மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 40

தூக்கம் தருவாள்... துக்கம் தீர்ப்பாள்! வி.ராம்ஜி

ருவர், மிகப்பெரிய விடுதலையான நிலையில் இருப்பது, தூக்கத்தின்போதுதான்! வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்கினால், விடிந்ததும் அவர்கள் கேட்கிற முதல் கேள்வி, 'ராத்திரி நல்லாத் தூங்கினீங்களா?’ என்பதுதான். ஆக, தூக்கம் என்பது மிகப்பெரிய விடுதலை. அடுத்த நாளின் வேலைக்குத் தேவையான மலர்ச்சியும் மனோபலமும் தேக திடமும் தரக்கூடிய தூக்கம், உண்மையிலேயே வரம்தான்!

துக்கம் இருப்பவனை தூக்கம் அண்டாது என்பார்கள். ஆம், துக்கத்தால் துவண்டுகிடப்பவர் களுக்கு தூக்கம் எட்டாக் கனிதான்! அப்படித் துக்கித்து, நொந்து போகிறவர்களுக்கு, காமாட்சி யின் கடைக்கண் பார்வைதான் மாமருந்து. காஞ்சிபுரம் வந்து, காமாட்சி அம்பாளின் சந்நிதியில் உங்களின் மொத்த துக்கங்களையும் இறக்கி வைத்துவிடுங்கள். துக்க நிலை மாறி, சந்தோஷம் வாழ்வில் மலருவதை உணர்வீர்கள். நிம்மதியாகத் தூங்கி, உற்சாகமாக வாழ்வீர்கள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 40

''வேலை எல்லாம் செய்கிறோம். பிறகு அலுத்துக் களைத்துப் போய் தூங்குகிறோம். தூக்கம் என்பது தமஸின் செயல். அங்கே, ஒரே இருட்டு. அதாவது, கறுப்புதான் இருக்கிறது. ஆனாலும், இந்தத் தூக்கத்தில்தான் மனுஷனுக்கு கொஞ்சமேனும் சாந்தி இருக்கிறது. நாளெல்லாம் அலைந்து திரிந்து, கஷ்டப்படுகிற ஜீவராசிகளுக்கு ஆறுதலாக பராசக்தி அனுதினமும் தூக்கத்தை வைத்து, கொஞ்சம் அமைதி தருகிறாள். எனவே, தமஸிலேயே ரொம்பவும் அனுக்கிரகம் இருப்பதாகத் தெரிகிறது' என அருளியிருக்கிறார் காஞ்சி மாமுனி.

'நகரேஷு காஞ்சி’ எனப் போற்றப்படும் காஞ்சி மாநகரம். மிகப்பெரிய புண்ணிய பூமி. இந்த உலகின் உன்னதமான மகான்களும், யோகிகளும், ஞானிகளும் முனிவர்களும் தபஸ் செய்த அற்புதமான தலம் இது என்கிறது காஞ்சி புராணம். இதோ, இன்றைக்கும் தினந்தோறும் காஞ்சியம்பதிக்கு, காமாட்சி அம்பாளின் கோயிலுக்குப் புதிது புதிதாக பக்தர்கள், தாயைத் தேடும் கன்றுக்குட்டிபோல் வந்து அவளின் திருமுகத்தைத் தரிசித்துச் செல்கிறார்கள்.

நம்மை விழிப்புடன் இருக்கச் செய்யும் சக்தி அவள். தூக்கத்தைத் தந்து துக்கத்தைப் போக்கி, நிம்மதி தரும் சாந்தசொரூபிணியும் அவளே!

''விழிப்பு, தூக்கம் இரண்டு மட்டுமே போதாது என்று ஸ்வப்னாவஸ்தையை ஒவ்வொரு ஜீவனுக்கும் தந்திருக்கிறாள் அம்பாள். பராசக்தி எனும் ஒருத்தியின் கற்பனையில் நாம் அனைவரும் உண்டானது போல, நம் ஒருவரின் கற்பனையிலேயே கனவில் பல ஊர்களை, ஜனங்களை, நிகழ்ச்சிகளை ஒவ்வொருவரும் உண்டாக்கிவிடுகிறோம். கனவு காணும்போது, 'இதெல்லாம் கற்பனை என்று தெரிகிறதோ? இல்லை. கனவில் அழுகிறோம்; சிரிக்கிறோம். என்னென்னவோ செய்கிறோம். ஆனால், ஜாக்ரத் (விழிப்பு) நிலைக்கு வந்ததும் என்ன ஆகிறது? அத்தனைக் காட்சியும், ஊர்களும், ஜனங்களும், சம்பவங்களும் வெறும் கற்பிதமே என்று தெரிகிறது. ஆனால், இந்தக் கற்பனைக்கு ஆதாரமாக ஒருத்தன் இருந்தானே... அந்த ஜீவன் மட்டும்தான் ஸ்வப்னாவஸ்தையிலும் இருந்தான். இப்போது விழித்த பின்பும் இருக்கிறான்' என்று அருளியுள்ளார் காஞ்சி மகா பெரியவா.

தூக்கத்தைத் தருபவள் காமாட்சி அம்பாள். மறுநாள், விழிப்புடன் இருக்கச் செய்பவளும் அவளே! நடுவே தூங்கும்போது ஸ்வப்னம் எனப்படும் கனவையும் உண்டுபண்ணுகிறவளும் அவள்தான். கிட்டத்தட்ட, இது நமக்கு அவள் தருகிற ஆத்ம சோதனை.

''ஆமாம். உள் மனதில் அமுக்கி வைத்த எண்ணங்களும், நம்முடைய பூர்வ சம்ஸ்காரங் களால் உள்ளுக்குள்ளே தடிப்பேறிப் போயிருக்கிற வாசனைகளுமே கனவில் ஓரளவுக்கு வெளியா கின்றன. நம் பக்குவத்தின் நிலை என்ன என்பதை நாம் உணர்வதற்கான, உரைகல்லாக கனவைத் தந்திருக்கிறாள் அம்பிகை. நம் குறைநிறைகளை அறிந்துகொள்வதற்கான பரீட்சையாகவே கனவை வைத்திருக்கிறாள். குறை இருக்கிறதே என்று புலம்ப வேண்டியதில்லை. நம்முடைய குறைகளை உணர்ந்தால்தானே, நிறைவை நோக்கி நாம் நகரமுடியும்? 'அம்மா... நான் இன்னமும் இப்படித்தான் இருக்கிறேனா? என்னை மேலும் கைதூக்கிவிடு. உன்னை நிஜமாகவே பக்தி செய்ய அனுக்கிரகம் பண்ணு!’ என்று அவளை நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்ள வேண்டும். நிச்சயம் துணை நிற்பாள் காமாட்சி!'' என்று நாம் நம்மை உணர்வதற்கான ஞான சக்தியை வழங்கும் சக்தியே காமாட்சி அம்பாள் என்பதை மிக எளிமையாகச் சொல்லி உணர்த்துகிறார் காஞ்சி முனிவர்.

துக்கம் யாருக்குத்தான் இல்லை? ஆனால், அந்தத் துக்கத்தில் இருந்து மீள்வதும், சந்தோஷமாக வாழ்வதுமே இங்கு முக்கியம். அப்படி மீள்வதற்கான சக்தியையும், சந்தோஷமாக வாழ்வதற்கான வழிகளையும் தந்தருளும் மகா சக்தியாக, இங்கே காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் காமாட்சி அம்பாள்.

இதோ... எந்தன் தெய்வம்! - 40

பிரமாண்டமான கோயிலில், கருவறையில் தென்கிழக்கு திசை நோக்கியபடி, மொத்த உலகையும் கட்டியாள்கிறாள் தேவி. பத்மாசினியாகத் திகழும் அம்பிகையை வணங்கினால், நம் வாழ்க்கையைத் தாமரைபோல் மலரச் செய்துவிடுவாள். முக்கண்களுடன் கிரீடம் தரித்த சக்தியை தரிசித்தாலே, நம் அகக்கண் விழித்துக்கொள்ளும்; இழந்த பொருளையோ பதவியையோ வாழ்க்கையையோ திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம்!

இதோ... எந்தன் தெய்வம்! - 40

பாசம், அங்குசம், கரும்பு வில், பஞ்சபாணம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் ஏந்தியபடி காட்சி தரும் காமாட்சி அம்மையைக் கண்ணாரத் தரிசித்தாலே, 'அட... இது நம்ம பிள்ளையாயிற்றே...’ என்று உள்ளமுருகி, நம்முடன் ஓடோடி வந்து, நம்மை அரணெனக் காப்பாள் எனப் போற்றுகின்றனர், ஞானிகளும் யோகிகளும்.

கர்ணம் என்றால் காது. கர்ணாபரணம் என்பது, காதில் அணிந்துகொள்கிற ஆபரணம். பெண்கள் காதில் தோடு, கம்மல், ஜிமிக்கி என ஏதேனும் அணிந்தால், அது கூடுதல் அழகையும் பொலிவையும் தரும். இங்கே காஞ்சி காமாட்சி, கர்ணாபரணமாக சூரிய சந்திரர்களையே அணிந்து, பிரகாசமாகவும் தேஜஸுடனும் ஒளிர்கிறாள். ஒளி என்பது ஞானம். வெளிச்சம் என்பது விடியல்சந்தோஷம். பிரகாசம் என்பது நல்வழிக்கான, நல்வாழ்க்கைக்கான துணை. பகலில் வெளிச்சத்தைத் தரும் சூரியன், இரவில் குளுமையுடன் சேர்ந்த ஒளியை வழங்கும் சந்திரன் என இரண்டையும் ஆபரணமாகக் கொண்டு அரசாட்சி செய்து வரும் அம்பிகையின் அருள் கிடைத்தால் போதும்... இந்த ஜென்மத்தின் சகல பாவங்களும் விலகி, தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நிம்மதியும் நிறைவுமாக வாழும் சக்தியை, காமாட்சித் தாய் நமக்குத் தந்தருள்வாள் என்பது  உறுதி!

வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்