Published:Updated:

அனுதினமும் விளக்கேற்றுவோம்!

சேக்கிழார் செல்விகளின் சொற்பொழிவு... பெரம்பலூர் விளக்கு பூஜையில் வாசகிகள் ஆனந்தம்வி.ராம்ஜி

அனுதினமும் விளக்கேற்றுவோம்!

சேக்கிழார் செல்விகளின் சொற்பொழிவு... பெரம்பலூர் விளக்கு பூஜையில் வாசகிகள் ஆனந்தம்வி.ராம்ஜி

Published:Updated:

''காலையில் குளித்துவிட்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு, வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி ஸ்வாமியை வணங்கினாலே புண்ணியம். அப்படியிருக்கும்போது, அந்த விளக்கையே ஸ்வாமியாகவும் அம்மனாகவும் நினைத்து, விளக்குக்கு பூஜை செய்வது என்பது அதைவிட புண்ணியம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?'' என்று சொல்லித் தங்கள் உரையைத் துவக்கினார்கள், சேக்கிழார் செல்விகள் குங்குமப்ரியாவும் மங்களப்ரியாவும்.

அனுதினமும் விளக்கேற்றுவோம்!

சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, பெரம்பலூர் ஸ்ரீகற்பக விநாயகர் மற்றும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி திருக்கோயிலில், கடந்த 6.5.14 அன்று நடைபெற்றது. திருச்சி, பெரம்பலூர், துறையூர், செட்டிகுளம், சேலம் எனப் பல ஊர்களில் இருந்தும் வந்திருந்தார்கள், வாசகிகள். சக்திவிகடனின் 138-வது விளக்கு பூஜை இது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளக்கு பூஜைக்கு முன்னதாக, இங்கே விசேஷமாக கோ பூஜை செய்யப்பட்டது. கோயிலின் நிர்வாகியும் ஐயப்ப பக்தருமான நாராயணசாமி ஐயா, ''எங்க கோயில்ல எப்ப விளக்கு பூஜை நடந்தாலும், கோ பூஜை பண்ணிட்டுதான் ஆரம்பிப்போம்'' என்றார். கோ பூஜையை மகாலட்சுமி வழிபாடு என்பார்கள். அந்த வகையில், இந்த விளக்கு பூஜையில் கலந்துகொள்கிறவர்களின் இல்லங்களில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் எனப் பூரித்துப் போனார்கள் வாசகிகள்.

இதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசிய குங்குமப்ரியாவையும் மங்களப்ரியாவையும் நம் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ப்ரியா சகோதரிகள் பேசத் தொடங்கியபோது, அதுவரை சிறு தூறலாகப் பெய்த மழை, 'சோ’வெனப் பெரும் சத்தத்துடன் வெளுத்துவாங்கத் தொடங்கியது. இதை இன்னொரு நல்ல சகுனமாகச் சொல்லிக்கொண்டார்கள் வாசகிகள்.

''ஐந்து முக விளக்கின் தாத்பரியம் என்னன்னு தெரியுமா? அன்பு, மன உறுதி, நிதானம், புத்திக் கூர்மை, சகிப்புத் தன்மை ஆகிய ஐந்து நல்ல குணங்களையும் நமக்குத் தருவதுதான் குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றி வழிபடுவதன் நோக்கம். ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்னா, இந்த ஐந்து குணங்களும் அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருந்தாலே போதும்.'' என்று குங்குமப்ரியா சொல்ல, மங்கள ப்ரியா தொடர்ந்தார்...

''அறுபத்துமூவரில், மூன்று நாயன்மார்கள் விளக்கேற்றி சிவ வழிபாடு செய்து, முக்தி அடைந்திருக்கிறார்கள். கலிய நாயனார் தன் கழுத்தையே அரிந்து, உதிரத்தையே எண்ணெ யாகக் கொண்டு விளக்கேற்ற முனைந்து, சிவனருள் பெற்றார். கனம்புல்ல நாயனாரோ, தனது தலை முடியைத் திரியாக்கி, விளக்கேற்றி முக்தி அடைந்தார். நமிநந்தி அடிகள், சிவ அனுக்கிரகத்தால் தண்ணீரைக் கொண்டு விளக்கேற்றி அற்புதம் நிகழ்த்தினார். உண்மையான பக்தியுடன்  பூஜை செய்தால், கடவுள் நமக்கு ஏதேனும் ஒருவிதத்தில் வந்து அருளுவார்!'' என்று  மங்களப்ரியா சொல்ல, கூட்டம் வாய் பிளந்து மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தது.

அனுதினமும் விளக்கேற்றுவோம்!

''நெய் தீபமேற்றி வழிபட்டால், கிரகங்களால் உண்டான தோஷங்கள் எல்லாம் விலகிப் போகும். தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி பூஜித்தால், கஷ்டங்கள்  காணாமல் போகும். நல்லெண்ணெய் தீபம் எம பயம் நீக்கும். செல்வம் தங்கும். விளக்கெண்ணெய் தீபம் குலதெய்வத்தின் பேரரு ளைப் பெற்றுத் தரும். இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால், தனம்- தானியம் பெருகி, சுபிட்சமாய் வாழலாம்'' என ஒவ்வொரு எண்ணெய் தீபத்தின் மகிமை களை சொல்லி, முத்தாய்ப்பாக, ''அனுதினமும் விளக்கேற்றி, வழிபடுங்கள். உங்கள் வீட்டுக்கு மகாலட்சுமியே வந்து விடுவாள்!'' என்று குங்கும ப்ரியா சொல்லவும், வாசகிகள் நெக்குருகிப் போனார்கள்.

பெரம்பலூர் அருகில் உள்ள குரும்பலூர் ஸ்ரீதர்ம சம்வர்த்தினி சமேத ஸ்ரீபஞ்ச நதீஸ்வரர் ஆலயத்தின் சிவ சுப்ரமணிய குருக்களும் அவரின் மைந்தனும் இந்த விளக்கு பூஜையை சிறப்புற நடத்திக்கொடுத்தார்கள். பூஜையில் கேசரி, புளியோதரை, மாவிளக்கு ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.  

'பசங்க நல்லாப் படிக்கணும்’, 'கணவர் ஆரோக்கியமா இருக் கணும்’, 'எங்கள் மளிகைக் கடையை விரிவுபடுத்தணும்’, 'பிரிந்திருக்கும் என் கணவருடன் சேரவேண்டும்’ எனப் பல வகையான வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டன. இறையருளால் எல்லா பிரார்த்தனைகளும் நிச்சயம் நிறைவேறும்!

படங்கள்: எம்.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism