
சிவ சந்நிதிக்கு எதிரே திருமால்!வி.ராம்ஜி
பேதங்களும் பாகுபாடுகளும் நம்மிடம்தான் இருக்கின்றன. 'நீ பெரியவனா, நான் பெரியவனா’ என்கிற கர்வமும் அலட்டலும் உலக மக்களின் மிகப்பெரிய வியாதியாகவே திகழ்கின்றன. வழிபாடுகளில்கூட, பிரித்துப் பார்த்து வணங்குகிற மனோபாவம் நம்மிடம் மட்டுமே உண்டு. ஆனால், தெய்வங்கள் எந்த வித்தியாச, வேற்றுமைகளும் பார்ப்பதே இல்லை. பக்தர்களாகட்டும், பக்தர் அல்லாதாராகட்டும், சக கடவுளர்களாகட்டும்... எல்லோரிடத்திலும் கருணையையும் அருளையும் பரவச் செய்வதே கடவுளர்களின் விருப்பம்.
அப்படியே ஒருவேளை, கடவுளருக்குள் சண்டையோ சச்சரவோ, போட்டியோ பொறாமையோ வந்திருந்தால், அவை இணைந்து வாழ்தலையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் நமக்கு உணர்த்துவதற்காகத் தெய்வங்கள் நிகழ்த்திய திருவிளையாடல்கள்தானேயன்றி வேறில்லை.
ஸ்ரீபிரம்மாவின் கர்வம் கண்டு கொதித்த சிவனார், அவரின் சிரங்களில் ஒன்றைக் கொய்தார். இதனால், ஈசனுக்கு பிரம்ம சிர கண்டீஸ்வரர் என்று திருநாமம் அமைந்தது. பிரம்மாவின் சிரத்தைக் கொய்ததால் சிவனாரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்த தோஷத்தில் இருந்து வழிபட, சிவனார் என்ன செய்தார்? மருத்துவர் இன்னொரு மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தப்பில்லையே! எனவே, சிவன் மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்து, வணங்கினார். அந்த தோஷத்தில் இருந்தும் சாபத்தில் இருந்தும் சிவனாரை விடுவித்து அருளினார் திருமால். இதனால், அவருக்கு ஸ்ரீஹர சாப விமோசனப் பெருமாள் என்று திருநாமம் அமைந்தது.

ஆக, சிவனார் பெருமாளை வணங்குவதும், பெருமாள் சிவனாரை நோக்கித் தவமிருந்து வரம் பெறுவதுமான புராண நிகழ்வுகள் நிறையவே நிகழ்ந்திருக்கின்றன. அதாவது, ஹரியும் சிவனும் ஒன்றே எனும் தத்துவத்தைப் புராணங்களின் வாயிலாக நம் முன்னோர்கள் தெளிவுற நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் ஆலயத்தை அடுத்து, நாம் தரிசிக்க உள்ள திருத்தலம், திருமால்பூர். சென்னை கடற்கரையில் இருந்து இந்த ஊருக்குச் செல்ல, புறநகர் ரயில் (யூனிட் ரயில்) உள்ளது. ஆனால், சென்னை மாவட்டத்தில் இந்த ஊர் இல்லை. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் உள்ளது. ஆனால், இந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இல்லை. வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது திருமால்பூர். ஆக, இந்த ஊரைச் சொல்வதற்கு மூன்று மாவட்டங்களையும் இணைத்துச் சொல்வதுபோல, ஹரியையும் சிவனையும், சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் திருத்தலம் என்றே திருமால்பூரைச் சொல்லலாம்.
தொண்டை நாட்டின் 32 சிவாலயங்களில், இந்தத் தலம் 11-வது தலமாகப் போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் பெருமான் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற புண்ணிய பூமி இது. 'அடடா... திருமால்பூர் என்று ஊரின் பெயரில் பெருமாளின் திருநாமம். ஊரின் மையப் பகுதியில் கோயில் கொண்டிருப்பதோ சிவபெருமான்’ என்று வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறதுதானே!
''இந்தத் தலத்துக்கு வருபவர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்கு முக்தி நிச்சயம். அவர்கள் புகழுடனும் ஐஸ்வரிய கடாட்சத்துடனும் ஆரோக்கியமாக வாழ்வார்கள். இந்தத் திருத்தலம், உன் பெயரிலேயே அழைக்கப்படட்டும். திருமால் பேறு என்பதே ஊரின் பெயராக இருக்கட்டும். ஊரின் பெயரைச் சொல்லச் சொல்ல, உன் திருநாமத்தைச் சொல்லச் சொல்ல, அனைவரும் ஆனந்தமாக வாழ்வார்கள்'' என்று அந்த சிவபெருமானே அருளியிருக்கிறார். அதனால் இந்த பூமி, 'திருமால் பேறு’ என அழைக்கப்பட்டு, பிறகு திருமால்பூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

தலத்தின் நாயகன் ஈசன். இங்கே அவரின் திருநாமம் ஸ்ரீமணிகண்டீஸ்வரர். ஒரு திருவிழா நோட்டீஸில் அல்லது வேறு ஏதேனுமொரு அழைப்பிதழில் தன் பெயர் இரண்டாவது இடத்தில் இருக்கிறதே என்பதற்காகக் கோபித்துக்கொண்டு, பூமிக்கும் வானுக்குமாக எகிறிச் சண்டை போடுகிற உலகம் இது. ஆனால், ஓர் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் குடிகொண்டிருக்கிற இறைவன் சிவனார், தன்னை முன்னிலைப்படுத்தாமல், திருமாலுக்கு முக்கியத்துவம் அளித்து, அவரின் திருநாமத்தையே ஊர்ப்பெயராக வைத்து, எவ்வளவு அழகாக கர்வமற்று இருத்தலை நமக்கு உணர்த்துகிறார் பாருங்கள்! விட்டுக்கொடுத்தலின் அவசியத்தை எவ்வளவு நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கிறார்!
அற்புதமான க்ஷேத்திரம். கோயிலும், கோயிலுக்கு எதிரே வெட்டவெளியும், அருகில் திருக்குளமும், சுற்றிலும் மதிலும், மதிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வீடுகளும் என ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது ஸ்ரீமணிகண்டீஸ்வரர் திருக்கோயில்.
தீண்டச் சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்த விர்த்தார், திருமாற்குப் பேறு அளித்தார் என ஈசனுக்கு இங்கு திருநாமங்கள் பல உண்டு.
தொண்டை நாடு சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது எழுப்பப்பட்ட ஆலயம் இது. இந்தப் பகுதியை ஜயங்கொண்ட சோழ மண்டலம் என்றும், காமக்கோட்டப் பகுதி என்றும் அந்தக் காலத்தில் சொல்வார்கள். வல்லநாட்டின் திருமேற்பேறு என இந்தத் தலம் குறித்து குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
தவிர, கோயிலின் ஸ்தல புராணம் மற்றும் விவரங்கள், காஞ்சி புராணம் எனும் நூலில் உள்ள 'திருமாற்பேற்றுப் படலம்’ எனும் பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயம். ஐந்து நிலையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது கோபுரம். மூலவர் ஸ்ரீமணிகண்டீஸ்வரரும் கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். தவிர, பிராகாரத்தில் மேற்குப் பார்த்தபடி அமைந்துள்ள ஸ்ரீசோழீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கொண்ட சிவலிங்கத் திருமேனி, விசேஷம் கொண்டதாகப் போற்றப்படுகிறது.
அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாள். கருணை நாயகி என்றும் பெயர் உண்டு. தனிக்கோயிலாகவே சந்நிதி கொண்டிருக்கிறாள். அம்பாளின் சந்நிதிக்கும் இறைவனின் சந்நிதிக்கும் நடுவில், வழியில் அமைந்துள்ளது ஸ்தல விருட்சமான வில்வ மரம். அன்னையைத் தரிசித்தால் நம் மனம் குளிர்ந்து போகும். அதேபோல், இந்த வில்வ மரத்துக்கு அருகில் வந்தாலே உடலின் உஷ்ணங்கள் நீங்கி, குளுமையேறும்.
கோயிலுக்கு வெளியில் அழகிய திருக்குளம். இதை சக்ர தீர்த்தம் என்று தெரிவிக்கிறது ஸ்தல புராணம். திருமாற்பேறு என்பதற்கு பதிலாக ஹரிசக்ரபுரம் என்று இன்னொரு பெயரும் இந்த ஊருக்கு உண்டு. ஆக, ஊரின் பெயரிலும், குளத்தின் பெயரிலும் சக்கரம் இருக்கிறது.
இதற்கு விசேஷ காரணம் ஏதேனும் உண்டா? திருமாற்பேறு என்று போற்றும் வகையில் திருமால் இங்கு வந்து சிவனாரை வேண்டித் தவமிருந்தாரே, எதற்காக?
இதோ... ஸ்ரீமணிகண்டீஸ்வரரை நோக்கி, அவரின் சந்நிதிக்கு எதிரில் இப்போதும் நின்றுகொண்டிருக்கிறார் திருமால். சிவலிங்கத் திருமேனியை, நின்ற திருக்கோலத்தில் கைகூப்பியபடி தரிசித்துக் கொண்டிருக்கிற திருமாலை, வேறெங்கேனும் தரிசித்திருக்கிறீர்களா?
ஹரிசக்ரபுரம் எனும் பெயர் அமைந்த கதையைப் பார்ப்போமா?
- வேண்டுவோம்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?
வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருமால்பூர். சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் இருந்து திருமால்பூருக்கு புறநகர் ரயில்கள் உள்ளன. காஞ்சி புரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில், சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், ஸ்ரீபெரும்புதூரை அடுத்து காஞ்சிபுரம் செல்லும் வழி வரும். அதையடுத்து உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் வந்து, அரக்கோணம் செல்லும் சாலையில் பயணித்தால், சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள திருமால்பூரை அடையலாம்.
திருமால்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீமணிகண்டீஸ்வரர் ஆலயம். ஸ்டேஷனில் இருந்து ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.