மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 38

காமாட்சியின் ஆட்சி!வி.ராம்ஜி

பெண்ணின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவள் விழி அசைவுகளைப் புரிந்து உணர்ந்து, அவளின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்கும் குடும்பம், சீரும் சிறப்புமாக வாழும். வாழையடி வாழையாக வளரும். அந்த வீட்டில், அழுகைக்கும் ஆத்திரத்துக்கும் இடமிருக்காது. அங்கே எப்போதும் அன்புக்குப் பஞ்சமிருக்காது. நகரேஷூ காஞ்சி என்றும் காமகோட்டம் என்றும் போற்றப்படும் காஞ்சியம்பதியில், காமாட்சி அம்பாளின் ஆட்சி, செம்மையாக நடந்துகொண்டிருக்கிறது. மதுரையில் மீனாட்சி, காசியில் விசாலாட்சி, காஞ்சியில் காமாட்சி என்று பெருமையாகச் சொல்வார்கள் பக்தர்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 38

''ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வர்ணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்தமயமான பிரம்மத்தில் இருந்துதான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன.

மாயா சக்தியினால், ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும் ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தை, பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைத்தான் அம்பாள் என்று சொல்கிறோம். இந்தச் சக்தியினால்தான் நாமெல்லாம் தோன்றியிருக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.

இதோ... எந்தன் தெய்வம்! - 38

அவள், மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி, நமக்கு பிரம்ம ஞானத்தை அனுக்கிரகம் செய்வாள்''என்று காஞ்சி மகாபெரியவா, அம்பாளின் அருளை, காமாட்சித் தாயின் கருணையைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.

நமக்கு எது தேவையோ அதைத் தருபவளே தாய். நாம் என்ன விரும்புகிறோமோ அந்த விருப்பத்தை ஈடேற்றித் தருபவளே நம் அன்னை. சுமார் எட்டு அல்லது ஒன்பது வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் எனும் புண்ணிய தலத்துக்கு வந்த அந்த பிரமுகர், மனதில் என்ன நினைத்திருந்தாரோ.... அம்பாளிடம் என்ன வேண்டிக்கொண்டாரோ... தெரியவில்லை. ஆனால், உள்ளே நுழையும்போது ஒரு இறுக்கத்துடனும் லேசான தவிப்புடனும் வந்தவர், காயத்ரி மண்டபத்தில் நின்று, பிறகு காமாட்சி அம்பாள் சந்நிதியில் அவளைக் கண்ணாரத் தரிசித்து வெளியே வந்தபோது, முகத்தில் மலர்ச்சியும் நடையில் வேகமும் கண்களில் நிறைவுமாகக் காணப்பட்டார்.

உடன் வந்தவர்களிடம், ''வெயிட் குறைஞ்சா மாதிரி இருக்கு. அதாவது மனசுல ஏதோ அழுத்திக்கிட்டே இருந்திருக்கு. அது மொத்தத்தையும் யாரோ உருவிப் போட்டது மாதிரி லேசாயிடுச்சு மனசு'' என்று சொல்லி, பிரசாதமாகக் கிடைத்த தாமரைப் பூக்களை கண்களில் ஒற்றிக்கொண்டு, நெஞ்சில் வைத்து இறுக்கியபடி, இரண்டு நிமிடம் நின்றார். பிறகு பிராகாரத்தில் இருந்தபடியே, இன்னொரு முறை சந்நிதி நோக்கியும், கோபுரம் பார்த்தும் கையெடுத்துக் கும்பிட்டார்.

அன்றைக்கு அவர் என்ன நினைத்து வேண்டினாரோ, எதைக் கேட்டு விண்ணப்பித்தாரோ... அது காமாட்சி அன்னைக்கு மட்டுமே தெரியும். இதோ... இன்றைக்கு இந்திய அளவில், உலக அளவில் அவரைத் தெரியாதவர்களே இல்லை. அவர்... பிரதமர் நரேந்திரமோடி.

பாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே, இரண்டு முறை அவர் பெயருக்கு அர்ச்சனை செய்து, பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஆட்சி செய்யும் நாயகியை மனதார வேண்டிக்கொண்டதால், நரேந்திரமோடி இன்றைக்கு இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள், அவரின் கட்சிக்காரர்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 38

அந்தக் காலத்திலேயே, ஆட்சியாளர்கள் காமாட்சி அம்பாளைத் துதித்து, அவளின் அருளையும் சக்தியையும் பெற்றிருக்கிறார்கள்.

கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்

மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன்  கைச்செண்டு

கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்

செம்பொற் கிரிதரித்த செண்டு

என்று கரிகால் சோழன், கச்சி எனப்படும் காஞ்சிக்கு வந்து, வளையல்கள் அணிந்திருந்த காமாட்சி அன்னையை வணங்கி வழிபட்டான் எனத் தெரிவிக்கிறது, பாடல் ஒன்று.

லலிதாஸைவ காமாக்ஷி காஞ்ச்யாம் வ்யக்திமுபாகதா

ஸரஸ்வதி ரமாகெளர்ய: தாமேவாத்யாம் உபாஸதே

எனப் புகழ்கிறது ஸ்ரீலலிதா உபாஸனா மார்க்கம்.

எவரேனும் எரிச்சலுடனும் கோபமாகவும் பேசினால், 'உங்கிட்ட கருணையே இல்லையே’ என்று அவரைச் சொல்வோம். இந்த உலகில், கருணையும் அன்பும் சாஸ்வதம். எல்லோரும் அந்தக் கருணைப் பார்வைக்கு அன்புப்பேச்சுக்குமே ஏங்கித் தவிக்கிறோம். காஞ்சி காமாட்சி அம்பாள், பெருங்கருணைக்கு சொந்தக்காரி. அதனால்தான் க்ருத யுகத்தில், துர்வாச முனிவர் அவளை வணங்கித் துதித்து, 2,000 ஸ்லோகங்களால் போற்றி வணங்கினார். த்ரேதா யுகத்தில், யாத்திரையாக வந்த பரசுராமர், கச்சியம்பதிக்கு வந்து, 1,500 ஸ்லோகங்களால் அம்பிகையைப் பாடியிருக்கிறார். துவாபர யுகத்தில் தெளம்ய முனிவர் என்பவர், 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் மூகசங்கரர் 500 ஸ்லோகங்களாலும் அன்னையைப் போற்றி வணங்கியுள்ளனர். முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும், மன்னர்களுக்கும், மாவீரர்களுக்கும் அருளிய பெருமை கொண்டவள் காஞ்சி காமாட்சி.

லலிதோபாக்யானம் எனும் நூல். இதில் 'மந்த்ர ராஜ தத்ஸாதனாதி’ என்கிற 34வது அத்தியாயம். அதில்,

மண்டாஸுர வதாயைஷா ப்ராதுர் பூதாசிதக்னித:

மஹாத்ரிபுரஸுந்தர்யா மூர்த்தி ஸ்தேஜோ விஸ்ரும்பிதா

காமக்ஷிதி விதாத்ராது ப்ரஸதுதா லலிதேச்வரி.

அதாவது, பண்டாசுர யுத்தத்தின் பொருட்டே, சிதக்னியில் இருந்து இந்தத் தேவி தோன்றினாள். மகா திரிபுரசுந்தரியின் மூர்த்தியானது, தேஜஸில் இருந்தே கிளம்பியது. இவளை லலிதேஸ்வரி என்பார்கள். பிரம்மா, 'காமாட்சி’ என இவளைத் துதித்து வணங்கினார் என்று அர்த்தம்.

படைப்புக் கடவுளான பி்ரம்மாவே வணங்கி வழிபட்ட சக்தி,  ஸ்ரீகாமாட்சிதேவி.  இவளின் பேராற்றலைச் சொல்ல, வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்?

இதோ... எந்தன் தெய்வம்! - 38

மகா பெரியவா சொல்கிறார்...

''மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி அம்பாள். ஞானம் தருபவளும் அவளே! இவை அனைத்துக்கும் அவளின் கருணையே காரணம். மாயைகள் பலவற்றைச் செய்தாலும் அதிலிருந்து விடுவிக்கிற கருணையும் பூரணமாகக் கொண்டிருக்கிறாள். மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம், நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான்! இந்திரிய சுகங்களின் வழியே மனதைச் செலுத்தி, நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனமும் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விகாரங்களில் இருந்தும் மனசின் ஓயாத சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாக வருகிறாள்'' என அருளியுள்ளார்.

இதோ... எந்தன் தெய்வம்! - 38

துக்கம், துரோகம், தோல்வி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, மன அழுத்தம், மன விகாரம், மனக் கிலேசம், பொறாமை, கர்வம், அலட்சியம் என மனித வாழ்வில் எத்தனையோ இறுக்கங்கள்... இன்னல்கள்.... இடைஞ்சல்கள்.

துக்கத்துடனும் தூக்கமில்லாத துயரத்துடனும் கலங்கித் தவிப்பவர்கள், காமாட்சி அம்பாள் கோலோச்சும் காஞ்சிபுரத்துக்கு வாருங்கள். அவள் குடியிருக்கும் கோயிலுக்குச் செல்லுங்கள். ஒரு குழந்தையைப் போலான உங்களை அப்படியே வாரியணைத்துக் கொள்வாள்... அந்தத் தாய்!

காமாட்சியின் கடைக்கண் பட்டால் போதும்... கவலைகள் எல்லாம் பறந்தோடும். உணர்வீர்கள்.

வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்