ஆடியில் வழிபட்டால்... பிரிந்த தம்பதி சேருவர்! திருமால்பூர் கருணைநாயகியின் கருணை வி.ராம்ஜி
கடவுள் விக்கிரகங்களின் கைகளில் உள்ள ஆயுதங்கள், நம்மை வதைப்பதற்கோ அழிப்பதற்கோ அல்ல; தீய சக்திகளை அழிப்பதற்கும் துர்தேவதைகளை விரட்டுவதற்குமே கடவுளர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறார்கள். அத்தனை ஆயுதங்களையும் தன் கரங்களில் வைத்திருந்தாலும், கடவுள் எப்போதுமே நமக்கு நல்லதுதான் செய்வார்.
தெய்வம் என்பது அன்பின் உறைவிடம். அதனால்தான் 'அன்பே கடவுள்’ என்றும், 'அன்பே சிவம்’ என்றும் சொல்கிறோம். அன்பையும் கருணையையும் அள்ளி வழங்கும் பெற்றோர்கள் அவர்கள். அம்மையும் அப்பனுமாகிய சிவ- பார்வதி மட்டுமின்றி, எல்லா கடவுளர்களுமே நமக்கு அருள் வழங்கி, கருணையுடன் வழிநடத்துகிறார்கள்.
அப்படியிருக்க, கடவுளின் பெயரே கருணை கொண்டு விளங்கினால்... சக்தியின் திருநாமமே கருணை எனும் அடைமொழியுடன் இருந்தால், சிலிர்த்துப் போகமாட்டோமா நாம்?
காஞ்சியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருமால்பூர். இங்கு அருளும் உமையவளின் திருநாமம்- ஸ்ரீஅஞ்சனாட்சி என்கிற கருணைநாயகி அம்பாள். இவளின் சந்நிதிக்கு வந்து நின்று, அம்பிகையின் கண்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். அவளிடமிருந்து கருணை ஊற்றெனப் பொங்கிப் பிரவகிப்பதை உணரமுடியும் உங்களால்! தாயுள்ளத்துடன் மெல்லிய புன்னகையும் அன்பையும் சேர்த்து நம்மை வரவேற்பது போலான கருணைக்குச் சொந்தக்காரி அவள்.

'நல்லது நடக்க வேண்டும் எனும் கவலையுடனும் ஏக்கத்துடனும் நம்மைத் தேடி வரும் அடியவர்களுக்கு அருள்புரியுங்கள் ஸ்வாமி’ என்று ஸ்ரீஅஞ்சனாட்சி என்கிற ஸ்ரீகருணைநாயகி, தன் கணவரான ஸ்ரீமணிகண்டீஸ் வரரைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறாள் என்பதாக ஐதீகம்!
பையா ரும்மர வங்கொடு ஆட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே
- என்று இங்கு வந்து இறைவனை மனமுருகிப் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர் பெருமான்.
''கரிய நஞ்சை உண்டு திருமாற்பேற்றில் எழுந்தருளி விளங்கும் என் ஐயனே! உமது அடியார்கள் உம்மைப் 'படம் பொருந்திய பாம்பை ஆட்டும் கையை உடையவனே’ என்று வணங்கித் தொழுவார்கள். அவர்களுக்கு அருள்வாயாக!'' என்று ஞானசம்பந்தர் சிவனடியார்கள் அனைவருக்காகவும் உருகி வேண்டுகோள் வைக்கிறார் சிவனாரிடம்.

உரையா தாரில்லை யொன்றுநின் றன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
தீரையார் பாலியின் றென்கரை மாற்பேற்
றரையா னேயருள் நல்கிடே.
'அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென் கரையில் திகழும் திருமாற்பேற்று அரசரே! உன் இயல்புகளைக் கூறிப் புகழாதவரும் பரவாதவரும் எவரும் இல்லை. அவர்களுக்கு அருள்வாயாக!’ என்கிறார் ஞானசம்பந்தர்.
ஞானசம்பந்தப் பெருமான் எப்படி நமமைப் போன்ற அடியவர்களுக்காக உருகி உருகிப் பாடினாரோ, நமக்கு அருள் புரியச் சொல்லிப் பாட்டின் மூலமே சிவனாரிடம் கோரிக்கை விடுத்தாரோ, அதேபோல் சிவனாரில் பாதியான உமையவளும் நமக்காக ஈசனிடம் அருளச் சொல்லி வேண்டுகிறாள் இங்கே.
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பிகைக்கு புடவை சார்த்தி, அரளிப் பூமாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், மிகுந்த பலன் கிடைக்கும் என்பார்கள். தடைப்பட்ட திருமணத்தால் தவித்து மருகுவோர் இங்கு வந்து கோயிலுக்குள் நுழைந்ததுமே அவர்களின் பூர்வ ஜென்மப் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்!
''இங்கு வந்து அம்பிகையை மனமுருகப் பிரார்த்தித்துவிட்டு, ஸ்ரீமணிகண்டீஸ்வரரையும் வேண்டிக்கொண்டால், பாவங்கள் விலகும்; தடைகள் அகலும்; விரைவில் தாலி பாக்கியம் கிடைக்கும். சக்தி சொரூபமாக நிற்கும் அம்பாள், இங்கே சிவனாருக்கு இணையாகவும் நின்று தரிசனம் தருவதாகச் சொல்கிறது புராணம். எனவே, அம்பாளை எப்போது, எந்த நாளில் வேண்டுமானாலும் வணங்கித் தொழலாம். ஆனாலும், சக்திக்கு உகந்த ஆடி மாதத்தில் அம்பாளைத் தரிசிப்பது, கூடுதல் பலனைக் கொடுக்கும்'' என்கிறார் கோயிலின் சண்முக குருக்கள்
ஆடி மாதத்திலும், நவராத்திரி காலங்களிலும், மார்கழியிலும் ஸ்ரீஅஞ்சனாட்சி என்கிற கருணைநாயகியைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தடைப்பட்ட திருமணம் நடைபெற வேண்டுமே எனத் தவிப்பவர்களும், கல்யாணமாகி பல வருடங்களாகியும் குழந்தை வரம் இல்லையே என ஏங்குபவர்களும், கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுப் பிரிந்து வாழ்பவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொண்டு, சீக்கிரமே தங்கள் பிரச்னைகள் தீர்ந்துபோக, மீண்டும் வந்து நெகிழ்ச்சியும் கண்ணீருமாகத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.
''என் தோழி ஒருத்தி, வேலூரில் இருக்கிறாள். கல்யாணமாகி இரண்டாவது வருடமே, கணவருக்கும் இவளுக்குமான சண்டையில், பிறந்தவீட்டுக்கு வந்துவிட்டாள். கடந்த 2012-ம் வருடம், ஆடி மாதத்தில் ஒருநாள், அருகில் உள்ள குரு ஸ்தலமான கோவிந்தவாடிக்கு அவளும் நானுமாகச் சென்று, ஸ்வாமி தரிசனம் செய்தோம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் தரிசனத்தை முடித்துவிட்டு காரில் வந்துகொண்டிருந்தபோது, வழியில் டூ-வீலரில் வந்த தம்பதி எங்களை நிறுத்தச் சொல்லி, கை காட்டினார்கள். 'திருமால்பூர் சிவன் கோயிலுக்கு எப்படிப் போகணும்?’ என்று எங்களிடம் வழி கேட்டார்கள். எங்களுக்குத் திருமால்பூரும் தெரியாது; அங்கே உள்ள சிவாலயம் பற்றியும் அப்போது அறிந்திருக்கவில்லை நாங்கள். எனவே, அவர்கள் வேறு யாரையோ நிறுத்தி, வழி கேட்டுக் கிளம்பிச் சென்றார்கள்.
'பொதுவாக காரில் வருபவர்கள்தான் டூவீலர்காரர்களை நிறுத்தி வழி கேட்பார்கள். ஆனால், இங்கே டூவீலரில் வந்தவர், காரில் வந்த நம்மிடம் வழி கேட்கிறாரே?! அப்படியெனில், இது இறைவனின் கட்டளைபோலும்!’ என்று எனக்குள் வியப்பும் சிலிர்ப்புமாக ஒரு யோசனை ஓடியது. உடனே இதை என் குடும்பத்தாரிடமும் தோழியிடமும் சொல்லி, திருமால்பூர் சிவாலயம் போய் வரலாம் என்று தெரிவித்தேன். அப்படியே உடனே வழி விசாரித்துக் கிளம்பிச் சென்றோம்.

அற்புதமான கோயில். ஒவ்வொரு சந்நிதியிலும் சாந்நித்தியங்கள் நிறைந்திருப்பதை நன்றாகவே உணர முடிந்தது. அம்பாளின் சந்நிதிக்கு வந்தோம். அவள் அழகில் சொக்கிப் போனோம். 'அம்பாள் கருணையே உருவானவள். மனசார வேண்டிக்கோங்க. பிரிஞ்ச தம்பதியைக்கூட சேர்த்து வைச்சிடுவா, அஞ்சனாட்சி’ என்று யாரோ யாரிடமோ சொல்லிட்டிருந்தது காதில் விழுந்தது. அது தனக்கே சொல்லப்பட்ட ஆசீர்வாதம் போல, என் தோழிக்கு அழுகையே வந்துவிட்டது. கண்ணீருடன் மனமுருகி வேண்டிக் கொண்டாள். நானும் அவளுக்காகப் பிரார்த்தனை செய்தேன்.
அதையடுத்து, நான்கே மாதத்தில் பிரச்னைகள் யாவும் தீர்ந்து, கணவருடன் சேர்ந்து வாழத் துவங்கினாள் என் தோழி.
அஞ்சனாட்சியின் கருணைக்கும் அருளுக்கும் எல்லையே இல்லை!'' என்று சிலிர்ப்பு மாறாமல் சொல்கிறார் ரங்கநாயகி கமலக்கண்ணன். தற்போது காஞ்சி புரத்தில் வசித்து வருகிறார் இவர்.
பிள்ளை அழுதால், பெற்றவளுக்குத் தாங்காது அல்லவா! அதுபோல், இங்கு சந்நிதிக்கு வந்து தங்கள் குறைகளைச் சொல்லி அழும் பக்தர்களை, அவர்களின் கண்ணீரை, துக்கத்தை, வேதனையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டாள் அன்னை அஞ்சனாட்சி. உடனே அருள்பாலித்து, அமைதியுடனும் ஆனந்தத்துடனும் வாழச் செய்து அருளுவாள் அம்பிகை.
அவளின் சந்நிதிக்கு வந்து நின்று பாருங்கள். நீங்களும் உணர்வீர்கள்; சிலிர்ப்பீர்கள்.
(வேண்டுவோம்)
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்