Published:Updated:

'சகல ஐஸ்வரியங்களும் தேடி வரும்!’

142-வது திருவிளக்கு பூஜைவி.ராம்ஜி

'சகல ஐஸ்வரியங்களும் தேடி வரும்!’

142-வது திருவிளக்கு பூஜைவி.ராம்ஜி

Published:Updated:

''ரிஷிகளும் முனிவர்களும் வேள்வித் தீயை உண்டு பண்ணி, அந்தத் தீயை இறைவனாக வழிபட்டார்கள். அந்த மரபைத் தழுவி, பெண்கள் வழிபட்டு வருவதுதான் திருவிளக்கு பூஜை. அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி, ஜோதி மயமாய் இருக்கிற இறை சக்தியை, இதோ... உங்கள் ஒவ்வொருவரின் திருவிளக்கிலும் பார்க்கிறேன்...''

திருவிளக்கு தாத்பரியம் துவங்கி, விளக்கு பூஜையின் மகிமைகளை விரிவாக விளக்கிப் பேசினார் திருவாவடுதுறை சைவ சமயப் பரப்புநர் கோமதி திருநாவுக்கரசு.

திருநெல்வேலி- பாளையங்கோட்டையில் உள்ள ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீதிரிபுராந்தீஸ்வரர் கோயிலில், சக்திவிகடனின் 142-வது விளக்கு பூஜை, கடந்த 1.7.14 அன்று நடைபெற்றது.  ''வேதாரண்யம் தலத்தில், அணையப் போகும் விளக்கின்மீது ஓர் எலி ஓடியதால், அந்த விளக்கின் திரி தூண்டப்பட்டு, பிரகாசமாக  எரியத் துவங்கியது. இதன் பலனாய் அந்த எலி, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறப்பெடுத்தது. தன்னையும் அறியாமல் விளக்கை எரிய வைத்ததற்கே இத்தனைப் பெரிய புண்ணியம் கிடைத்தது என்றால், நாம் தெரிந்து, உணர்ந்து, புரிந்து விளக்கேற்றி வழிபடுவதற்கு எத்தனைப் புண்ணியமும் ஐஸ்வரியமும் நம்மைத் தேடி வரும் என யோசியுங்கள்!'' என்று கோமதி பேசப் பேச, மொத்த பெண்களும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சகல ஐஸ்வரியங்களும் தேடி வரும்!’

''இதோ... கோமதி அம்பாள் சந்நிதியில், எத்தனையோ முறை பேசியிருக்கிறேன். இந்த முறை சக்திவிகடனுக்காகப் பேசுகிற நினைப்பே, என்னை இன்னும் சிலிர்ப்பு அடையச் செய்கிறது. எந்த எதிர்பார்ப்புமின்றி, உங்களுக்காக, உங்கள் குடும்ப நலனுக்காகச் செய்யப்படும் விளக்கு பூஜை, நூறு மடங்கு பலன்களை உங்களுக்கு வாரி வழங்கப் போகிறது!'' என்று கோமதி பேசியதும், நெகிழ்ந்துபோன பெண்கள், ஆர்ப்பரிப்புடன் கைதட்டினார்கள்.

நெல்லை என்றாலே, காந்திமதி அம்பாள் நினைவுக்கு வருவார். இந்தக் கோயிலில் ஸ்ரீகோமதி அம்பாள். எனவே, பூஜைக்கு வந்திருந்தவர்களில், கோமதி எனும் பெயர் கொண்ட இருவரையும், காந்திமதி எனும் பெயர் கொண்ட இருவரையும் அழைத்து, அவர்களைக்கொண்டே சிறப்புப் பேச்சாளருக்கு நினைவுப் பரிசு வழங்கச் செய்தோம். கூட்டம் மேலும் உற்சாகமானது. அத்துடன், இந்தக் கோயிலைப் புனரமைப்பு செய்து, தினமும் சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு என நடத்தி வரும் திருச் சிற்றம்பலம் அறக்கட்டளையினரை அழைத்து, அவர்களைப் பாராட்டிப் பேச... கூட்டத்தில் இருந்து இன்னும் பலமாக கரவொலி எழுந்தது.

சென்னை போரூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ''என் அண்ணனுக்கு இன்னும் கல்யாணமாகலை. அவனுக்காகத்தான் வேண்டிக்கிட்டேன்'' என்றார். அருணாவதி என்பவரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் வந்திருப்பதாக பிரேமா, சாந்தி, மாரியம்மாள், மகேஸ்வரி ஆகியோர் தெரிவித்தனர். இந்தக் கோயிலுக்கு தினமும் வந்து திருமுறை பாடுவார்களாம் இவர்கள். சக்தி எனும் சிறுமி, ''விளக்கு பூஜையில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை'' என்று பேசிவிட்டு, அழகாகப் பாடிச் சென்றார். நிறைவாக, ''எல்லா ஊரிலும் மழை பெய்து  காடு-கரையெல்லாம் நிறையட்டும். அதற்காக வேண்டிக் கொள்வோம்'' என்று வாசகி நாகசுந்தரம் சொல்ல... அதை ஆமோதித்தபடி, மழைக்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர், வாசகிகள்.

பிரார்த்தனை நிறைவேறட்டும். எல்லோரின் எண்ணப்படி, காடு-கரையெல்லாம் நிறையட்டும்!

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism