Published:Updated:

கடவுள் துணை நிற்பார்!

தேவாரம் பாடும் 14 வயது மகேஷ்

கடவுள் துணை நிற்பார்!

தேவாரம் பாடும் 14 வயது மகேஷ்

Published:Updated:

சென்னை- அசோக்நகர், ஸேவா மந்திரில்  சமீபத்தில் நூல் வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. 'செந்தமிழ் மந்திரப் பேரேடு - திருக்கயிலை பயண கையேடு’ எனும் தலைப்பில் இந்த நூலை வெளியிட்டிருப்பது, அப்பர் சமூகக் கல்வி அன்னதான அறக்கட்டளை அமைப்பினர்.

''எங்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த அன்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து, மூன்று முறை திருக்கயிலாய யாத்திரை சென்றிருக்கிறோம். அப்படிச் சென்று வந்ததில் கிடைத்த அனுபவங்களை, 'திருக்கயிலை பயணக் கையேடு’ எனும் தலைப்பில் இப்போது புத்தகமாக வெளியிட்டுள்ளோம்'' என்கிறார் அறக்கட்டளையின் நிறுவனரான கயிலைப் பேரரசு சிவ.க.அசோகன் பிள்ளை.

கடவுள் துணை நிற்பார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் 15 வருடங்களாக இயங்கி வரும் இந்த அறக்கட்டளையின் சார்பாக கோயில் விழாக்களில் அன்ன தானம், கோயில் திருப்பணிகள், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி, ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவி என்று பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார்களாம்.

நூல் வெளியீட்டு விழாவில் ஹைலைட்-  அட்சரம் பிசகாமல் தேவாரப் பாடல்கள் பாடிய 14 வயது சிறுவன் மகேஷ்!

''சின்ன வயசிலிருந்தே பாட்டுன்னா எனக்கு உசுரு. ரெண்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே பாட்டு கிளாஸ் போயிட்டிருக்கேன். ஹரிஹர சுப்ரமணியம்தான் என் குருநாதர். தேவாரமும் திருவாசகமும் பாடக் கத்துக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்னு முடிவு பண்ணினாங்க என் அம்மா (தேவிஸ்ரீ). அதன்படியே தேவாரம், திரு வாசகம், திருவெம்பாவை பாடல்களையும் என் குருநாதர் எனக்குக் கத்துக்கொடுத்தார்'' எனச் சொல்லும் மகேஷ், 9-ம் வகுப்பு படிக்கிறார்.

''பாட்டு சாதகம், ஸ்கூல், படிப்பு, பயிற்சின்னு நேரம் சரியா இருக்கு. டைம் மேனேஜ்மென்ட்லேருந்து, என்னை ஊக்கப்படுத்துறது வரைக்கும் எல்லாமே என் அப்பா- அம்மாதான். என் பாட்டுக்கு முதல் ரசிகர்கள் அவங்கதான்!'' என்று பூரிப்புடன் சொல்கிறார் மகேஷ்.

''பையன் பாட்டுக் கத்துக்கிட்டா நல்லாருக் குமேனு ஆசைப்பட்டோம். ஆனா, அவனோட ஆர்வம் என்ன, அவனோட திறமை என்ன, அவன் குரல் எப்படிப்பட்டது, அவன் எப்படியெல்லாம் பாடினா நல்லாருக்கும்னு அவனை முழுசா உள்வாங்கிப் புரிஞ்சுக்கிட்டு சொல்லிக் கொடுத்து வழிநடத்திய குருநாதர் ஹரிஹரசுப்ரமணியன் சாருக்குதான் நன்றி சொல்லணும்.  அவரோட முயற்சியாலதான் இன்னிக்கி எங்க பையனுக்கு இவ்ளோ கச்சேரிகளும் மேடைகளும் சாத்தியமா கியிருக்கு'' என்கிறார்கள் மகேஷின் பெற்றோர்.

''கத்துக் கொடுக்கறது பெரிய விஷயமில்லை. சொல்லிக் கொடுக்கறதைக் கற்பூரம் மாதிரி பிடிச்சுக்கிட்டுக் கத்துக்கறதுதான் கஷ்டம். அவ்வளவு ஈடுபாட்டோட மகேஷ் கத்துக்கிட்டது தான், அவனோட இன்றைய வளர்ச்சிக்கு ஆதாரம்!'' - இது மகேஷின் குருநாதர் ஹரிஹரசுப்ர மணியத்தின் பாராட்டு.

''அம்மா-அப்பா, குருநாதர் மட்டுமல்ல, என் நண்பர்கள் தந்த ஊக்கமும் உற்சாகமும் அதிகம். அவங்களுக்கும் நான் நன்றி சொல்லணும்'' என்ற மகேஷின் தோளோடு அணைத்தபடி, ''எங்க பையன் வளர்ந்து, மிகப்பெரிய பாடகரா வரணும்கறதுதான் எங்களோட ஆசை, லட்சியம் எல்லாமே! கடவுளைப் பத்தி மட்டுமே பாடுற மகேஷை, அந்தக் கடவுள் ஒருபோதும் கைவிடமாட்டார்னு நம்பறேன்'' என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் அவர் அம்மா தேவிஸ்ரீ.

நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்!

      - ந.கீர்த்தனா

படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism