Published:Updated:

வரலட்சுமி விரதம்: திருமகளின் அருளும் மாங்கல்யப் பாக்கியமும் கிடைக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் இல்லத்தில் நான் பூரணமாக, நிலையாக தங்குவேன் என்கிறாள் லட்சுமி!

வரங்களை அளிப்பதற்காகவே திருமகள் வரலட்சுமியாக, அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக, எளியோர்களின் வாழ்வரசியாக, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை அன்று வடிவம் எடுத்தாள். இந்த நாளில் வரலட்சுமி தாயை மனம் குளிர்ந்து வரவேற்று அழைக்கும் தாய்மார்களின் வீட்டுக்கு அவள் எழில் ரூபிணியாக எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.

செல்வங்களோடு 16 விதமான பேறுகளையும் அவள் அமரும் வீடுகளில் அள்ளிக் கொடுப்பாள் என்பதும் நம்பிக்கை. சீதாதேவி, நளாயினி, அப்சரஸ் பெண்கள், சித்திரநேமி என்ற தேவதை, சௌராஷ்டிர அரசி சுசந்திரா, கரசந்திரிகா, சாருமதி ஆகிய தெய்வப் பெண்கள் அனுஷ்டித்த புனித விரதம் இது.

வரலட்சுமி பூஜை
வரலட்சுமி பூஜை

நாளை (20-8-21) வரவிருக்கும் வரலட்சுமி விரதத்தில் திருமகளாகவோ, அம்பிகையாகவோ ஆவாஹனம் செய்து வணங்கலாம் என்கிறது சாஸ்திரங்கள். அம்பிகையை சிலையாகவோ, படமாகவோ, கும்பமாகவோ, மஞ்சள் பூசியோ வணங்கலாம் என்கின்றன சாஸ்திரங்கள். வரலட்சுமி பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்து வைக்க வேண்டும்.

விரத நாளன்று மாவிலை தோரணங்களால் வீட்டை மங்கலகரமாக மாற்ற வேண்டும். பசுவின் சாணத்தால் வீட்டு வாசலை மெழுகுவது சிறப்பு. இல்லையென்றால் மஞ்சள் நீரால் தெளிக்கலாம். பூஜையறை, விளக்குகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து வைக்க வேண்டும்.

இப்போது முக்கியமாக ஒரு கும்பத்தில் புனித நீர் நிரப்பி அதில் மஞ்சள், சந்தனம், நாணயங்கள், ஏலக்காய், ஜாதிக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம், வில்வம், வாசனாதி திரவியங்களைச் சேர்த்து, அந்தக் கலசத்தை மாவிலைகளால் மூடி அதன் மேலே மஞ்சள் பூசிய மட்டைத் தேங்காயை வைக்க வேண்டும். இதற்கு மாலை சூட்டி, மஞ்சள் குங்குமம் சாத்தி, சிறிய பட்டு வஸ்திரம் சாத்தி அலங்கரிக்க வேண்டும். இதுவே திருமகளாக, அம்பிகையாக அன்றைய நாளில் வணங்கப்படும்.

கலசம் வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பூஜை அறை நடுவீட்டில் மஞ்சளால் வட்டமாக மெழுகி அதில் குங்குமம் வைத்து அம்மனாக வரைந்து அதில் ஆவாஹனம் செய்வது வழக்கம். எதுவுமே இல்லாதவர்கள் அம்பிகை அல்லது திருமகள் படம் அல்லது சிலை வைத்தும் பூஜிக்கலாம்.
திருமகள்
திருமகள்

முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து கணபதி துதிகளைச் சொல்லி வழிபட வேண்டும். பிறகு படமோ, கலசமோ அதை மகாலட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி 108 நாமாவளிகள், அபிராமி அந்தாதி போன்ற ஸ்தோத்திரங்கள் சொல்லி, அட்சதை, குங்குமம், மலர்களால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டி சர்க்கரைப் பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு என குறைந்தது 3 வகை நைவேத்தியங்கள் சமர்ப்பித்து திருமகளை வழிபட வேண்டும்.

வாழை, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை, இலந்தை என குறைந்தது 2 பழங்கள் வைத்து வழிபட வேண்டும். மஞ்சள் காப்புக் கயிறை பூஜையில் வைத்து அதை சங்கல்பமாக இந்த கட்டிக் கொள்ளலாம். வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மலர்கள், குங்குமம் கொடுத்து வரவேற்று அவர்களுக்கு உணவிட வேண்டும். அவர்களை அம்பிகையாக நினைத்து வணங்கி அவர்களிடம் குங்குமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆவணி மாதச் சிறப்புகள்: துன்பங்கள் நீங்கும் மாதம் இது... ஏன், எப்படி?!

அவர்கள் விடைபெறும்போது தாம்பூலம், ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், இனிப்பு வகைகள் கொடுத்து அவர்களிடம் ஆசியும் வாங்க வேண்டும். இத்தனையும் செய்தால் திருமகளின் பரிபூரண அருள் பெற்று நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் நீடித்தப் புகழும் நிறைந்த மாங்கல்ய பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த விரதத்தை மனம் நிறைய விரிவாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் பெண்கள், தகுந்த குருக்களை வைத்து சம்பிரதாயப்படி குறைந்தது 5 நாள்கள் விரதமிருந்து விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, சுமங்கலி பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, துர்காபூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, மாங்கல்யப் பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யலாம்.

அஷ்ட ஐஸ்வர்யங்கள்
அஷ்ட ஐஸ்வர்யங்கள்

தூய்மையும் மங்கலப் பொருள்களும் நிறைந்திருக்கும் வீட்டில் திருமகள் நிச்சயம் குடி வருவாள். எங்கே நறுமணமும் நல்லிசையும் நிறைந்துள்ளதோ அங்கே திருமகளும் அம்பிகையும் தானே எழுந்தருளுவார்கள் என்பது ஐதீகம். எனவே நாளை காலை திருமகளின் அருளைப் பெற, திருவிளக்கை ஏற்றி வைத்து அழையுங்கள்.

கருணை கொண்ட அந்த தேவி 16 செல்வங்களுடன் உங்கள் மனை தேடி வரத் தொடங்குவாள். 'வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் இல்லத்தில் நான் பூரணமாக, நிலையாக தங்குவேன்' என்று திருமகள் அளித்த வாக்கின்படி அவள் நிச்சயம் வருவாள். அவள் வரத்தக்க வகையில் உங்கள் இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரித்து வையுங்கள் அதுவே முக்கியம்.

கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், கீர்த்தியும் ஆரோக்கியமும் பெறவும், நாளை வரலட்சுமி விரதம் இருக்கும் அனைத்து மகளிரும் எல்லா சௌபாக்கியங்களும் பெற வேண்டுகிறோம்.
அடுத்த கட்டுரைக்கு