Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

Published:Updated:
சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

பிரபாச க்ஷேத்திரம்!

குஜராத் மாநிலம், சோம்நாத் திருத்தலத்துக்கு அருகில் உள்ளது பிரபாச தீர்த்தம். ஸ்ரீகிருஷ்ண அவதாரம் முடிவுறும் தருணத்தில், பகவான் இந்த தீர்த்த தலத்துக்கு வந்து, தன்னுடைய பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செவ்வனே செய்து முடித்ததாகவும், அதன் பிறகே பகவான் வைகுண்டம் அடைந்ததாகவும் தலபுராணம் சொல்கிறது. கபிலா, ஹிரண், சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இந்த புண்ணிய சங்கமம், அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு நிகராகப் போற்றப்படுகிறது. அர்ஜுனனும் இந்தத் தலத்தில்தான் ஸ்ரீகிருஷ்ணருக்குக் காரியம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இதன் கரையில் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவது விசேஷம்! இதனால் நம் முன்னோர் மோட்சப் பிராப்தி அடைவதுடன், நமது சந்ததியையும் வாழ்வாங்கு வாழ வைப்பர் என்பது நம்பிக்கை. ஆடி, தை மற்றும் மஹாளயபட்ச அமாவாசை தருணங்களில் எண்ணற்ற பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து, முன்னோர் கடனை நிறைவேற்றிச் செல்கிறார்கள். ரயிலில் பயணித்து குஜராத் மாநிலம், சோம்நாத் - வேராவெல் எனும் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் பிரபாச க்ஷேத்திரத்தை அடையலாம்.

- மாலதி சந்திரசேகரன், சென்னை-42

அகத்தீஸ்வரருக்கு பிரம்மோற்சவம்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅகிலாண் டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில். குறுநில மன்னன் ஒருவனின் சூலைநோயை நீக்கி அருளிய புண்ணிய தலம் இது.

புண்ணிய பாரதத்தின் தொண்டை மண்டலத்தில் பொம்மராஜ புரம் எனும் பகுதியை ஆட்சிசெய்தவன் பொம்மராஜன். வைணவத்தில் பற்றுக்கொண்டவன்.

சூலை நோயால் அவதியுற்ற இந்த மன்னன், தனது பிணியைப் போக்கி அருளும்படி அனுதினமும் திருமாலை மனமுருகி வழிபட்டு வந்தான். ஒருநாள் இவனது கனவில் தோன்றிய பெருமாள், 'இந்தத் தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி, இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியையும் ஸ்ரீஅகத்தீஸ்வரரையும் வழிபட்டால், நோய் நீங்கி நலம்பெறுவாய்’ என்று அருள்புரிந்தார். அதன்படியே செய்து நோய் நீங்கப்பெற்றான் பொம்மராஜன்.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஜய வருடம், ஆனி மாதம் 23-ம் நாள் துவங்கி, ஆடி 3-ம் தேதி வரை (7.7.14 முதல் 19.7.14 வரை) தட்சிணாயன புண்ணிய கால பிரம் மோற்ஸவ பெருவிழா நடைபெறவுள்ளது. பக்தர்கள் யாவரும் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் சிறக்கலாம்.

வீட்டில் விளக்கேற்றும்போது...

அனுதினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றும் போதும், ஏற்றியபிறகும் கீழ்க்காணும் பாடலைப் பாடி வழிபடுவது விசேஷம்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

திருவிளக்கு ஏற்றும்போது...

விளக்கினை யேற்றி வெளியே அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே

- எனும் திருமூலரின் பாடலைப் பாட வேண்டும்.

திருவிளக்கு ஏற்றிய பிறகு...

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே

- எனும்  திருநாவுக்கரசரின் பாடலைப் பாடி வழிபட, வீட்டில் இறையருள் நிறையும்.

நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ளும்போது...

திருநீற்றின் மகிமையைச் சொல்லும், கீழ்க்காணும் திருமூலரின்  பாடலைப் பாடிப் பலன் பெறலாம்.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மானதிருவடி சேர்வரே

- ’சித்தாந்த ரத்தினம்’ சிவ அ.நீலமேகம்

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

உங்களுக்குத் தெரியுமா?

ராமாயணத்தில் வில்லை ஒடித்தது ஜடாயு; வளைத்தது ஸ்ரீராமன்; இழந்தது பரசுராமன்.

ராமாயணத்தில் அரசியலில் தேர்ந்தவர் களாகத் திகழ்ந்த பெண்கள்... கைகேயி, தாரை.

ண் தெய்வங்களை பாதம் முதல் தலை வரையிலும், பெண் தெய்வங்களை தலையிலிருந்து பாதம் வரையிலும் தியானிப்பது சம்பிரதாயம்.

மிழகத்தில், குழந்தை வரம் வேண்டி பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபடுவதுபோன்று, மேற்கு ஆப்பிரிக்காவில் குழந்தை வரத்துக்காக 'பாம்’ என்ற மரங்களைச் சுற்றிவந்து வேண்டிக் கொள்கிறார்கள்.

பெண்களுக்கு மங்கலம் அளிப்பது குங்குமம். அதில் மஞ்சளும் கலந்திருப்பதால், விஷக் கிருமிகளைக் கொல்லும் தன்மையும் குங்குமத்துக்கு உண்டு.

- குமுதினி வேணுகோபால், கோவை-2

கேட்கிறார்கள்...

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்.

பிள்ளையார் பெருமானைத் துதிக்கும் இந்தப் பாடலில், 'நந்தி மகன்தனை’ என்று வருகிறதே? சிவமைந்தனான கணபதியை 'நந்தி மகன்தனை’ என்று விளிப்பது ஏன்? தெரிந்தவர்கள் விளக்கி உதவுங்களேன்.

- பிரியா கோவிந்தன், முசிறி

சொல்கிறார்கள்...

சக்தி விகடன் 8.7.14 இதழில், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சொல்லவேண்டிய ஸ்லோகம் குறித்து வள்ளியூர் வாசகர் கே.ராஜகோபால் கேட்டிருந்தார். அந்த ஸ்லோகத்துக்கு 'அப்யங்க ஸ்நான ஸ்லோகம்’ என்று பெயர். எண்ணெய் தேய்த்துக்கொள்வதற்கு முன் இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டு 7 சொட்டு எண்ணெயை 7 இடங்களில் விடவேண்டும்.

அப்யங்க ஸ்நான ஸ்லோகம்:

அஸ்வத்தாமா பலிர்வ்யாஸோ:  
                 ஹநூமாம்ஸ்ச விபீஷண:
க்ருப: பரஸுராமஸ்ச ஸப்தைதே சிரஞ்ஜீவின:

சிரஞ்ஜீவித்துவ வரம் பெற்ற அஸ்வத்தாமா, பலி, வியாசர், அனுமன், விபீஷணன், கிருபர், பரசுராமர் ஆகிய ஏழு பேரை நினைவுகூர்ந்து போற்றும் ஸ்லோகம் இது என்பது, இந்த ஸ்லோகத்தைப் படிக்கும்போதே புரியும்.

- கே.வேங்கடாசலம், சென்னை-44

இதே தகவலை கோவை வாசகர் சி.எச்.ரகூத்தமனும்   அளித்திருக்கிறார்.

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism