Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சமையல்... சாம்பார்... ஆன்மிகம்!

மரம், செடி, கொடி, மலைகள், நதிகள்... என இயற்கையை இறையாக பாவித்து, ஒவ்வொன்றின் மூலமும் தத்துவமும் பாடமும் கற்பித்த நம் முன்னோர்கள் சமையல் வாயிலாகவும் சில நல்ல விஷயங்களைச் சொல்லி வைத்துள்ளார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவை என்னென்ன? தெரிந்துகொள்வோமா?

வாழை இலை: நாம் நிலையான ஞானத்தை இந்தப் பிறவியிலேயே அடையாவிட்டால், வாழையடி வாழையென பிறவி தொடரும் என்பதை உணர்த்துகிறது.

சாதம்: வெள்ளை வெளேரென்ற அரிசிச் சோறு, நம் மனம் தூய்மையாகவும் கல்மிஷமில்லாமலும் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

கூட்டு: தினமும் இறைவனைத் தியானிப்பதற்கான நேரத்தைக் கூட்டிக் கொள்!

சாம்பார்: சாதத்துடன் கலந்துண்ணத் தகுதியான ருசியைக் கொடுப்பது போன்று, வாழ்க்கையுடன் உபகார சிந்தனையைக் கலந்து வாழ்ந்திட, இப்பிறவி ருசிக்கும்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

ரசம்: ரசம் என்றால் சாரம். வாழ்க்கையின் சாரம் இறைவனை அடைவதே!

அப்பளம்: இது நொறுங்கும் தன்மையுடையது. இறையனுகூலத்தால் நம் வாழ்வின் தீவினைகள் நொறுங்கும் என்பதை இது குறிக்கிறது.

வடை மற்றும் வறுவல்: பொரிக்கும்போது ஏற்படும் சத்தம், பொரித்த பின்னர் அடங்கிவிடும். அஞ்ஞானியான ஒருவன் ஞானியான பிறகு அடையும் மௌனத்தை, பக்குவத்தை இது குறிக்கிறது.

லட்டு: பல நூறு முத்துக்களால் இணைந்த பெரும் முத்து. அதுபோன்று, பல ஆயிரம் அனுபவங்களால் ஆனது நம் வாழ்க்கை!

நெய்: பதார்த்தங்களின் காரத்தைக் குறைத்து நெய் சுவையூட்டுவது போன்று, வாழ்வில் ஏற்படும் துன்பங்களை நமது சாந்தம் நீக்கிச் சுவையூட்டும்.

ஊறுகாய்: கொஞ்சமாக வைத்தால் சிறப்பு பெறுவது போல், கோபத்தை அளவோடு வைத்துக்கொண்டால் சிறப்பு.

பாயசம்: பிறவித் துன்பத்திலிருந்து விடுபட்டு, அதன் பிறகு ஏற்படும் பேரின்ப நிலைதான் மிக இனியது!

- மீனா. சுவர்ணா, உடுமலைப்பேட்டை

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

ஆலயங்கள்... ஆச்சரியங்கள்!

நாகர்கோவில் நகரின் ஒரு பகுதியாகத் திகழ்வது கோட்டாறு. இங்கு பிரசித்திபெற்றது, அருள்மிகு தேசிகவிநாயகர் ஆலயம். சித்திரை முதல் நாளன்று பக்தர்களுக்கு மாம்பழப் பிரசாதம் தரப்படுவது, இக்கோயிலின் சிறப்பம்சம். மேலும், இங்குள்ள பிள்ளை யாரின் பெயரைத்தான் தங்கள் பிள்ளைக்கு வைத்தார்கள் கவிமணியின் பெற்றோர். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பிறந்த தேரூர், கோட்டாறு அருகில்தான் உள்ளது.

அழகர்கோயில் சுந்தர பாண்டியனார் மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 தூண்களைக் காணலாம். இந்தத் தூண்களை விரல்களால் தட்டினால், காதுக்கினிய இசை எழும்புகிறது!

திருவிடைமருதூரில், இறைவன் சந்நிதியில் ஆவுடையாரைச் சுற்றி நின்று தேவர்கள் வேதம் இசைப்பதாக ஐதீகம். சந்நிதியின் பின்புறச் சுவரில் சில துளைகள் உள்ளன. இதில் காதை வைத்து உற்றுக் கேட்டால், வேதங்கள் ஓதுவது போன்ற மெல்லிய ஒலியைக் கேட்கலாம் என்பது நம்பிக்கை.ஆலயங்கள் சிலவற்றில் சூரியன் தன் கிரணங்களால் இறை மூர்த்தங்களைத் தழுவி பூஜிக்கும் தகவலை அறிந்திருப் போம். அதுபோல், திங்களூர் ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தில் வருடத்துக்கு இருமுறை சந்திரன் பூஜிக்கிறான். பங்குனி, புரட்டாசி மாதங்களில்... பௌர்ணமி, அதற்கு முதல் நாள், மறுநாள் என மூன்று தினங்கள் தன் கிரணங்களால் ஸ்வாமியை பூஜிக்கிறான் சந்திரன்.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

நூல் அழகு பத்து!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

ரு நூலுக்குப் பத்து விஷயங்கள் அழகு சேர்க்கவேண்டும். அவை என்னென்ன தெரியுமா?

1. சுருங்கச் சொல்லல்

2. விளங்கவைத்தல்

3. படிப்பவர்க்கு இனிமை

4. நல்ல சொற்கள் அமைந்திருத்தல்

5. இனிய ஓசையுடைமை

6. ஆழமுடைத்தாதல்

7. பொருள்களை முறையுடன் அமைத்தல்

8. உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறுபடாமை

9. சிறந்த பொருளுரைத்தல்

10. விளக்கமான உதாரணங்கள்

- மகாலக்ஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

கேட்கிறார்கள்...

தென்தமிழகத்தில் சுடலைமாட ஸ்வாமி வழிபாடு பிரசித்தம்.  சிறு வயதில் கோயில் கொடை விழாக்களில், இவரது சரிதத்தை வில்லுப்பாட்டாகக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். இப்போது அது முழுமையாக நினைவில் இல்லை. சுடலைமாட ஸ்வாமியின் சரிதம் குறித்த தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், அந்த ஸ்வாமியை வழிபட்டுவரும் என்னைப் போன்றோருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

சொல்கிறார்கள்...

'ஐந்து கரத்தனை...’ எனத் தொடங்கும் விநாயகர் துதிப்பாடலில், 'நந்திமகன்தனை’ என்று வருகிறது. 'சிவமைந்தனான விநாயகரை நந்திமகன்தனை என்று விளிப்பது ஏன்?’ என்று, கடந்த சக்தி விகடன் இதழில் முசிறி வாசகி பிரியாகோவிந்தன் கேட்டிருந்தார்.

இதுகுறித்து ஆன்மிக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான பி.என்.பரசுராமன் தந்த விளக்கம் இங்கே...

பிள்ளையார் பெருமானைப் போற்றும் அருமையான இந்தப் பாடலைப் பாடியருளியது திருமூலர். இந்தப் பாடலில் மட்டுமின்றி இன்னும் பல பாடல்களில் சிவபெருமானை 'நந்தி’ என்றே விளிக்கிறார் திருமூலர். 'நந்தி’ என்றால் தர்மம் என்று பொருள். சிவபிரானின் தர்ம பரிபாலனத்தை உணர்த்துவதே நந்தி கணம்  (ரிஷப வாகனம்) என்பது பெரியோர்களின் கருத்து.

ஆக, உலகின் தர்ம பரிபாலனத்தைக் கையில் வைத்திருக்கும் சிவபெருமானை 'நந்தி’ எனச் சுட்டுகிறார் திருமூலர். அந்த வகையில் அவருடைய பிள்ளையான கணபதியை, 'நந்திமகன்தனை...’ என்று  குறிப்பிடுகிறார்.

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.