மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 37

நகரேஷு காஞ்சி! வி.ராம்ஜி

'கோயில் நகரம்’ என்று தமிழகத்தில் மூன்று நகரங்களைச் சொல்வார்கள். சோழ நாட்டில் கும்பகோணத்தையும், பாண்டிய தேசத்தில் மதுரையையும், தொண்டை நாட்டில் காஞ்சியையும் கோயில் நகரம் என்று பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறது வரலாறு.

காஞ்சிபுரத்தைப் பெருமையுடன் குறிப்பிடும் இன்னொரு வாசகமும் முக்கியத்துவம்

வாய்ந்தது. அந்த வாசகம்... 'நகரேஷ§ காஞ்சி’. அதாவது, நகரங்களில் காஞ்சி மாநகரம் மிகவும் உன்னதமானது, உயர்ந்தது என்று அர்த்தம்.

அடேங்கப்பா... எங்கு திரும்பினாலும் கோயில் கோபுரங்களையும் மதில்களையும் பார்க்கலாம். கோயிலுக்கான திருக்குளத்தையும் தேர் முட்டி எனப்படும் தேர் நிற்கும் இடத்தையும் கவனிக்கலாம். ஒரு ஸ்கேல் வைத்துக் கோடு போட்டதுபோல் ஒரு சாலையோ தெருவோ இருக்கும். அந்தத் தெருவின் வழியே சென்றால், ஒரு கோயில் நுழைவாயில் தென்படும். அப்படியே அந்தக் கோயிலின் மதிலையொட்டியே வந்து, இன்னொரு நேர்க்கோட்டுத் தெருவின் வழியே சென்று அடுத்த தெருவை அடைந்தால், மிகப் பெரிய விஸ்தாரமான அமைப்புடன் இன்னொரு கோயில் முகப்பும், மண்டபமும், கோபுரமும், திருக்குளமும் இருப்பதைத் தரிசிக்கலாம். இப்படி, எங்கு திரும்பினாலும் கோயில் கோபுர தரிசனம் அளிக்கும் நகரம் காஞ்சி.

இதோ... எந்தன் தெய்வம்! - 37

மிகப்பெரிய புண்ணிய க்ஷேத்திரம் இது. சிவாலயத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால், திருச்சி திருவானைக்கா அப்பு க்ஷேத்திரம் (நீர்) என்றும், திருவண்ணாமலை தேஜோ என்று சொல்லப்படும் அக்னித் தலமாகவும், திருக்காளத்தி எனப்படும் காளஹஸ்தி வாயு (காற்று) தலமாகவும், சிதம்பரம் ஆகாச க்ஷேத்திரமாகவும்... இதோ, இந்த காஞ்சி யம்பதி ப்ருத்வி எனப்படும் பூமிக்கு உரிய தலமாகவும் போற்றப்படுகின்றன.

அதுமட்டுமா? ஸ்ரீராமபிரானுக்கு வசிஷ்ட முனிவர் 'சிந்தாமணி’ எனும் தந்திர நூலை உபதேசித் தார். அதில், அயோத்தியை அம்பிகையின் ப்ருத்வி பீடம் எனவும், வடமதுரையை அப்பு பீடம் எனவும், இமய மலையின் மாயாபுரி எனப்படும் ஹரித்துவாரை, தேவியின் தேஜா பீடம் அதாவது அக்னி பீடம் எனவும், காசியை வாயு பீடம் எனவும் போற்றுகிறார். அந்த வரிசையில் இந்த காஞ்சியை அம்பிகையின் ஆகாச பீடமாகக் கொண்டாடுகிறார். அந்த அம்பிகையின் திருநாமம்... ஸ்ரீகாமாட்சி.

'கா’ என்றால் சரஸ்வதி. 'மா’ என்றால் மகா லட்சுமி. அதாவது ஸ்ரீசரஸ்வதி தேவியையும் ஸ்ரீமகாலட்சுமியையும் தன் இரு கண்களாக கொண்டு ஆட்சி செலுத்துபவள் என்று அர்த்தம். அட்சம் என்றால் கண்கள். இந்த ஜென்மத்தில், நம் வாழ்வில் ஒருமுறை, ஒரேயொரு முறை, இவளின் திருச்சந்நிதிக்கு வந்து, இவளின் பார்வைபட நின்றால் போதும்... நம் வாழ்வில் தொட்டதெல்லாம் துலங்கச் செய்து, பெருகிக் கொண்டே இருக்கும்படியான ஞானத்தையும் சகல ஐஸ்வரியங்களையும் வாரி வழங்குவாள் அன்னை என்கிறார்கள் சான்றோர்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 37

காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி என்று இந்தத் தலத்தின் அம்பிகையைக் கொண்டாடுகின்றன, புராணங்கள். அதனால் தான், பாஸ்கரராயரின் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாஷ்யத்திலும், ஸ்ரீஆதிசங்கரரின் லலிதா த்ரிசதி நாமாவிலும், ஸ்ரீலலிதா அஷ்டோத்திர நாமாவிலும் ஸ்ரீகாமாட்சித் தாயின் திருநாமமும் இடம்பெற்று உள்ளது.

காமாட்சியை நம: , காமகோடிகாயை நம: என்று லலிதா சகஸ்ரநாமத்திலும், காமகோடி நிலயாயை: என்று லலிதா த்ரிசதியிலும், காமகோடி மஹாபத்ம:, பீடஸ்தாயை நமோ நம: என்று லலிதா அஷ்டோத்திரத்திலும் ஸ்ரீகாமாட்சி அம்பாளின் திருநாமத்தையும், அவளை வழிபடுவதையும் சொல்லிப் போற்றுவதை அறியலாம்.

மனிதனாகப் பிறந்தவர்களுக்கு நான்கு விஷயங்கள் மிக முக்கியம் என்கின்றன ஞானநூல்கள். அதாவது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய விஷயங்களை ஒருவர் அடைந்தே தீர வேண்டும். அப்படி அடைவதே மனித வாழ்வின் தலையாய கடமை. அந்தக் கடமையைச் செவ்வனே செய்வதே மகா புண்ணியம்.

தர்மம், அர்த்தம், காமம், மோட்சம், தர்மம் எனப்படும் அறத்தின்படி, அறம் காத்து வாழவேண்டும். தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே மனிதர் களின் தலையாய கடமை. ஒரு மனிதரின் புருஷார்த்த குணங்களைச் செம்மையுறச் செய்யவேண்டும். புருஷார்த்த குணம் என்பது பெற்றோரைப் பாதுகாத்தல், மனைவியை நேசித்தல், குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் கற்றுத் தருதல், இல்லத்துக்குத் தேவையான பொருட்களை வழங்குதல் என லௌகீக குணங்களைச் செவ்வனே செய்யவேண்டும். இதுவே அர்த்தம் எனப்படும். அடுத்து, காமம். காமம் என்பது வடமொழிச் சொல். இதற்கு ஆசை என்று பொருள். நம்முடைய ஆசைகளையும் விருப்பங்களையும் தர்மநெறியைக் கடைப்பிடித்துப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்; இந்த உலகுக்கு நாம் வரக் காரணமாக இருந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கும், நம் மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தாருக்கும் உண்மையானவர்களாக இருக்க வேண்டும்; நம்முடைய ஆசைகளை மட்டுமின்றி அடுத்தவர்களின் விருப்பங் களையும் பூர்த்தி செய்யும் குணம் கொண்டவர்களாகவும் விளங்க வேண்டும். மனித ஆசைகளில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது... கடவுளை அடைதல்!

இதோ... எந்தன் தெய்வம்! - 37

காஞ்சி தலத்தை காமகோடிபுரி என்பார்கள். அதனால்தான், தாம் காஞ்சி யில் ஸ்தாபித்த பீடத்துக்கு காமகோடி பீடம் என்று பெயர் சூட்டினார் ஆதிசங்கரர். அதென்ன காமகோடி? காமம் என்றால் ஆசை; கோடி என்றால் முடிவு. தெருக்கோடி என்கிறோமே... அதாவது தெருமுனை. முடிவுறுகிற இடம் என்று பொருள். நாம் எது எதற்கெல்லாமோ ஆசைப்பட்டாலும், நம்முடைய நிலையான, நிறைவான, பூரணத்துவமான ஆசை என்பது கடவுளை அடைதலே! அதுதான் மோட்ச நிலை.

புராணங்களிலும் சரித்திரங்களிலும் போற்றப்படும் காஞ்சி க்ஷேத்திரம் ருத்ரகோட்டம், புண்யகோட்டம், குமரக் கோட்டம், காமகோட்டம் என நான்கு கோட்டங்களைக் கொண்டது. ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில்- ருத்ர கோட்டம் என்றும், ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் புண்ய கோட்டம் என்றும், அங்கே உள்ள ஸ்ரீசுப்ரமணியர் ஆலயம் குமரக் கோட்டம் என்றும், ஸ்ரீகாமாட்சி தேவி குடிகொண்டிருக்கும் ஆலயம் காமகோட்டம் என்றும் புகழப்படுகின்றன.

இந்த புண்ணியம்பதிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்களா? அங்கே, அமைதியே உருவாய், தன் கருணை விழியால் காஞ்சிபுரத்தை மட்டுமின்றி அகில உலகத்தையும் கட்டியாள்கின்ற ஸ்ரீகாமாட்சி அம்பாளை, தரிசித்து இருக்கிறீர்களா? அவளிடம் 'இதைக் கொடு... அதைக் கொடு’ என்று எதுவுமே கேட்கத் தேவையில்லை. காரணம், காஞ்சி காமாட்சி அம்பாளைத் தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்துவிட்டால் போதும்... அதுவே இந்த வாழ்வில் உங்களுக்குக் கிடைத்த மிக உயர்ந்த வரம்!

வாருங்கள்... ஸ்ரீகாமாட்சி அம்பாளை கண்ணாரத் தரிசிப்போம்.

(வேண்டுவோம்)

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்