Published:Updated:

'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்!’

143-வது திருவிளக்கு பூஜைவாசகிகளின் கூட்டுப் பிரார்த்தனை வி.ராம்ஜி

''கடவுள்மீது கொண்டிருக்கிற பக்தியை, அன்பு என்றும், காதல் என்றும்கூடச் சொல்லலாம். 143 என்ற எண்ணுக்கு 'ஐ லவ் யூ’ என்று அர்த்தம் சொல்வார்கள் இந்தக் காலத்துப் பிள்ளைகள். அதனால்தான், ரங்கமன்னாரை உருகி உருகிக் காதலித்த ஸ்ரீஆண்டாள்கூட திருவாய்மொழியில் 143 பாடல்கள் எழுதியிருக்கிறாளோ என்னவோ! அதேபோல, சக்திவிகடனின் 143-வது விளக்கு பூஜையில் கலந்துகொண்டு பேசுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!'' என்று தமிழ்ப் பேராசிரியர் இரா.மோகன் பேசத் தொடங்கியதுமே, பலத்த கரவொலி எழுப்பினார்கள் பெண்கள்.

மதுரை, திருவேடகத்தில் உள்ள ஸ்ரீஏலவார்குழலி அம்பாள் சமேத ஸ்ரீஏடகநாத ஸ்வாமி கோயிலில், கடந்த 15.7.14 அன்று, சக்திவிகடனின் 143-வது விளக்கு பூஜை நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் இரா.மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்!’

''கல்வி விளக்கை ஏற்றி வைத்த கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் இன்று. தவிர, ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி இன்றைக்கு. இந்த நாளில், இப்படியொரு பூஜை நடப்பது, மனத்துக்கு நிறைவாக இருக்கிறது.

விளக்கேற்றுவது உத்தமமான விஷயம். அதிலும் பெண்கள் விளக்கேற்றுவதும் பூஜை செய்வதும் மிகுந்த பலன் தரக்கூடிய நற்காரியம். ஞானம் என்பது வேறு; அறிவு என்பது வேறு. பெண்களைச் சக்தி என்கிறோம். ஏனென்றால், அவர்கள் ஞானம் மிக்கவர்கள். இல்லத்து இருளையும் உள்ளத்து மருளையும் அகற்றும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது.

'இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே’

என்று போற்றுகிறார் திருநாவுக்கரசர் பெருமான்'' என்று பேராசிரியர் மோகன் பேசப் பேச, மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தது கூட்டம்.

'ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் நிரம்பட்டும்!’

மீனாட்சி, ஏலவார்குழலி எனும் பெயர் கொண்ட வாசகியரை அழைத்தோம். பேராசிரியரின் பேச்சை, மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, அவரின் பேச்சுக்கு ஏற்ப முகபாவங்களை மாற்றியபடி மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டுக்கொண்டிருந்த மாலதி எனும் வாசகியையும் அழைத்தோம். இந்த மூவரைக் கொண்டு, பேராசிரியர் மோகனுக்கு நினைவுப் பரிசு வழங்கினோம். இந்தக் கோயிலுக்கு தினமும் காலையில் முதல் ஆளாக வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் மாலதி என்று சொல்லி உற்சாகமாகக் கைத்தட்டி ஆமோதித்தார்கள் பெண்கள்.

நெல்லை காசி விஸ்வநாதன் எனும் அன்பர், ரசாயனம் கலக்காத விபூதி மற்றும் குங்குமப் பாக்கெட்டுகளை சக்திவிகடன் வாசகர்களுக்கு வழங்கும்படி அளித்திருந்தார். அவற்றை வந்திருந்த பெண்களுக்கு வழங்கினோம்.

சரஸ்வதி, மல்லிகா, மாலதி முதலான வாசகிகள் பலரும், ''எங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பிரார்த்தனைகள் உண்டு என்றாலும், இங்கே விளக்கு பூஜையில் பொதுப் பிரார்த்தனையைத்தான் முன்வைத்தோம். சோழவந்தான், திருவேடகம் போன்ற ஊர்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளன. ஏடு ஒதுங்கிய வைகையில் தண்ணீர் பாயவேண்டும். எங்கள் ஊர்கள் மட்டுமின்றி, மொத்தத் தமிழகத்திலும் காடு-கரை யாவும் மழையால் நிரம்ப வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். அதுதான் எங்கள் வேண்டுதல்'' என்று தெரிவித்தார்கள்.

அவர்களின் எண்ணம் போலவே, தமிழகம் முழுவதும் மழை பெய்து, விவசாயம் செழிக்க, ஏடகநாதர் துணை நிற்பார்.

படங்கள்: பா.காளிமுத்து