Published:Updated:

''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்!''

வேடசந்தூர் விளக்கு பூஜையில் வாசகிகள் மகிழ்ச்சி! வி.ராம்ஜி

''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்!''

வேடசந்தூர் விளக்கு பூஜையில் வாசகிகள் மகிழ்ச்சி! வி.ராம்ஜி

Published:Updated:
''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்!''

''அட... பெரம்பலூர்ல விளக்கு பூஜை நடத்தும்போது மழை பெஞ்சுது. எங்க ஊர்ல நடத்தறப்பவும், இதோ மழை கொட்ட ஆரம்பிச்சிருச்சே..!'' என்று பூரிப்புடன் சொன்ன வாசகி நாகராணி, அருகில் இருந்தவர்களிடமும் அதைப் பகிர்ந்து கொண்டார். சக்தி விகடனின் நீண்ட கால வாசகி இவர்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 20.5.14 அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 139-வது விளக்கு பூஜை இது. வேடசந்தூர் நாடார் உறவின் முறை பாத்தியத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலில் விளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை, சக்திவிகடன் குழுவினருடன் இணைந்து, கோயில் நிர்வாகிகள் தன்ராஜ், சிங்காரவேல், ராஜா, காளியன் ரத்தினம், கருப்பசாமி, ஆறுமுகம், முருகேசன், மணி முதலானோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எந்தக் காரியமானாலும் மங்கலகரமாக விளக்கேற்றித் துவங்குவதே நம் சம்பிரதாயம். இங்கே, பெண்கள் பலரும் ஒன்றாக இணைந்து திருவிளக்கு ஏற்றி பூஜை செய்வதால், நம் வீடு மட்டுமின்றி, இந்த ஊரே செழிக்கும் என்பது உறுதி!'' என, சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சிவ.சண்முகம் பேசப் பேச, பெண்கள் முகம் தீபத்தைப் போலவே பிரகாசித்தது.

''ஊர் செழிக்கும்... குடும்பம் தழைக்கும்!''

''விளக்கேற்றியதும் முப்பெருந் தேவியரையும் அந்த தீபத்தில் கொண்டு வருவது சிறப்பு. 'தீப சரஸ்வதியே’ என மூன்று முறையும், 'தீப துர்கையே’ என மூன்று முறையும், 'தீப லக்ஷ்மியே’ என மூன்று முறையும் வேண்டுங்கள். அடுத்து, உங்களின் குலதெய்வத்தை நினைத்து மூன்று முறை பிரார்த்தனை செய்யுங்கள். ஆக, பன்னிரண்டு முறை, தீபத்தை நோக்கிப் பஞ்சாங்க நமஸ்காரம் செய்யுங்கள். உங்கள் வீட்டில் சுபிட்சம் தங்கும்!'' என்று அவர் விளக்கியபோது, மொத்தக் கூட்டமும் கை தட்டி ஆமோதித்தது. ''பருத்திப் பஞ்சால் ஆன திரியால் விளக்கேற்றினால், நல்ல செயல்கள் அனைத்தும் நடந்தேறும். புதிய மஞ்சள் வஸ்திரத்தில் இருந்து நூலெடுத்து திரியாக்கி விளக்கேற்றினால், தீராத வியாதியும் தீரும். சிவப்பு நிற வஸ்திரத்தில் இருந்து நூலெடுத்துத் திரியாக்கி, தீபமேற்றினால், தோஷங்கள் விலகும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பன்னீர் விட்டுக் காய வைத்த வெள்ளை நிற வஸ்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட நூல் திரியிட்டு விளக்கேற்றுவது, உத்தம குணங்களை வளர்க்கும்; புகழைத் தேடித் தரும். வாழைத் தண்டு நாரில் இருந்து உருவாக்கிய திரியைக் கொண்டு தீபமேற்ற, பித்ரு தோஷங்கள் விலகி, முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும்.

தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வெள்ளெருக்கு இலைப் பட்டையால் செய்த திரியானது, கல்வியும் ஞானமும் தரும்...'' என ஒவ்வொரு வகைத் திரியில் தீபமேற்றுவதன் பலன்களை சிவ.சண்முகம் விவரிக்க, பெண்கள் ஆர்வமும் வியப்பும் மேலிடக் கேட்டபடி இருந்தார்கள்.

அதையடுத்து, இனிதே நடந்தேறியது திருவிளக்கு பூஜை. வேடசந்தூர், தாடிக் கொம்பு, திண்டுக்கல், மதுரை எனப் பல ஊர்களில் இருந்தும் வாசகிகள் வந்திருந்தனர்.

''என் கணவரின் பிசினஸ் நன்றாக வளரணும்'' என்று வாசகி லதாவும், ''எல்லாரும் நல்லா இருக்கணும். நல்ல மழை பெய்யணும்'' என்று வாசகி அம்பாளும் (பெயரே அதுதான்), ''என் பொண்ணு பிளஸ் டூ-ல நல்ல மார்க் எடுத்திருக்கா. அவளுக்கு நல்ல வேலை கிடைக்கணும்'' என்று நாகராணியும், ''டென்த் எழுதி, ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கேன். நல்ல மார்க் கிடைக்கணும்'' என்று சிவசங்கரியும், ''என்  பொண்ணு நினைச்சபடி, நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கணும்'' என்று வாசகி அன்னக்காமுவும் பிரார்த்தித்ததாகத் தெரிவித்தனர்.

விளக்குபூஜையையொட்டி, கோயிலின் சண்முக சுந்தர குருக்கள், ஸ்ரீபத்ர காளியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்திருந்தார். சந்தன அலங்காரத்தில் அம்மனைக் கண்டு சிலிர்த்துப் போனார்கள் வாசகிகள்.

எல்லோரின் வேண்டுதல்களையும் ஈடேற்றித் தந்து, சந்தனத்தைப் போலவே மனம் குளிரச் செய்வாள் ஸ்ரீபத்ரகாளியம்மன்.

படங்கள்: வீ.சிவக்குமார்