Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

Published:Updated:

ராமலிங்க பிரதிஷ்டை விழா!

ராவணனைக் கொன்றதால், ஸ்ரீராமனுக்கு மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. விச்ரவஸ் எனும் அந்தண மகரிஷியின் பிள்ளைதான் ராவணன் என்பதால், அவனை சம்ஹாரம் செய்த ஸ்ரீராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதை, சிவ வழிபாடு செய்து ஸ்ரீராமன் போக்கிக்கொண்ட தலம் ராமேஸ்வரம் என்பது நமக்குத் தெரியும்.

இன்னும் இரண்டு தோஷங்கள் என்னென்ன, அவை நீங்க ஸ்ரீராமன் வழிபட்ட சிவத்தலங்கள் என்னென்ன என்று தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாவீரனான ராவணனை வதம் செய்ததால், ஸ்ரீராமனுக்கு வீரஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்குப் பரிகாரமாக, ஸ்ரீராமன் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் வேதாரண்யம். சாமகானம் இசைப்பதில் வல்லவன் ராவணன். இதுபோன்ற நல்ல அம்சங்களை 'சாயை’ என்பார்கள். சாயை என்பதற்கு ஒளி, நிழல் என்றும் பொருள்கள் உண்டு. ஒளி மிகுந்த பெருமைகளுக்கு உரிய ராவணனை வதைத்ததால், ஸ்ரீராமனுக்கு சாயாஹத்தி தோஷமும் ஏற்பட்டது. இது தீர்வதற்காக, பட்டீஸ்வரத்தில் ராமலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமர்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது அல்லவா? அப்போது, ஸ்ரீராமனை விட்டு அகன்ற அந்த தோஷமா னது, வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்ததாம். இந்த நிலையில் சிவ அம்சமான ஸ்ரீபைரவர் பிரம்மஹத்தி தோஷத்தைத் தன் காலால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். அத்துடன், தானும் இந்தத் தலத்தில் எழுந்தருளினார். இவரது சந்நிதி, கோடி தீர்த்தம் அருகில் உள்ளது. ராமேஸ்வரம் செல்பவர்கள், இந்தப் பாதாள பைரவரையும் அவசியம் தரிசித்து வாருங்கள். உங்கள் பாவங்களையும் பிரச்னைகளையும் பாதாளத்துக்குத் தள்ளி அருள் செய்வார்.

ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத ஸ்வாமி திருக்கோயிலின் தலபுராணத் தைத் தழுவிய திருவிழா, ஸ்ரீராமலிங்க பிரதிஷ்டை விழா. ஆனி மாதம் வளர்பிறையின் 6-வது நாள் துவங்கி, பௌர்ணமி வரையிலும் 10 நாள்களுக்கு இந்தத் திருவிழா நடத்தப்படும்.

விழாவின் முதல் நாள், ராவண வதம்; திட்டக்குடி துர்கையம்மன் கோயிலில் நிகழும். 2-வது நாள், விபீஷண பட்டாபிஷேகம்; ஸ்ரீகோதண்டராமசாமி கோயிலில் நடைபெறும். 3-ம் நாள், ஸ்ரீராம லிங்க பிரதிஷ்டையை விளக்கும் வைபவம். விழாவின் நிறைவாக  ஸ்ரீராமனும், ஸ்ரீராமநாதரும் ரதத்தில் பவனி வருவது கண்கொள் ளாக் காட்சி!

- சிவ. அ. விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சர்க்கரை நோய் நீங்கும்..!

கத்திய முனிவர் வழிபட்ட சிவக்ஷேத்திரங்களை அகத்தீஸ்வரம் என்பார்கள். அவற்றுள் ஒன்று, சென்னை- குரோம்பேட்டையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள நெமிலிச்சேரி

ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில். அம்பாளின் திருநாமம் ஸ்ரீஆனந்த வல்லி; பெயருக்கு ஏற்ப ஆனந்த வாழ்வளிப்பவள்.

'நெமிலி’ என்றால் தெலுங்கில் மயில் என்று அர்த்தம். ஒரு காலத்தில் மயில்கள் மிகுந்திருந்த இடமாகத் திகழ்ந்ததால், இந்தத் தலத்துக்கு நெமிலிச்சேரி எனும் பெயர் வந்ததாம். அரச மரம் தல விருட்சமாகவும், அகஸ்திய புஷ்கரணி தீர்த்தமாகவும் திகழும் இந்தத் தலத்தின் திருக்கோயில், சோழர்களால் கட்டப்பட்டது என்கிறார்கள். சூரிய- சந்திரரோடு ஸ்ரீபைரவரும் ஒரே சந்நிதியில் அருள்வது இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

வேறொரு சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு. கடுமையான சர்க்கரை நோயில் சிக்கித் தவித்த மக்களுக்காக, அவர்களின் பிணிகளும் பிரச்னைகளும் அகன்றிட, அகத்திய மாமுனியால் ஸ்தாபிக்கப்பட்டதாம் இங்கு அருள்பாலிக்கும் சிவலிங்கத் திருமேனி. ஆக, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீஅகத்தீஸ்வரரை வழிபட, சர்க்கரை நோய் உள்ளிட்ட சகல பிணிகளும் தீரும் என்பது நம்பிக்கை.

- மாரி சுப்ரமணியன், களக்காடு

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

மகா தவம்!

நாங்கள் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறோம். எங்கள் பகுதியில், என் தோழி உஷா பிரசாத் இல்லத்தில், வாரா வாரம் சத்சங்கமாக அன்பர்கள் பலர் சங்கமிப்பார்கள். ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறும். அந்த வகையில், உபன்யாசகர் மன்னார்குடி ஜி.ஜி. வெங்கட்ராமன் தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு நடத்தினார். அது நிறைவுற்று, இப்போது ராமாயணம் துவங்கியிருக்கிறது.

இடையிடையே சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஜி.ஜி.வெங்கட்ராமன் இந்த வாரம் மகா பெரியவா பற்றிய ஒரு தகவலைச் சொன்னார். 'அனுஷ’ ஜயந்தியையொட்டி மிகப் பொருத்தமாகவும் சிலிர்ப்பாகவும் இருந்தது அந்தத் தகவல். அதை உங்களோடும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

''இந்து மதம் கண்ட மகா பொக்கிஷம், கருணைக்கடலான நம் மகா பெரியவா. அவர் அனுக்ரஹித்த அருட்செயல்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை!

அது, 1975-ம் வருடம். வாழ்க்கையில் மனிதர்கள் எவராலும் செய்ய இயலாத ஒரு காரியத்தை அவர் செய்தார்.

காஞ்சிபுரம் டோல்கேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் தேனம்பாக்கம். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் சுயம்புவாகக் கோயில் கொண்டிருக்கும் அந்தப் புண்ணிய க்ஷேத்திரம், மகா பெரியவாளின் அனுக்கிரகத்தால் மேன்மேலும் சிறப்பு பெற்றது. ஆம்! இந்தத் தலத்தில் இருந்தபோது, 10 மாத காலம் கர்ப்ப வாசம் செய்தார் மகா பெரியவா.

ஒரு குழந்தை, தாயின் கருவறையில் இருப்பது போன்று, 10 மாத காலம் வெளியே வராமல், ஒரு குடிலுக்குள்ளேயே தனது அனுஷ்டானங்களை நடத்திக்கொள்வதே கர்ப்ப வாசம் எனப்படும். பெரியவா தங்கியிருந்த குடிலுக்குள்ளேயே ஒரு கிணறும் இருந்தது. எனவே, ஸ்நானம் உள்பட, எல்லாம் உள்ளேதான்.

வெளியுலகைப் பார்க்காமல், யாரையும் சந்திக்காமல் பத்து மாத காலம் ஒரு குடிலுக்குள் இருப்பது என்றால் சும்மாவா?! அந்தப் பத்து மாதங்களும் மகா பெரியவா சூரிய ஒளியைப் பார்க்கவில்லை என்பதுதான் நிதர்சனம். சாதாரணமாகவே பெரியவா பி¬க்ஷ ஏற்பது என்பதே ஆச்சரியம்! அதிலும், அந்த 10 மாதங்களிலும் பல நாட்கள் பி¬க்ஷ கிடையாது. அதே நேரம், கர்மானுஷ்டானங்களை ஒரு துளியும், ஒருவேளைகூட விடாமல் பெரியவா அனுஷ்டித்த தபஸ் அது!

நினைத்தாலே பிரமிப்பைத் தரும் அப்படியொரு தவத்தை மகா பெரியவா எந்த ஸங்கல்பத்துக்காக மேற்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம்!''

- கமல லக்ஷ்மி விஜயகுமார், அம்பத்தூர்

கல்யாண வரம் வேண்டும் பெண்களுக்கு...

புண்ணியம் மிகுந்த ஸ்ரீநாராயணீயத்தில் 21-வது சதகம், 4-வதாக வரும் இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து, ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபட்டுவர, கல்யாணத் தடைகள் நீங்கும்; மனத்துக்கினிய கணவர் வாய்ப்பார்.

வர்ஷே ப்ரதீசி லலிதாத்மனி கேதுமாலே
லீலாவிஸேஷ லலிதஸ்மித ஸோபனாங்கம்
லக்ஷ்ம்யா ப்ரஜாபதி ஸுதைஸ்ச நிஷேவ்யமாணம்
தஸ்யா: ப்ரியாய த்ருதகாமதனும் பஜே த்வாம்

_ தெ. மீனாட்சி, நெல்லை-2

கேட்கிறார்கள்...

சிறு வயதில், என் தாத்தா ஸ்லோகம் ஒன்று சொல்லிக் கொடுத்தார். நாங்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போதெல்லாம் அந்த ஸ்லோகத்தைச் சொல்லி, உடம்பில் ஏழு இடங்களில் ஏழு சொட்டு எண்ணெய் வைத்து, பின்பு உடம்பு முழுக்க எண்ணெய் தேய்த்துவிடுவார். அந்த ஸ்லோகம், அதற்கான பொருள், உடம்பில் ஏழு இடங்களில் எண்ணெய் வைப்பதன் தாத்பர்யம்... எதுவும் இப்போது ஞாபகத்தில் இல்லை. தெரிந்தவர்கள் யாரேனும் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

- கே.ராஜகோபால், வள்ளியூர்

ங்கள் மூதாதையர் பலகாலமாக வாராஹி தேவியை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் சிறிது காலம் அந்த வழிபாடு தடைப்பட்டுப் போனது. மீண்டும் வாராஹி வழிபாட்டை நான் துவங்க விரும்புகிறேன். ஸ்ரீவாராஹி மட்டுமல்லாமல், சப்தகன்னியரின் திருக்கதையையும் அறிய ஆவல். சப்த கன்னியர் வழிபாடு குறித்தும், அவர்களுக்கான திருக்கோயில்கள் குறித்தும் விரிவான தகவல்கள் எந்த நூலில் இருக்கும்? விவரம் அறிந்தவர்கள் நூல் குறித்தும், அது கிடைக்கும் இடம் குறித்தும் தகவல் தந்தால் உதவியாக இருக்கும்.

- ஆர்.சபாபதி, திருச்சி-4

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism