி,  கீழ் இடது கரத்தை இடுப்பில் வைத்து, மேலிரு கரங்களில் சக்தி ஆயுதமும் ஜபமாலையும் ஏந்தி, நான்கு திருக்கரங்களுடன் அழகுக் கோலம் காட்டுகிறார் முருகர்.

இரண்டு நிலைகள் கொண்ட விமானத்துடன் கூடிய கருவறையின் அடித்தளம் கல் வேலைப்பாடாகவும், அதற்கு மேல் சுதை வேலைப்பாட்டுடனும் திகழ்கிறது. மேல் மாடம் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. ஆக, கோயிலும் விசேஷம்; ஸ்வாமியும் விசேஷம்!

- முத்து.இரத்தினம், சத்தியமங்கலம்

கேட்கிறோம்...

கோவை - அவினாசியில் உள்ள பெரிய தேர், 1990-ல் தீயினால் எரிந்துவிட்டது. சிற்பக்களஞ்சியமாகத் திகழ்ந்த தேர் அது. நான் பார்த்துப் பார்த்து ரசித்து நேசித்த அந்தத் தேரின் புகைப்படம் யாரிடமாவது இருந்தால், அனுப்பி உதவுங்களேன்.

மேலும் கோவை- அவினாசியில் அருளும் ஸ்ரீகருணாம்பிகை அம்மனைப் பற்றிய பிள்ளைத்தமிழ், அந்தாதி மற்றும் துதிப்பாடல்கள் இருக்கும் புத்தகங்களும், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் குறித்த தகவல்கள், தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் உள்ள துதிப்பாடல் கொண்ட புத்தகங்களும் தேவை. அவை எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் நன்றியுள்ளவன் ஆவேன்.

- அவினாசி முருகேசன், காரமடை

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சொல்கிறோம்...

சக்தி விகடன் 29.4.14 தேதியிட்ட இதழில், 'சக்தி சபா- கேட்கிறோம்...’ பகுதியில், திருச்சி வாசகர் ரமேஷ் 'சொற்றுணை வேதியன்’ பதிகம் குறித்துக் கேட்டிருந்தார்.

இந்தப் பதிகம் பாடப்பெற்ற திருத்தலம், திருப்பாதிரிப்புலியூர். புறச் சமயம் சார்ந்திருந்து பின் தாய்ச் சமயமான சைவ சமயத்தைச் சார்ந்த திருநாவுக்கரசு நாயனாரை, புறச் சமயத்தவரின் தூண்டுதலால் மஹேந்திரவர்ம பல்லவன் பலவகைகளிலும் துன்புறுத்தினான். சுண்ணாம்புக் காளவாயில் அடைத்தும், யானையைக் கொண்டு இடறச் செய்தும் சிவபெருமானின் அருளால் நாவுக்கரசருக்கு ஒரு துன்பமும் நேரவில்லை. அப்படி ஒருமுறை திருநாவுக்கரசரை பெரியதொரு பாறாங்கல்லுடன் பிணித்துக் கட்டி கடலில் தள்ளும்படியாகச் செய்தான்.அந்த நேரத்தில் நாவுக்கரசர் பாடிய பதிகம்தான்,'சொற்றுணை வேதியன் சோதிவானவன்’ என்று தொடங்கும் பதிகம்.

பலவகைகளில் துன்புறுத்தியும்கூட, சிவபெருமானின் அருளால் திருநாவுக்கரசு நாயனார் எந்த இடையூறும் இல்லாமல் நலமுடன் இருக்கவே சிவபெருமானின் பேரருள் திறம் கண்டு வியந்த மஹேந்திரவர்ம பல்லவன் தான் சார்ந்திருந்த புறச் சமயத்தை விடுத்து சைவ சமயத்தைச் சார்ந்தான் என்பது வரலாறு.

 - லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், சென்னை-33

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சுமங்கலிகள் கவனத்துக்கு...

பெண்கள் தினமும் மஞ்சள் பூசிக் குளிப்பதுடன், நெற்றி யில் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும். திருமணமான பெண்கள் வகிட்டிலும் குங்குமம் இட வேண்டும். ஏனெனில், அங்கு திருமகள் குடியிருக்கிறாள். அதேபோல், சுமங்கலிப் பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவது மங்கலம் தரும். அந்த 'கலகல’ ஒலி குடும்பத்தில் கலகலப்பையும் மகிழ்வையும் அளிக்கும். திருமாங்கல்யம், மூக்குத்தி, தோடு, வளையல், மெட்டி ஆகியன லட்சுமி கடாட்சம் நிறைந்தவை. சுமங்கலிகள் இவற்றில் ஒன்றைக்கூடக் கழற்றக்கூடாது.

- சு.நவீண் தாமு, பொன்னேரி

வாசகர்களே...  ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism