மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 31

வைகாசி விசாகத்தில்... பிரம்மாவுக்கு கல்யாணம்!வி.ராம்ஜி

ல்யாணம், காதுகுத்து என்று உறவினர் வீட்டிலோ அல்லது நண்பர்களின் இல்லங்களிலோ விழாக்கள் நடப்பது வழக்கம். அந்த விழாவுக்குக் குடும்பத்துடனோ, தனியாகவோ சென்று வருவோம். கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து செல்ல இயலாதபோது, 'ஸாரி... அவருக்கு லீவு கிடைக்கலை’ என்று மனைவியோ, அல்லது 'அவங்களுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான்...’ என்று கணவனோ சமாளிக்கவேண்டிய தர்மசங்கடமான நிலை உருவாகும். ஆக, எந்த ஒரு விழாவுக்கும் கணவனும் மனைவியுமாக தம்பதி சமேதராகச் செல்வதே கம்பீரம்; அளப்பரிய சந்தோஷம்!

''அவங்க எப்பவும் ஒருத்தரைவிட்டு ஒருத்தர் தனியா வரமாட்டாங்க. எங்கே போனாலும் சேர்ந்துதான் போவாங்க'' என்று மற்றவர்கள் பெருமிதமாகப் பேசுகிற நிலை, உன்னதமானது. சராசரி மனிதர்களாகிய நாமே துணையுடன் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சி என்றால், தெய்வங்கள் தங்களின் துணையுடன் தரிசனம் தருவதைச் சொல்ல வேண்டுமா?

''கணவனும் மனைவியுமாக, நம் கோயிலில் ஆறு தெய்வங்கள் காட்சி தருகின்றனர். அதாவது, ஸ்வாமிக்கும் சந்நிதிகள் உள்ளன; அவர்களின் துணைவியார்களுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன!'' என்று தெரிவிக்கிறார் துடையூர் ஆலயத்தின் ஹரி குருக்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 31

திருச்சி- நாமக்கல் சாலையில், சமயபுரம் டோல்கேட் மற்றும் நொச்சியத்துக்கு அருகில் உள்ளது துடையூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து குணசீலம் செல்லும் பேருந்தில் பயணித்தால், துடையூர் எனும் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

''துடையூர் கோயிலில் மொத்தம் ஆறு தெய்வங்கள், தங்கள் துணைவியர்களுடன் காட்சி தருகிறார்கள். அதாவது, மூலவர் ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீமங்களாம்பிகை. அடுத்து, கோஷ்டத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவியும், பிராகாரத்தில் அவரின் கணவர் ஸ்ரீபிரம்மாவும் தரிசனம் தருகின்றனர். அதேபோல், மடியில் தாயாரை இருத்திக்கொண்டு ஸ்ரீலக்ஷ்மி நாராயணராக, திருமால் காட்சி தருகிறார். ஆக, நாகர்கோவில் சுசீந்திரம் மற்றும் திருச்சி உத்தமர்கோவில் தலங்களைப்போல, இங்கேயும் மும்மூர்த்திகளும் தரிசனம் தருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தங்கள் துணைவியாருடன் அற்புதமாகக் காட்சி தருகின்றனர்.

இதோ... எந்தன் தெய்வம்! - 31

சிவா, விஷ்ணு, பிரம்மாவை அடுத்து, எல்லாக் கோயில்களிலும் இருப்பது போல, ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராக ஸ்ரீசுப்ரமணியர் காட்சி தருகிறார். தன் மனைவியர் உஷா- பிரத்யுஷாவுடன் சூரிய பகவான் காட்சி தருகிறார். கோஷ்டத்தில், ஸ்ரீகாத்யாயினி சமேதராக ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் அழகு ததும்பக் காட்சி தருகிறார். எனவே, இப்படியான சிறப்புமிக்க இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், கல்யாணத் தடைகள் அனைத்தும் விலகிவிடும். குடும்பத்தில் தம்பதியிடையேயான ஒற்றுமை மேலோங்கும்'' என்கிறார் ஹரி குருக்கள்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இங்கே ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, தோஷங்களாலும் தடைகளாலும் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதே என வருந்துபவர்கள் இங்கு வந்து குளித்து, ஈரத்துணியுடன் கோயிலுக்கு வந்து, விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர், ஸ்ரீலக்ஷ்மி நாராயணர், ஸ்ரீபிரம்மா- ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீஉஷா- பிரத்யுஷா சமேத சூரிய பகவான் மற்றும் ஸ்ரீகாத்யாயினி சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் என ஒவ்வொரு சந்நிதியிலுமாகச் சேர்த்து மொத்தம் 11 தீபங் களை ஏற்றி, 11 முறை பிராகார வலம் வரவேண்டும். அப்படிச் செய்தால், கல்யாணத் தடைகள் அகலும், தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

''முன்பெல்லாம் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். இப்போது, எல்லாக் கிழமைகளிலும் வந்து நீராடி, ஈரத்துணியுடன் தீபமேற்றி, பிராகார வலம் வருகிறார்கள். அடுத்து, ஒரு மண்டலத்துக்குள் திருமணம் நடைபெற, மீண்டும் இங்கு வந்து தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்'' என்கிறார் ஹரி குருக்கள்.

''எனக்குச் சொந்த ஊர் காரைக்குடி. 38 வயதாகியும் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஜோஸியர்கள் சொன்ன எல்லா பரிகாரங்களையும் செய்தோம். ஆனாலும், பலனில்லை. குலதெய்வப் பிரார்த்தனையில் ஈடுபட்டோம். முசிறிக்கு அருகில் உள்ள குல தெய்வத்தை வணங்கிவிட்டு வரும் வழியில், இந்தத் துடையூர் பற்றி டீக்கடை ஒன்றில் யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 31

உடனே என் அப்பா, 'துடையூர் எங்கே இருக்கு? இப்ப கோயில் நடை திறந்திருக்குமா?’ என்றெல்லாம் விசாரித்தார். 'அந்தக் கோயிலுக்குப் போயிட்டு ஊருக்குப் போவோம்’ என்று எங்களிடம் சொன்னார்.

கோயிலுக்குச் சென்றதும், கல்யாணத் தடை நீக்கும் வழிபாட்டைச் சொன்னார்கள். அப்போது கொள்ளிடத்தில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. கோயிலுக்கு அருகில் உள்ள வாய்க்காலிலும் தண்ணீர் ஓடியது. குளித்து, ஈரத்துணியுடன் கோயிலுக்குள் வந்து, 11 தீபங்கள் ஏற்றினேன். பிராகாரத்தை 11 முறை வலம் வந்து மனதார வேண்டிக்கொண்டேன்.

இதோ... எந்தன் தெய்வம்! - 31

அடுத்த 15-ம் நாள், வரன் ஒன்று வந்தது. மாப்பிள்ளை மலேசியாவில் வேலை பார்க்கிறார். விடுமுறையில் வந்திருப்பதால், உடனே திருமணம் நடத்திவிடலாம் என முடிவாகி, தடதடவென தடபுடலாகக் கல்யாண மும் நடந்தது. எல்லாம் சிவனருள்'' என்று கண்ணீரும் சந்தோஷமுமாகச் சொல்கிறார் வள்ளியம்மை.

இப்படி... நல்ல வாழ்க்கை கிடைத்த பூரிப்புடனும் வாழ்க்கைத் துணை கிடைத்த உற்சாகத்துடனும் இங்கு வந்து நேர்த்திக் கடனைச் செலுத்துகிற ஆண்களும் பெண்களும் ஏராளம்.

''நமது துடையூர் கோயிலில் இன்னொரு விசேஷமும் உண்டு. இதோ, வைகாசி விசாக நன்னாளில், ஸ்ரீபிரம்மாவுக்கும் ஸ்ரீசரஸ்வதிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெறுகிறது. அநேகமாக, எனக்குத் தெரிந்து, ஸ்ரீபிரம்மாவுக்குக் கல்யாண உற்ஸவம் நடைபெறும் ஆலயம், தமிழகத்தில் துடையூர் மட்டும்தான் என்று நினைக்கிறேன்'' என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் ஹரி குருக்கள்.

வைகாசி விசாக நன்னாளில் (ஜூன் 11-ம் தேதி அன்று), அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஹோமங்கள் நடைபெறத் துவங்கிவிடுமாம். பச்சரிசிப் படி சார்த்துதல், பருப்புத் தேங்காய் பிடித்தல், சீர் வரிசை என அமர்க்களப்படும்.

ஹோமங்கள் முடிந்ததும் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 முதல் 6 மணிக்குள், ஸ்ரீபிரம்மாவுக்கும் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தேறும். அதையடுத்து ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீசரஸ்வதிதேவியும் தம்பதி சமேதராக, பிராகார வலம் வருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.

நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசரஸ்வதி ஆகியோரின் உற்ஸவ மூர்த்தங்கள் இங்கே உள்ளன. பாதுகாப்பு கருதி, துடையூர் கிராமத்தில் ஊருக்குள் அமைந்திருக்கிற ஸ்ரீவிநாயகர் கோயிலில் உற்ஸவ மூர்த்தங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

விழாக்களின்போது உற்ஸவர்கள், கொள்ளிடக் கரையில் உள்ள துடையூருக்கு வருவார்கள். அற்புதமான தரிசனத்தை பக்தர்களுக்குத் தந்துவிட்டு, துடையூர் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றுவிடுவார்கள்.

பிரம்ம முகூர்த்த வேளையில், ஸ்ரீபிரம்மாவை தரிசிப்பதே புண்ணியம். இங்கே, ஸ்ரீபிரம்மாவுக்கும் கல்விக்கு அதிபதியான ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்ஸவத் தில் கலந்துகொள்வது அதைவிட புண்ணியங்களைச் சேர்க்க வல்லது!

வளம் கொழிக்கச் செய்யும் வைகாசி விசாக நாளில், நம்மைப் படைத்த பிரம்மாவுக்குக் கல்யாண விழா.  கல்வி வரம் அருளும் தேவிக்கு திருமண வைபவம். கண்ணாரத் தரிசியுங்கள். மனதார வேண்டிக்கொள்ளுங்கள் உங்கள் கஷ்டங்களெல்லாம் முழுவதுமாகத் துடைத்தெறியப்பட்டு, கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனுமாக நம்பிக்கையூட்டி, நல்வழி காட்டி, பக்கத்துணையாக இருந்து உறுதியுடனும் உற்சாகத்துடனும், அன்புடனும் வாத்ஸல்யத் துடனும் இணை பிரியாமல் வாழ்வீர்கள்!

- வேண்டுவோம்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்