மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இதோ... எந்தன் தெய்வம்! - 41

5 காமாட்சி... 5 அர்ச்சனை... 5 வார தரிசனம்..!வி.ராம்ஜி

இதோ... எந்தன் தெய்வம்! - 41

'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார்கள். ஏனெனில், கடன் சுமை அத்தனை கொடுமையானது! கடனின்றி வாழ்தலே சிறப்பு. கடன் பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் உரிய முறை யில், உரிய நேரத்தில் அடைத்துவிடுவதே சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும்.

கடன் என்பதை ஏதோ அவசர தேவைக்குக் காசு, பணம் வாங்குவது என்று மட்டுமே எண்ணிவிடாதீர்கள். கடன் என்பது கடமை. நம் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.

இல்லாளை அரவணைத்துச் செல்வதும், இல்லத்தைக் காப்பதும், பெண்டு, பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பதும், பெற்றோர் மீது பிரியத்துடன் இருப்பதும், உற்றார் உறவினர்களுடன் சிநேகம் பாராட்டுவதும், தோழமைகளுடன் நம்பிக்கையுடன் பழகுவதும், இந்தச் சமூகத்துக்கு நம்மால் ஆன தான தருமங்களை நம் பொருளாதார தகுதிக்கேற்ப வழங்கி மகிழ்வதும் என, நம் கடமைகள் பற்றிய பட்டியலைச் சொல்கிறது சாஸ்திரம். இவை எல்லாவற்றையும்விட மிக உன்னதமான கடன் ஒன்று உண்டு. அது... பித்ரு கடன்!

பித்ரு என்றால் முன்னோர் என்று அர்த்தம். நாம் இந்த உலகுக்கு நம் பெற்றோரால் வந்தோம்; அவர்கள், தங்களுடைய பெற்றோரால் இந்த பூமிக்கு வந்தார்கள். நம் தாத்தாவும் பாட்டியும் அவர்களின் தாய் தந்தை மூலம் பிறந்தார்கள். அவர்கள் வாழும்போதும் சரி, மறைந்த பிறகும் சரி... அவர்களை ஆராதித்து, நினைவுகூர்ந்து, நன்றியுடனும் அன்புடனும் அவர்களுக்கான கடமைகளைச் செய்தாலே, நாமும் நம் சந்ததியும் இனிமையாகவும் நிம்மதியாகவும் வாழலாம்.

இதோ... எந்தன் தெய்வம்! - 41

நாம் சந்தோஷமாக வாழ இன்னொரு வழியும் இருக்கிறது. நம் நிறைகுறைகளையெல்லாம் மன்னித்து, நம்மைக் காப்பவள் நமது தாய். அதுபோல், உலகுக்கெல்லாம் தாயான காஞ்சி காமாட்சியம்மையிடம் வந்து சரணடைந்துவிட்டால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்வாள். அவர்களின் ஆசியும் காமாட்சியின் பேரருளும் நமக்கு ஒருசேரக் கிடைத்து, நிறைவுடன் வாழ வழி பிறக்கும்!

காஞ்சியம்பதியில் உள்ள காமாட்சி அம்பாள் திருக்கோயில், நம் துக்கங்களையெல்லாம் போக்கக்கூடிய அற்புதமான இடம். இங்கே, நம்மையும் இந்த உலகையும் காத்தருள்வதற்காகவே ஐந்து காமாட்சிகள் அருள்பாலிக்கிறார்கள்.

'என்ன... ஐந்து காமாட்சியா!’ என்று வியக்கிறீர்களா?

ஆமாம். 'பஞ்ச காமாட்சி’ என்று சொல்வார்கள். மூலஸ்தானத்தில், அதாவது கருவறையில் ஊருக்கும் உலகுக்கும் நாயகியாக, நடுநாயகமாகத் திகழ்கிறாள் காமாட்சி அம்பாள். அவளுக்கு வலப் பக்கத்தில், கருவறையிலேயே வீற்றிருக்கிறாள் தபஸ் காமாட்சி. பஞ்சாக்னிகளுக்கு நடுவில், ஒற்றைக்காலில் நின்றபடி தவக்கோலத்தில் காட்சி தருகிறாள் அவள். அடுத்து, பங்காரு காமாட்சி. பங்காரு என்றால், சொர்ணம்... அதாவது தங்கம் என்று அர்த்தம். பங்காரு என்பது தெலுங்குச் சொல். அந்தக் காலத்தில், இங்கே வசித்து வந்த தெலுங்கு பேசுகிற மக்களும், ஆந்திரத்தில் இருந்து அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்களும் இந்த காமாட்சியின் அழகில் கிறங்கி, பங்காரு காமாட்சி என்றார்களாம். முழுக்க முழுக்கத் தங்கத்தில் ஜொலித்த தேவியின் இந்த விக்கிரகத் திருமேனியை, அந்நியப் படையெடுப்பின்போது தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள உடையார்பாளையம் ஜமீனிடம் பத்திரமாக வைத்திருக்கும்படி கொடுக்கப்பட்டது.

இதோ... எந்தன் தெய்வம்! - 41

பின்னாளில், 'இந்த பங்காரு காமாட்சி, தஞ்சாவூர்லயே இருக்கட்டும்’ என்று காஞ்சி சங்கராச்சார்யார் அருள... அதன்படி அமைந்ததுதான் தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி அம்பாள் கோயில். இங்கே, காஞ்சிபுரத்தில், வெளிப்பிராகாரத்தில் சரஸ்வதி தேவியின் சந்நிதிக்கு அருகில், அதாவது ராஜ சியாமளா சந்நிதிக்கு அருகில், தனியறையில் பங்காரு காமாட்சியின் திருப்பாதம் மட்டும் உள்ளது.

அதையடுத்து நான்காவதாக, அஞ்சன காமாட்சியின் தரிசனம். அதாவது அரூபமாக, அதேநேரம் லட்சுமியாக அருட்காட்சி தருகிறாள். மகாவிஷ்ணுவின் சாபத்தால், அரூப லட்சுமியாக இருந்தாலும், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு, அனைவருக்கும் அருள்பாலிக்கும் மகா சக்தி இவள் என்கின்றனர் பக்தர்கள். கருவறையில் காமாட்சி அம்பாளைத் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது இவளைத் தரிசிக்கலாம். அடுத்து, ஐந்தாவதாக, உற்ஸவக் காமாட்சி.

வேறு எந்த தேவியையும், வேறு எந்தத் தலத்திலும் இப்படி ஐந்து விதமான வடிவிலும் பெயரிலும் தரிசனம் செய்வது அரிதான ஒன்று என்று சிலாகிக்கின்றனர் பெரியோர்.

வாரத்தில் ஏதேனும் ஒரு கிழமையைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஐந்து காமாட்சிகளுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். கருவறையில் உள்ள காமாட்சி அம்பாளுக்கு, ஐந்து காமாட்சிக்கும் சேர்த்து அர்ச்சனை செய்வது இங்கு பிரசித்தம். ஐந்து தேங்காய், ஐந்து விதமான பழங்கள், ஐந்து விதமான மலர்கள், வெற்றிலை, பாக்கு ஐந்து செட் என்று வழங்கி, அர்ச்சித்து வணங்கி, உங்கள் குடும்பத்துக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் பட்டியலிட்டு அன்னையிடம் சொல்லிப் பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்து ஐந்து முறை பிராகார வலம் வந்து நமஸ்கரியுங்கள்.

எந்தக் கிழமையில் நீங்கள் வந்து தரிசித்தீர்களோ, அதே கிழமையில் அடுத்தடுத்த வாரங்களில் வந்து காமாட்சி அம்பாளைக் கண்ணாரத் தரிசித்து, ஐந்து அம்பிகையருக்கும் அதே போல் ஐந்து அர்ச்சனைகள் செய்து, வேண்டிக்கொள்ளுங் கள். பித்ருக்களின் சாபத்தில் இருந்து முற்றாக விடுபடுவீர்கள். அவர்கள் குளிர்ந்து, உங்களையும் உங்கள் வம்சத்தையும் ஆசீர்வதிப்பார் கள். எல்லாவற்றுக்கும் மேலாக, காமாட்சித் தாயின் பேரருள் கிடைத்து, பெருவாழ்வு வாழ்வீர்கள்.  உங்கள் காரியங்களில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். நினைத்த காரியங்கள் யாவிலும் தேவி துணை நின்று காத்தருள்வாள்.

வசதி வாய்ப்பு இருந்தால், ஐந்து அர்ச்சனைகள் செய்யும்போது, ஐந்து விதமான பழங்களுடன் ஐந்து வித இனிப்புகளும், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, சம்பா மிளகு சாதம், தயிர் சாதம் என ஐந்து வகைச் சித்ரான்னங்களும் படைத்துப் பிரார்த்திக்கலாம்.

இதோ... எந்தன் தெய்வம்! - 41

வாழ்க்கையை கடனே என்று கழிக்காமல், ஒவ்வொரு நிமிடமும் நமக்கானது என்கிற உணர்வுடன் செயல்படுவதற்கான புத்தியையும், தெளிவையும், துணிவையும் தந்தருள்வாள் காமாட்சி அம்பாள். பிறகென்ன... வாழ்க்கையில் தொட்டதெல்லாம் துலங்கும்; எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும்!

''நம் பிரார்த்தனை நிறைவேறி விட்டால், 'ஸ்வாமி அனுக்கிரகம் செய்துவிட்டார்’ என்று சொல்கிறோம். ஆனால், பராசக்தியின் பஞ்ச கிருத்தியங்களை (ஐந்தொழில்கள்) எடுத்துக்கொள்ளும்போது, அனுக்கிரகம் என்றால், அது மாயா லோகத்தில் இருந்து நம்மை விடுவித்து, நம்முடைய ஆத்ம ஸ்வரூபமான மோட்ச நிலையில் சேர்ப்பிப்பதைத்தான் குறிக்கும். பிரம்மாவாக இருந்து உலகைப் படைக்கிறாய்; விஷ்ணுவாகக் காக்கிறாய்; ருத்திரனாக சம்ஹரிக்கிறாய்; மகேஸ்வர சக்தியாக மாயையை ஆளுகிறாய்; சதாசிவ ஸ்வரூபமாக அனுக்கிரகத்தைச் செய்கிறாய். ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரம்மரூபா; கோப்த்ரீ கோவிந்த ரூபிணி; ஸம்ஹாரிணி ருத்ரரூபா; திரோதானகரி ஈஸ்வரி; ஸதாசிவா அனுக்கிரஹா; பஞ்ச க்ருத்ய பராயணா'' என்கிறார் காஞ்சி மகா பெரியவா.  

பஞ்ச பூதங்களால் ஆனது இந்த உலகம். காஞ்சியம்பதியில் உள்ள பஞ்ச காமாட்சியை தரிசியுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருந்த தொல்லைகளும் துக்கங்களும் பஞ்செனப் பறந்து விடுவதைக் காண்பீர்கள்.

- வேண்டுவோம்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்