மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 30

இதோ... எந்தன் தெய்வம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இதோ... எந்தன் தெய்வம்! ( வி.ராம்ஜி )

வாத நோய் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்! வி.ராம்ஜி

த்தனை துன்பங்களும் துயரங்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு செயலாற்ற மனோபலம் தேவை. துர்சக்திகளின் ஆட்டத்தால், ஒருவரை துயரங்களும் சோகமும் சூழ்ந்துகொள்கின்றன. அந்த துர்சக்தியை விரட்டுவதற்கும் துயரங்களைத் துடைத்துக் களைவதற்குமான சக்தி கொண்ட தெய்வமாக முனீஸ்வர ஸ்வாமியைச் சொல்வார்கள்.

'நல்லவேளை! தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிற விஷயங்களை நாம் வாழ்வில் பலமுறை சந்தித்திருப்போம். அந்த நிம்மதியை பெறுவதற்கு, கோயிலின் தலைவாசலில் குடியிருக்கிற முனியே காரணம் என்பர் பெரியோர்.

இதோ... எந்தன் தெய்வம்! - 30

திருச்சி- நாமக்கல் சாலையில், சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகிலும், நொச்சியத்துக்கு அருகிலும், குணசீலத்துக்கு முன்னதாகவும் உள்ளது துடையூர் தலம். கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் கோயில், இன்று மிகச் சிறிய கோயிலாகச் சுருங்கியிருக்கிறது என்றும், ஒருகாலத்தில் இது பிரமாண்டமாக அமைந்திருந்த ஆலயம் என்றும் முன்பே சொல்லியிருந்தோம். கோயிலிலிருந்து சுமார் 200 அடி தூரம் வரை, கரையையொட்டியே நடந்து சென்றால், அங்கே தகரக் கொட்டகையுடன் திகழ்கிறது சிறிய சந்நிதி. அது, கொஞ்சம் பள்ளமான இடத்தில் அமைந்துள்ள சந்நிதி. அந்தக் காலத்தில், இந்த இடத்தில்தான் கோயில் கோபுரம் இருந்ததாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுர வாசலிலும், ஸ்ரீரங்கம் ராஜகோபுர நுழைவாயிலிலும், திருவாசி ஸ்ரீமாற்றுரைத்த வரதீஸ்வரர் கோயில் கோபுர வாசலிலும் 'முனி சந்நிதி’ என்றே உள்ளது. இதை 'ராஜகோபுர முனி’ என்றும், 'கோபுர முனி’ என்றும் சொல்வார்கள். திருவாசி கோயில் கோபுர வாசலில் உள்ள முனியை 'அடைக்கலம் காத்தான் முனி’ என்று அழைக்கிறார்கள். 'இங்கே துடையூர் கோயிலில் உள்ள முனி 'வாதக்கல் முனி’, 'எங்களை வாழச் செய்யும் முனி’ என்கிறார்கள் பக்தர்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 30

பள்ளமான இடத்தில் சந்நிதி கொண்டிருக்கும் வாதக்கல் முனியை வணங்கினால் போதும்... நம் வாழ்க்கை உயர்ந்துவிடும் என்று போற்றுகின்றனர், பக்தர்கள். ஆறேழு படிகளைக் கடந்து, பள்ளத்துக்குள் இறங்கினால், நடுவில் சிறிய கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் கோபுர வாசல் இருந்த இந்த இடத்தில், அப்போதிருந்தே நம்மைக் காத்தருளி வருகிறார் ஸ்ரீவாதக்கல் முனி.

இதோ... எந்தன் தெய்வம்! - 30

''கெட்ட சிந்தனை, மந்தமான புத்தி உள்ளவர்கள், வாதக்கல் முனியை வழிபட் டால், சீக்கிரமே நல்ல புத்தியையும் தெளிவான சிந்தனையையும் பெறுவார்கள். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலும் வாதக்கல் முனியை வணங்குவது சிறப்பு!'' என்கிறார் ஹரி குருக்கள்.

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள குமரேசனுக்கு கடந்த வருடம் வரை துடையூர் எனும் ஊர் பற்றியோ, அங்கே இருக்கும் இந்தக் கோயில் குறித்தோ தெரியாதாம். ''திருச்சியில் உள்ள சில கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கத் திட்டமிட்டு வந்தோம். லண்டனில் என் மகள் ஹேமாஜெயம், கணவருடன் வசித்து வருகிறாள். மகளுக்கும் மருமகனுக்கும் இந்தியா வருவதற்கான விசா கிடைத்துவிட்டது. பேரன் ரித்விக்ரஜாவுக்கு மட்டும் விசா கிடைத்தபாடில்லை. இழுபறியாக இருந்தது. அந்த வேளையில்தான், துடையூர் கோயில் பற்றிச் சொன்னார்கள். 'சரி... இவ்ளோ தூரம் வந்தாச்சு! அந்தக் கோயிலையும்தான் பார்த்து, தரிசனம் பண்ணிடுவோமே’னு தேடிப்பிடிச்சு வந்தோம். ரொம்ப அருமையான கோயில். கேட்ட வரம் கொடுக்கற அற்புதமான ஆலயம். 'இத்தனை வயசுக்கு அப்புறம், என் பேரப் புள்ளையைப் பார்க்கணும்னு தவிக்கிறேன். என்னோட இந்த நியாயமான தவிப்பை நீதான் போக்கணும். உடனடியா விசா கிடைக்க வழிவகை செய்யணும்’னு மனசார வேண்டிக்கிட்டேன். அடுத்த வாரமே பேரக் குழந்தைக்கும் விசா கிடைச்சிருச்சு. அப்புறம் என்ன... அடுத்த மாசமே பேரனைத் தூக்கிக்கிட்டு, மகளும் மருமகனும் இங்கே வந்தாங்க. குடும்ப சகிதமா இங்கே வந்து, புற்றுக்கு வழிபாடு பண்ணினோம். ஸ்ரீவிஷமங்களேஸ் வரருக்கு வஸ்திரம் சார்த்தினோம். வாதக்கல் முனிக்கு எண்ணெய்க் காப்பு செஞ்சு, எங்க பிரார்த்தனையை நிறைவேத்தினோம்.

இதோ... எந்தன் தெய்வம்! - 30

அப்போலேருந்து, மனசுல எதுனா குழப்பம், கவலைன்னா இங்கிருந்தபடியே துடையூர் சிவனாரைத்தான் மனசார வேண்டிக்குவோம். எப்பேர்ப்பட்ட கஷ்டமானாலும், அது சட்டுன்னு காணாம போயிடும்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் குமரேசன்.

செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் காலையில் துவங்கி இரவு கோயில் நடை சார்த் தப்படும் வரை, வாதக்கல் முனியை எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம். அமாவாசை மற்றும் பௌர்ணமியில், மாலை ,வேளையில் வந்து வணங்குவது கூடுதல் பலனைத் தரும் என்பது ஐதீகம்.

''துடையூர் கோயில்ல ஒவ்வொரு சந்நிதியும் பல சிறப்புகளைக் கொண் டது. குறிப்பா, வாதக்கல் முனியை ஆத்மார்த்தமா வேண்டிக்கிட்டா, பக்கவாதத்தால நடக்க முடியாம படுத்திட்டிருக்கறவங்ககூட எழுந்து பழைய மாதிரி நடக்க ஆரம்பிச்சிடுவாங்க.

வாதக்கல் முனிக்கு, வாத நாராயண எண்ணெயும் நல்லெண்ணெயுமா கலந்து அபிஷேகிக்கறது வழக்கம். அந்த அபிஷேக எண்ணெயை வாங்கிட்டுப் போய், தினமும் காலைலயும் சாயந்திரத்துலேயும் கை-கால்கள்ல வலி இருக்கிற இடத்துல தடவினா போதும்... முப்பது நாட்களுக்குள்ளே வலி மொத்தமும் வடிஞ்சு, நரம்புகள்ல ஒரு புத்துணர்ச்சி பரவிடும். பழையபடி  வலி இல்லாம, பக்கவாத பிரச்னை இல்லாம நிம்மதியா வாழலாம். எனக்குத் தெரிஞ்சு, இந்த எண்ணெய்ப் பிரசாதத்தை  பயன்படுத்திப் பலன் பெற்றவங்க நிறையப் பேர்'' என்று சிலாகித்துச் சொல்கிறார் ஹரி குருக்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 30

''இப்ப கோபுரமும் இல்லை; அங்கே வாசலும் மதிலும் கிடையாதுதான். ஆனாலும், அந்த இடத்துல சாந்நித்தியத்தோட இருந்து அருள்கிறார் வாதக்கல் முனி. எனக்குத் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்கன்னு சிலபேர் காலில் தீராத வலின்னு அவதிப்பட்டாங்க. ஒரு கையும் காலும் செயல் இழந்துருச்சுன்னு முடங்கிப் போயிட்டாங்க. அவங்களுக்கெல்லாம் இந்தக் கோயிலைப் பத்தியும், வழிபாட்டு முறைகளையும் சொன்னேன். இரண்டு அமாவாசையின்போது எண்ணெய்க் காப்பு செஞ்சு, வேண்டிக்கிட்டாங்க. அந்தப் பிரசாதத்தைப் பயன்படுத்தின நாலாவது மாசத்துல, நாடி நரம்பெல்லாம் சரியாகி, மெள்ள நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்துக்கும் தென் னாடுடைய சிவனாரின் கருணையே காரணம்!'' என்று சிலிர்க்கிறார் வாசகர் பிரசன்னம்.

''அதேபோல, கல்யாண க்ஷேத்திரம்னும் இந்தத் தலம் போற்றப்படுது. இங்கே வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணி வேண்டிக்கிட்டாப் போதும்... தடைகள் நீங்கி, கல்யாணம் நடக்கும்; கிழக்கும் மேற்குமா இருக்கிற கணவனும் மனைவியும் கருத்தொருமித்த தம்பதியா ஆயிடுவாங்க. ஏன்னா, இங்கே ஸ்ரீகாத்யாயினி அம்பாள் சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் காட்சி கொடுக்கறார்!'' என்று சொன்ன ஹரி குருக்கள், வேறொரு சிறப்பம்சத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- வேண்டுவோம்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்