திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
News
வீர பிரம்மேந்திரர்

வீர பிரம்மேந்திரர்

இறைவன்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர்கள், துன்பங்களிலிருந்து ரட்சிக்கப்படுகிறார்கள். இதை மெய்ப்பிக்கும் விதமாக அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஆல மரத்தின் அடியில் உறங்கிக்கொண்டிருந்த மற்ற சீடர்களை எழுப்பச் சொன்னார் வீரபிரம்மேந்திரர். சித்தய்யா அவர்களை எழுப்ப, அனைவரும் சேர்ந்து தம்பதி தங்கியிருந்த மரத்தடிக்குச் சென்றனர்.

மயக்கநிலையில் இருந்த பெண்மணியை நோக்கி, “அம்மா! எழுந்திருங்கள்... உங்களைப் போன்றோர் வாழ்வதால்தான் இப்பூமியில் தர்மம் சிதையாமல் திகழ்கிறது...’’ என்று கனிவுடன் குரல் கொடுத்தார் ஸ்வாமி. தெய்வாம்சம் நிறைந்த ஸ்வாமியின் குரலால் கண்விழித்த அந்தப் புனிதவதி, ஸ்வாமியை வணங்கினாள். அவளின் கணவரும் ஏறக்குறைய மயங்கிச் சரியும் நிலையில் இருந்தார். அவரையும் உசுப்பி விழித்தெழச் செய்து ஸ்வாமியை வணங்கச் சொன்னாள்.

``ஸ்வாமி! தங்களைப் பார்த் தால் எங்களைக் காக்க வந்த பரமாத்மாவாகவே தெரிகிறது. எங்கள் துன்பங்களை எடுத்துச்சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை...’’ எனக் கூறி தழுதழுத்தாள்.

அவளைக் கருணையோடு நோக்கிய ஸ்வாமி, தன் பையில் இருந்து பழம் ஒன்றை எடுத்துக்கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். பழத்தை வாங்கியவள் கணவரைப் பார்த்தாள். அவர் இன்னமும் அரைமயக்க நிலையிலேயே இருந்தார். எனவே, ``ஸ்வாமி! என் கணவரின் உயிரே எனக்கு முக்கியம். அவரை முதலில் காப்பாற்றுங்கள்... அதன் பிறகு நான்...’’ என்று சொல்லிமுடிப்பதற்குள் மீண்டும் மயங்கினாள் அந்த மாதரசி.

ஸ்வாமி மனம் உருகினார். மிக்க கருணையு டன் அவளின் கணவரை நெருங்கி, அவருடைய தலை முதல் கால் வரை தன் அபயக் கரத்தால் வருடினார். என்ன ஆச்சர்யம்...ஸ்வாமியின் திருக்கரம் பட்டதும் அந்த மனிதர் புதுப் பொலிவுடன் எழுந்து அமர்ந்தார். தோற்றத்தில் ஒரு வாலிபனாக காட்சியளித்தார். சீடர்கள் வியந்தனர். அந்த அன்பரோ, தன் கண்களையே நம்ப இயலாமல் மீண்டும் மீண்டும் தன் தேகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார். ஸ்வாமியின் அருளால் அற்புதம் நிகழ்ந்திருப்பதை உணர்ந்தார்.

மகிழ்ச்சியும் பூரிப்புமாக மனைவியை எழுப்பினார். கண்விழித்த மனைவி திகைப்பின் உச்சிக்கே சென்றாள். இருவரும் ஸ்வாமியைப் பலவாறு தொழுது வணங்கினார்கள்.

ஸ்வாமி ``நீங்கள் நீண்ட ஆயுளுடனும் செல்வ வளத்துடனும் வாழ்வீர்கள். விரைவில் ஒரு சத் புத்திரனைப் பெறும் வாய்ப்பும் உண்டு. இவை அனைத்தையும் வழங்கிய இறைவனை என்றும் மறவாமல் இறைச்சிந்தனையுடன் வாழுங்கள்’’ என்று அவர்களை ஆசீர்வதித்தார்.

அந்தப் பெண்மணி ஸ்வாமியிடம் ``நாங்கள் தங்களுக்குச் சேவை செய்து வாழ்வைக் கழிக்க விரும்புகிறோம். எங்களையும் உங்கள் ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ என்றாள்.

ஸ்வாமி ``தாயே! உன் கணவர் சிறந்த பண்டிதர். உங்கள் கிராமத்துக்கு அவரின் சேவை மிகவும் தேவை'’ என்று அறிவுறுத்தி விடைகொடுத்தார். அந்தப் பெண்மணிக்கோ அதில் விருப்பம் இல்லை. அவளின் மனத்தில் உள்ளதை ஸ்வாமி அறிந்துகொண்டார்.

``அம்மா! உன் மனதில் உள்ளதை அறிவேன். இன்னும் சில நாள்களில் தங்களின் கிராமமான புஷ்பகிரிக்கு வருவேன். அப்போது உங்கள் இல்லத்துக்கும் வருகிறேன். உங்கள் கிராமம் ஒரு மிகப்பெரிய அழிவைச் சந்திக்க உள்ளது. எனினும் உங்களைத் துன்பம் அண்டாது.

மேலும், தாங்கள் என்னிடம் உபதேசமாகப் பெற விரும்பும் `பர தத்துவ உபதேசம்’ குறித்து நான் பின்னர் விளக்குகிறேன். இப்போது ‘த்வாதசாக்ஷ்ரி’ மந்திரத்தை உபதேசிக்கிறேன்’’ என்றவர் அந்த மந்திரத்தை அவர்களுக்கு உபதேசித்தார். இருவரும் அவரை வணங்கி விடைபெற்றார்கள். ஸ்வாமியும் சீடர்களுடன் ஆசிரமம் நோக்கிப் பயணப்பட்டார்.

வழியில் அட்லாட்டப்பள்ளி என்ற கிராமத்தை அடைந்தனர். அங்கு கோயில் கொண்டிருக்கும் வீரபத்திரரை பூஜித்தார் ஸ்வாமி. இரவு கோயிலிலேயே தங்கினர். விடிந்ததும் புறப்பட்டு கண்டிமல்லய்யா பள்ளியை அடைந்தார்கள்.

நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் ஸ்வாமிக்குப் பாதசேவை செய்து கொண்டிருந்த சித்தய்யா ``ஸ்வாமி! பூமியில் பிறக்கும் ஒருவன் இறந்து விட்டால் மீண்டும் பிறவி எடுப்பானா அல்லது முக்தி அடைவானா?’’ எனக் கேட்டார்.

``குழந்தாய்! சின்னஞ்சிறு விதையிலிருந்துதான் மிகப்பெரிய மரம் உருவாகிறது. அன்னையின் கருவில் பிண்டமாக இருந்து, பின்னர் வளர்ந்து உருவாகும் ஒரு குழந்தை, அன்னையிடமிருந்து பிரிந்து தனிப்பட்டவுடன், மாயா என்ற கடினமான போர்வைக்குள் சென்று மீண்டும் தன்னை மூடி மறைத்துக் கொள்கிறது. சத்திய நிலையை மறந்து, தனது உருவம் மட்டுமே தன்னுடைய அடையாளம் என்று நினைத்துக் கொள்கிறது.

காலம் செல்லச் செல்ல இந்த மாயை அதிகரிக்கும். அதனால் மனைவி - மக்கள் மீதும் உற்றார் உறவினர் மீதும் ஈடுபாட்டை அதிகமாக்குவதும் இந்த மாயையே. அனைத்தும் மாயை எனத் தெரிந்தும் உலகப் பந்தத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் மனிதன். அவனுடைய இந்த ஆசைகளே அவனுக்கு அடுத்த பிறவியைத் தருகின்றன. எவனொருவன் ஆசையையும் பந்த பாசத்தையும் வெல்கிறானோ, அவனே முக்தி அடைகிறான்... இதுவே இயற்கையின் நியதி’’ என்று விளக்கிய ஸ்வாமி, அடுத்து நிகழப்போகும் சம்பவத்தை அறிந்தவராக வாசலை நோக்கினார்.

வீரன் ஒருவன் ஓலைநறுக்குடன் வந்துகொண்டிருந்தான். உள்ளே நுழைந்ததும் ஓலை விவரத்தைப் படித்துச் சொன்னான். அந்தப் பகுதி நவாபுவின் கட்டளை அது. `பீர்சாகிப் என்பவர், தம் புத்திரனை நீங்கள் மதம் மாற்றிவிட்டதாக புகார் அளித்திருக்கிறார். தங்களுக்கு இரண்டு வாய்ப்புகள்... ஒன்று பீர்சாகிப் இல்லத்துக்குச் சென்று அவரின் மகனை ஒப்படைத்து அவரிடம் மன்னிப்பு கோரவேண்டும். அல்லது எமது தர்பாருக்கு வந்து என் கேள்விகளுக்குச் சரியான பதிலை அளிக்கவேண்டும். இரண்டையும் நிராகரித்தால் தண்டனைக்கு ஆளாவீர்’ என்று தகவல் சொன்னது ஓலை நறுக்கு.

தன்னுடன் இருக்கும் மற்றவர்களின் நிலையை உத்தேசித்து நவாபுவின் தர்பாருக்குச் செல்ல தீர்மானித்தார் ஸ்வாமி. சித்தய்யா தடுத்தார். ஸ்வாமிக்குப் பதில் தான் செல்வதற்கு அனுமதியைக் கோரினார். `குருவருளால் வெற்றியுடன் திரும்புவேன்’ என்று பணிந்தார். ஸ்வாமியும் அவரை ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.

வழியில் நவாபுவின் வீரன் சித்தய்யாவிடம் ``நீ மதம் மாறியது ஏனோ’’ என்று கேலியுடன் வினவினான்.

``என் தனிப்பட்ட விருப்பம்... ஸ்வாமிக்குச் சேவை செய்யும் விருப்பத்தால் வந்தேன். எவரும் என்னை வற்புறுத்தவில்லை’’ என்று பதிலளித்த சித்தய்யா, `குருவருள் இருந்தால் என்னாலும் பல அற்புதங்களைச் செய்ய இயலும்’ என்று கருதினான். சில விநாடிகள் மெளனத்தில் கழிந்தன. சித்தய்யா பின்தொடரும் சந்தடி இல்லாததால் திரும்பிப் பார்த்த வீரன் அதிர்ந்துபோனான். சித்தய்யாவைக் காணவில்லை.

அவர் இயல்பைக் காட்டிலும் அதிவேகமாகப் பயணித்து அரண்மனையை நெருங்கிக் கொண்டிருந்தார். ஆங்காங்கே அவரைக் கண்ட அன்பர்கள் பலரும் ஆன்மிகம் தொடர்பான விளக்கங்களைக் கேட்டுப் பெற்று மகிழ்ந்தனர். மேலும் சிலர் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓரிடத்தில் வீரன் அவரைக் கண்டுகொண்டான்.

``என் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இங்கு வந்து இவர்களையும் ஏமாற்றுகிறாயா... என்ன செய்கிறேன் பார்...’’ என்றபடி அவரை இழுத்து வந்து தர்பாரில் நிறுத்தினான். சித்தய்யாவை தரிசித்ததுமே இனம் புரியாத பரவச நிலைக்கு ஆளானார் நவாபு. தன்னையும் அறியாமல் எழுந்து நின்றார்.

வீரன் அவரைப் பணிந்து வணங்கிவிட்டுச் சொன்னான்:

``இவனே நாம் தேடிக் கொண் டிருக்கும் சையத் என்ற சித்தய்யா. இவன் மதம் மாறியதுடன் நில்லாமல் நம் ஊர் மக்களையும் திசை திருப்ப முயன்றான். பெரும் மாயவித்தைக்காரன். இவனை எச்சரிக்கையுடன் அணுக வேண் டும்’’ என்றான்.

``இவன் கூறுவதெல்லாம் உண்மையா?’’ என்று சித்தய்யாவிடம் கேட்டார் நவாப்.

``என் குருவுக்குப் பதிலாக இங்கு வந்தேன். மற்றபடி எல்லாமும் குருவருளால் நிகழ்ந்தன; நிகழும். லட்சியத்தை நிறைவேற்றாமல் செல்ல மாட்டேன்’’ என்றார் சித்தய்யா.

முதற்கண் அவர் தன்னைப் பணிந்து வணங்காததைக் கவனித்த நவாபு உள்ளுக்குள் கோபம் கொண்டார். `ஆணவக்காரன்... இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது’ என்று எண்ணியவர், பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

அனைத்துக்கும் தக்கபடி பதில் சொன்னார் சித்தய்யா. ஆனால் அவற்றில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ள இயலாத நவாபு, “உன் விளக்கங்களும் செயல்களும் ஆணவத் தொனியிலேயே உள்ளன. எம்மையே குழப்புகிறாய். அவ்வளவு ஏன்... நவாபு என்ற பதவிக்கு மதிப்பளித்து ஒரு வணக்கம்கூட செலுத்தவில்லை...’’ என்றார்.

சித்தய்யா பொறுமையுடன் விளக்கினார்...

“இறைவனுக்கு முன் எல்லாமே ஒன்றுதான். ஒரு மரம் எண்ணற்ற கனிகளை வழங்கலாம். ஆனால், எல்லா கனிகளுக்கும் மூல காரணம் ஒரு விதையே. நம் உடல்கள் வெவ்வேறு ஆனாலும் உள்ளிருக்கும் ஆத்மா ஒன்றுதான். இந்த உண்மையை உணருங்கள்’’

அப்போதும் உண்மை தத்துவத்தை உணராத நவாபு, ``எனில் நீ எனக்கு வணக்கம் செலுத்தப் போவதில்லை...’’ என்று கோபத்துடன் கேட்டார்.

``குருநாதர் வீரபிரம்மேந்திர ஸ்வாமியைத் தவிர வேறு எவரை நான் வணங்கினாலும், அவரால் என் தெய்விக சக்தியைத் தாங்கிக்கொள்ள இயலாது. ஆகவேதான் நான் தங்களை வணங்கவில்லை’’ என்றார் சித்தய்யா.

``இதென்ன பிதற்றல்..?’’

``பிதற்றல் அல்ல; உண்மை. நான் உம்மை வணங்கினால் சிம்மாசனத்துடன் சேர்ந்து வெடித்துச் சிதறிவிடுவீர்கள்’’

``அவ்வளவு தெய்வ சக்தி மிக்கவனா நீ... எங்கே நிரூபித்துக் காட்டு பார்க்கலாம். நிரூபிக்க முடியாவிட்டால் கடும் தண்டனை வழங்குவேன்’’ என்றார் நவாபு.

சித்தய்யா புன்னகைத்தார். பெரும் பாறை ஒன்றை தர்பார் மண்டபத்துக்குக் கொண்டுவரச் சொன்னார். பலசாலி வீரர்கள் பலர் பாறை ஒன்றை உருட்டி வந்தனர். சித்தய்யா பாறையை நோக்கி நின்று `ஜெய் குரு வீரப்ரம்மேந்திர அவதார... ஜெய் வீரபோக வசந்த அவதார...’ என்றபடியே கரத்தை நெற்றியில் வைத்து `சலாம்’ என்று ஒருமுறை உரக்கக் கூறினார்.

மறுகணம் அந்தப் பெரிய பாறை வெடித்துச் சிதறியது!

- தொடரும்...

தைப்பொங்கல் தீப விரதம்

தைப்பொங்கல்
தைப்பொங்கல்

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கும் நாளே தைத்திருநாள். அதனால் இந்த மாதத்துக்கும் மகர மாதம் என்றே பெயராயிற்று. சூரியன் சிவபெருமானின் வடிவம் ஆதலால் அவரை வழிபட தை முதல்நாள் உகந்தது என்கின்றனர். இந்த நாளுக்கு மகர சங்கராந்தி என்று பெயர். இந்த நாளில் இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய நதிகளில் நீராடும் மரபு நெடுங்காலமாக உள்ளது.

மகாசங்கராந்தி நாளில் நெய்யில் வறுத்த எள்ளால் தீபமேற்றி, சிவபெருமானை வழிபடும் வழக்கமும் உண்டு. இதற்கு ‘மகா தீப விரதம்’ என்று பெயர். இதை மேற்கொள்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் மற்றுமொரு விரதம், மகாவர்த்தி விரதம். இந்த விரதத்தின்போது விளக்கில் பசு நெய் நிரப்பி சிவபெருமானுக்கு தீப வழிபாடு செய்ய வேண்டும்.