மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 36

துணையாக இருக்கிறார்... துணையும் தந்தார்..!வி.ராம்ஜி

''அடுத்தவருக்குச் செய்யும் விஷயத்தை உதவின்னு சொல்றோம். கடவுளுக்குச் செய்யும் விஷயத்தை சேவைன்னு பெருமையா சொல்லிக்கிறோம். என்னைப் பொறுத்தவரை, சக மனிதர்களுக்குச் செய்யறதாகட்டும், கடவுளுக்குச் செய்யறதாகட்டும்... இதெல்லாமே நம் எந்த ஜென்மத்துக் கர்ம வினையோ... அதெல்லாம் செய்யறதுக்குக் கிடைச்சா வாய்ப்பாதான் நான் நினைக்கிறேன்''என்று உணர்ச்சி பொங்கச் சொல்லும் ரமேஷ்குமார், திருமால்பூர் ஸ்ரீமணிகண்டீஸ்வரரின் பரம பக்தர். சென்னையில் வசிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள திருமால்பூர் ஸ்ரீமணிகண்டீஸ்வரர் கோயிலுக்கு, நினைக்கும்போதெல்லாம் வந்துவிடுவாராம் ரமேஷ்குமார். குறிப்பாக, மாதத்தில் ஒரு நாளேனும் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டுப் பல மணி நேரம் கோயிலில் இருந்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரமேஷ்.

இதோ... எந்தன் தெய்வம்! - 36

''மூணு வருஷத்துக்கு முன்னாடி, இந்தப் பக்கம் ஒரு நாலஞ்சு கோயிலைப் பாக்கறதுக்காக வந்தேன். அப்படியே, திருமால்பூர் கோயிலுக்கும் யதேச்சையா வந்தேன். கோயிலும் கோபுரமும், மிகப் பெரிய வாசலும், திருக்குளமும் ஒரு ஈர்ப்பைக் கொடுத்துச்சு. உள்ளே நுழைஞ்சு, அம்பாளையும் ஸ்வாமியையும் தரிசனம் பண்ணிட்டு வீட்டுக்கு வந்தா, ஏதோ... அப்பாவையும் அம்மாவையும் பார்த்துட்டு வந்த மாதிரி ஒரு நிறைவு; நிம்மதி! கூடவே, பெத்தவங்களை விட்டுட்டு இவ்ளோ தூரம் பிரிஞ்சு வந்துட்டமேனு மனசுல ஒரு பாரம்! அதுக்கப்புறம் வீட்ல, வேலை செய்ற இடத்துல, உறவினர்கள்கிட்ட, நண்பர்கள்கிட்டன்னு யார் கிட்ட பேசினாலும், திருமால்பூரும் மணிகண்டீஸ்வரரும் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளுமே என் டாப்பிக்கா இருந்துச்சு. அந்த அளவுக்கு கோயில் என் மனசுல அழுத்தமான இடம் பிடிச்சிடுச்சு!'' என்று சிலிர்ப்புடன் சொல்லும் ரமேஷ், மாதாமாதம் கோயிலுக்குத் தேவையான எண்ணெய், திரி ஆகியவற்றை வழங்கிக்கொண்டிருக்கிறார்.

''அங்கே கை கூப்பியபடி நிக்கிற திருமாலாகட்டும், உள்ளே லிங்க ரூபமா இருந்து அருள்பாலிக்கிற ஸ்ரீமணிகண்டீஸ்வரராகட்டும், கருணை முகத்தோட நிக்கிற ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளாகட்டும்... நானாக எனக்கு இதைக் கொடு, அதைக் கொடுன்னு கேட்கலேன்னாலும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என்ன தேவையோ அதையெல்லாம் குறைவறக் கொடுத்து எங்களை வாழ வைச்சுக்கிட்டிருக்காங்கன்னுதான் சொல்லணும்! 'இது மணிகண்டீஸ்வரர் காசு’ன்னு மாசாமாசம் ஒரு தொகையை எடுத்து வைச்சு, இதோ... இப்ப கோயில்ல 'போர்’ போட்டு, மோட்டார் வாங்கறதுக்கு அந்தத் தொகையைக் கொடுத்தேன். அப்படிக் கொடுக்கற அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, அதுக்கு சிவனாரின் அருள்தான் காரணம்!'' என்கிறார் ரமேஷ்.

உண்மைதான். சக்தியும் சாந்நித்தியமும் தவழும் திருமால்பூர் தலத்துக்கு வாழ்வில் ஒருமுறையேனும் வந்து தரிசித்தால் போதும்... நம் மொத்த சந்ததியும் சிறக்கும்; செழிப்புடன் வாழும்!

இதோ... எந்தன் தெய்வம்! - 36

''இப்ப இருக்கிற சண்முக குருக்கள், அரசுப் பள்ளியில வாத்தியார். சென்னைல வேலை. அவங்க அப்பாவும், அதுக்கு முன்னாடி அவங்க தாத்தாவும்னு பரம்பரை பரம்பரையா இங்கே கோயில்ல பூஜை பண்ணிட்டிருந்தாங்க. சண்முக குருக்களும் லீவு நாள், பண்டிகை நாள், கோயில் திருவிழா நேரங்கள்ல அப்பாவுக்குத் துணையா வந்து, பூஜையெல்லாம் பண்ணுவார். ஆனா, அவர் அப்பாவுக்கு உடம்பு முடியாம போனப்ப பல நாள் லீவு போட்டுட்டு வந்து, தினமும் பூஜை பண்ணிக்கிட்டே அப்பாவையும் பார்த்துக்கிட்டார். அப்புறம், வாத்தியார் உத்தியோகத்தை விட்டுட்டு, கோயில் பூஜைகள்ல முழுசா தன்னை ஈடுபடுத்திக்கிட்டார்'' என்கிறார் கோயிலின் பரம்பரை அறங்காவலர் ஜவகர்.

அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், அனுதினமும் காலையும் மாலையும் என இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் சுடச்சுட, மணக்க மணக்க நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. விசேஷ காலங்களில் அன்பர்கள் சிலரின் உதவியுடன் அதிகப்படியான நைவேத்தியமும் அன்னதானப் பிரசாதமும் நடைபெறுகின்றன. ஆனாலும், உள்ளடங்கிய கோயில் என்பதால், இப்படியொரு பழைமையான ஆலயம் இருப்பது பலருக்குத் தெரியவில்லை.

''என் ஜாதகத்துல எந்தப் பிரச்னையும் இல்லைன்னாலும் ஏனோ கல்யாணம் தடைப் பட்டு, தள்ளிப் போயிக்கிட்டே இருந்துது. ஆறு மாசத்துக்கு முன்புதான் இங்கே முதன்முதலா வந்தேன். 'எனக்கு நல்லதொரு வாழ்க்கைத்துணை அமையணும்’னு வேண்டிக்கிட்டேன். அதுக்கு அப்புறம் ஆறேழு தடவை வந்துட்டேன். இதோ... அடுத்த மாசம் எனக்குக் கல்யாணம். ஸ்ரீமணிகண்டீஸ்வரரும் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மையும் கொடுத்த வாழ்க்கை இது. கல்யாண மானதும் பெத்தவங்களையும் மனைவியையும் அழைச்சுக்கிட்டு திருமால்பூர் வரணும்'' என்று நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்கிறார் ஜீவன்.

இதோ... எந்தன் தெய்வம்! - 36

'' என் அப்பா அடிக்கடி, 'பாடல் பெற்ற ஸ்தலத்துல, ரொம்ப பவர்ஃபுல்லான கோயில்ல கைங்கர்யம் பண்ற பாக்கியம் கிடைச்சது மகா புண்ணியம். இங்கே இருக்கிற ஸ்வாமி, வரப்பிரசாதி! சைவமும் வைணவமும் இணைஞ்சு, சிவனாரும் பெருமாளும் சேர்ந்து அருள்பாலிக்கிற ஸ்தலம். ஆனா, இத்தனை பெருமைகளோட, புராதனமான கோயில் இருக்குன்னு யாருக்குமே தெரியலை. அந்தக் காலத்துல, திருமால்பூர் கோயில் திருவிழான்னா காஞ்சிபுரம், சென்னை, வேலூர்னு எங்கிருந்தெல்லாமோ ஜனங்க வருவாங்க. அப்ப மாட்டு வண்டிதான் வாகனம். ஆனா, இன்னிக்கு இத்தனை வாகனங்கள் வசதிகள் வந்திருக்கு. ஜனங்களுக்குத்தான் இப்படியொரு கோயில் இருக்கறது தெரியலை’ன்னு சொல்லிண்டே இருப்பார். இதோ... இப்ப எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வர ஆரம்பிச்சிட்டாங்க. திருநெல்வேலி, கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம்னு தினமும் வந்தபடி இருக்காங்க. பெங்களூர்லேருந்து கூட ஒரு வேன்ல பத்துப் பதினஞ்சு பேர், ஸ்வாமிக்கு வஸ்திரம், அம்பாளுக்குப் புடவைல்லாம் வாங்கிண்டு வந்து, அபிஷேகம் பண்ணிட்டுப் போனாங்க. அப்பாவோட ஆசை, இப்ப நிறைவேறிடுச்சு. ஸ்ரீமணி கண்டீஸ்வரர், தன் சாந்நித்தியத்தை இந்த பூலோகத்துக்குக் காட்ட ஆரம் பிச்சிட்டார்'' என்று கண்கலங்கிச் சொல்கிறார் சண்முக குருக்கள்.

'நால்வர் பொற்றாள் போற்றும் மன்றம்’ எனும் அமைப்பு, திருமால்பூர் ஆலயத்தைத் தூய்மைப்படுத்து வதிலும் செப்பனிடுவதிலும் இறங்கியுள்ளது. அமைப்பின் உறுப்பினர்களில் பலர் சென்னையில் வசிக்கிறார்கள். அவர்கள் பத்து நாட்களுக்கு ஒருமுறை, பிரதோஷம் முதலான காலங்கள், முக்கியமான விசேஷமான தினங்கள் ஆகிய தருணங்களில், பூமாலை, நைவேத்தியப் பிரசாதம், அன்னதானம் என வழங்கி வருகிறார்கள். தவிர, விளக்கேற்ற எண்ணெய், ஸ்வாமி அம்பாளுக்கு வஸ்திரங்கள் என வழங்குகிறார்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 36

''திருமால்பூர் கோயிலுக்கு வந்துவிட்டுத் திரும்பும்போதெல்லாம், மனதில் உள்ள கவலைகளும் துக்கங்களும் பறந்தோடிவிடுகின்றன. புத்தியில் தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. நல்ல அதிர்வலைகள் கொண்ட ஆலயம் இது. சிவனாருக்கும் அவர் குடிகொண்டிருக்கிற ஆலயத்துக்கும் தொண்டு செய்வது ஒவ்வொரு சிவனடியாரின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இந்த ஜென்மம் இருக்கும்வரை தொடர்ந்து செயலாற்றுவோம்'' என்கின்றனர் இந்த அமைப்பினர்.

'திருமால்பூர் ஸ்ரீமணிகண்டீஸ்வரா! அந்தத் திருமாலுக்கும் அருளிய கருணாமூர்த்தியே! உன்னை நாடி வருகிற சாமானிய பக்தனையும் அவர்களின் சந்ததியையும் காத்தருள்வாயாக!’ எனும் பிரார்த்தனையுடன் வெளியே வரவும், மழை வெளுத்து வாங்கியது; பூமி குளிர்ந்து போனது.

இங்கே வருவோரின் மனமும் அப்படிக் குளிர்ந்துபோகும் என்பது சத்தியம்!

(வேண்டுவோம்)

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்