Published:Updated:

சூரியன் காணாத சுனை!

குமரித் தீர்த்தம் என வழங்கப்படும் சூரியன் காணாத சுனை திருப்புகழடியார், திருவடி சென்னியார் எனும் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளின் திருப்புகழ் ஆஸ்ரமத்துக்கு மேற்கே அமைந்து உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளிமலை ஆஸ்ரமம்.  

முருகப்பெருமான் வள்ளியிடம் உணவு கேட்டு, தேனும் தினை மாவும் வாங்கி உண்டபோது விக்கல் எடுத்ததாம். வள்ளி உடனே குடிக்க நீர் தர, அதை மறுத்து, 'சூரிய- சந்திரர்கள் காணாத நீர் வேண்டும்’ என்று கேட்டாராம் முருகன். அப்போது வள்ளி இந்தச் சுனையை உண்டாக்கி, இதில் இருந்து முருகனுக்கு நீர் எடுத்துத் தந்ததாக ஐதீகம்!

இந்த தீர்த்தத்தை  குடமுழுக்கு, கிரகப்பிரவேசம் போன்ற புண்ணிய காரியங்களுக்குக் கேட்டு வரும்போது மட்டும் தருகிறார்கள். எவ்வளவு வறட்சியின் போதும் இந்தச் சுனை வற்றியதே இல்லை. இங்கு பொங்கி அம்மனாகக் காட்சியளிக்கும் வள்ளி அம்மையும், வில்வ, வேம்பு, அரசு மரத்துடனான இரட்டை விநாயகரும், விஷ்ணு வழிபட்ட திருமால்கிரீஸ்வரரும், முருகக் கடவுளால் உருவாக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும் என, ஆஸ்ரமம் மிகுந்த சாந்நித்தி யத்துடன் திகழ்கிறது.

சூரியன் காணாத சுனை!

சச்சிதானந்த சுவாமிகளுக்குப் பிறகு, சாது பாலானந்தா மேற்பார்வையில் இங்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வருகிறார் பூசாரி பூபாலன். 27 நாட்களுக்கு ஒரு முறை, ஆஸ்ரமத்தில் இந்தச் சுனை நீர் கொண்டு, மூல பூஜை நடத்தப்படுகிறது.

கங்கைக்கு இணையான புண்ணிய தீர்த்தமாகக் கருதப்படும் இந்தச் சுனை, தோஷ நிவர்த்தி சுனை என்றும் போற்றப்படுகிறது. இங்கு வந்து, சுனை நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு, பொங்கி அம்மனை மனதார வழிபட, தடைகள் விலகி விரைவில் திரு மணம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.

- த.வா.நல்லிசை அமிழ்து

படங்கள்: க.முரளி