Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 22

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

அந்தக் கிராமத்தில் முரடனான சாக்கையன் என்பவன் வசித்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக ஒரு விருப்பம் இருந்தது.

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 22

அந்தக் கிராமத்தில் முரடனான சாக்கையன் என்பவன் வசித்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக ஒரு விருப்பம் இருந்தது.

Published:Updated:
மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர்

``நான் உம்மை வணங்கினால் சிம்மாசனத்துடன் சேர்ந்து வெடித்துச் சிதறிவிடுவீர்கள்’’ என்று நவாபுவிடம் சித்தய்யா கூறிட, ``அவ்வளவு தெய்வ சக்தி மிக்கவனா நீ... எங்கே நிரூபித்துக் காட்டு பார்க்கலாம்’’ என்றார் நவாபு.

உடன் சித்தய்யா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பெரும் பாறை ஒன்று கொண்டுவரப்பட்டது.

`ஜெய் குரு ஸ்ரீவீரப்ரம்மேந்திர அவதார... ஜெய் வீரபோக வசந்த அவதார...’ என்றபடியே கரத்தை நெற்றியில் வைத்து `சலாம்’ என்று ஒருமுறை உரக்கக் கூறினார். மறுகணம் அந்தப் பெரிய பாறை வெடித்துச் சிதறியது!

கடப்பாவில் நடந்த இந்த அற்புதத்தை அனைவருமே சாட்சியாக கண்டு அதிசயித்தனர். நவாபு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

சித்தய்யாவோ குருநாதரை மனதார வணங்கித் தொழுதார். பின்னர் ``நவாப் அவர்களே! இனியாவது தாங்கள் உண்மையைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். என் தந்தை புகார் அளித்து விட்டார் என்பதற்காக என் சத்குருவை உங்கள் தர்பாருக்கு அழைத்து அவமானப்படுத்த நினைப்பது எவ்வகையில் நியாயம்?’’ என்று கேட்டார்.

அவரின் வார்த்தைகள் நவாபுவை நெருப்பாகச் சுட்டன. சித்தய்யா சபித்துவிடுவாரோ என்று அஞ்சினார். அவரிடம் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, நல்லுரைகள் பல கூறி நவாபுவையும் அவரின் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பினார் சித்தய்யா.

ஒருநாள் அதிகாலையில் ஸ்வாமி வீரபிரம்மேந்திரரிடம், ‘`சத்குருவே! இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு அழிந்து மீண்டும் உருவாகிறது?” எனக் கேட்டார் சித்தய்யா.

அவரிடம் ஸ்வாமி, ‘`சித்தா! நான் உன்னை என் ஞானப் புத்திரனாக ஏற்றுக்கொண்டேன். உனக்கு சாங்கிய யோகத்தைப் பற்றி விளக்குகிறேன்... கவனமாகக் கேட்பாயாக...’’ என்றார்.

தொடர்ந்து, ``சாங்க்ய யோகம் என்பது விஸ்வ ஸ்ருஷ்டி, பஞ்சபூத விமர்சனம், பஞ்சீகரணம், தேஹதத்வ விசாரணை போன்ற கூறுகளை உள்ளடக்கியது. இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் ஒரேயொரு வஸ்து (பொருள்) மட்டுமே இருந்தது. அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளோ, தடைகளோ இல்லை.

என்றுமே அழியாத ஒன்று, எப்போதும் எல்லோருக்கும் புதுமையாக புலப்படாமலேயே இருக்கும். அதுவே `பிரம்மம்’. அதற்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. பிரம்மம் தனக்குள் இருந்து எல்லாவற்றையும் உருவாக்கும் ஆற்றலை உடையது. ப்ருக்ருதி என்று சொல்லப்படும் இயற்கையும், பிரம்மமும் இணையும்போது ஈஸ்வரத் தத்துவம் (அவ்யக்குரதா) வெளிப்படுகிறது’’ எனத் தொடங்கி முக்குணங்கள், பஞ்சமகா பூதங்கள், 25 தத்துவங்கள் முதலானவை பற்றி உபதேசித்தார் வீரபிரம்மேந்திரர்.

மேலும் `கடவிமர்சனா’ விவரிக்கும் தேக ரகசியங்கள், ஆதாரச் சக்கரங்களின் மகிமைகள், அவற்றில் துலங்கும் தெய்வ சக்திகள் குறித்தெல்லாம் விரிவாக விவரித்தார் வீரபிரம்மேந்திரர். இங்ஙனம் ஸ்வாமி சித்தய்யாவுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு நாடகமும் அரங்கேற ஆரம்பித்தது.

அந்தக் கிராமத்தில் முரடனான சாக்கையன் என்பவன் வசித்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக ஒரு விருப்பம் இருந்தது. `இறைவன் எங்கு இருக்கிறார்?’ என்பதைப் பற்றி ஸ்வாமியிடம் விசாரிக்க ஆர்வம் கொண்டிருந்தான்.

இந்த நிலையில்தான் அன்றைய தினம் சித்தய்யாவுக்கு ஸ்வாமியின் உபதேசம் நிகழ்ந்தது. ஆதாரச் சக்கரங்கள், அவற்றின் மகிமைகள், அவற்றின் அதிபதிகளான தேவதைகள் குறித்தெல்லாம் ஸ்வாமி விளக்கியதை அருகிலுள்ள மரத்தின் கிளையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் சாக்கையன்.

“அடடா! இவ்வளவு காலமாக எனக்கு இந்தச் சாதாரண விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே. நான் இறைவனைக் காண ஆலயங்களுக்குச் செல்லவேண்டும் என்றல்லவா கருதியிருந்தேன். ஆனால் இந்தச் சாது, கடவுள் நம் உடலில் இருக்கிறார் என்று கூறுகிறாரே... எனில், இந்த உடலைக் கூறு போட்டால், எல்லா தெய்வங்களையும் காண முடியுமே...’’ என்று எதிர்மறையாக யோசிக்க ஆரம்பித்தான். ஆம்! ஸ்வாமியின் உபதேசத்தைத் தன் அறியாமையால் தவறாகப் புரிந்துகொண்டான். அவன் மனதில் மற்றொரு விபரீத எண்ணமும் தோன்றியது.

``ஒருவேளை நான் எனது உடலைக் கூறு போட்டால், இறைவனைக் காண்பதற்குள் என் உயிர் பிரிந்துவிடும். ஆகையால் நான் உடனடியாக வீட்டுக்குச் சென்று, என் மனைவியின் உடலைக் கூறுபோட்டு, ஸ்வாமி கூறியதைப் போல ஒவ்வொரு சக்கரத்திலும் உள்ள தெய்வத்தை தரிசிப்பேன். அதுவே முக்தியை அடைய சிறந்த வழியாகும்!’ என்று தீர்மானித்தான்.

அதே சிந்தனையோடு வீட்டுக்கு வந்தவன் மனைவி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். இதுவே சரியான சந்தர்ப்பம் என்று கருதியவன், தனது விபரீத சிந்தைக்குச் செயலாக்கம் தந்தான்.

அந்தோ பரிதாபம்... மனைவியின் உடற்கூறுகளில் ஸ்வாமி சொன்னது போன்று எந்தத் தெய்வத்தையும் சக்கர சூட்சுமங்களையும் அவனால் காண இயலவில்லை; அதிர்ந்தான்.

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 22

``இதென்ன கொடுமை... ஸ்வாமி என்னை ஏமாற்றிவிட்டார்! உடலில் ஒவ்வொரு பாகத்திலும் லிங்கமும், சக்கரமும், தெய்வமும் இருப்பதாகக் கூறினாரே... ஆனால் அவர் கூறிய எதுவும் இவளின் உடலில் இல்லையே... சாதுவின் வார்த்தையை நம்பி, எனதருமை மனைவியைக் கொன்றுவிட்டேனே’’ என்று புலம்பினான்.

நிறைவில் ஒரு முடிவுக்கு வந்தான். மனைவியின் உடலை அப்படியே கிடத்திவிட்டு, மீண்டும் மரத்தடிக்கு வந்து மறைந்து நின்றுகொண்டான். அங்கே ஸ்வாமியின் உபதேசம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. சாக்கையன் கொதித்தான். இவர் கூறுவது பொய் என்பதை அவரின் எதிரில் அமர்ந்திருக்கும் சீடனுக்கும் ஊருக் கும் உணர்த்தவேண்டும் என்று தீர்மானித்தான்.

மறைவான அந்த இடத்தில் இருந்தபடியே ஸ்வாமியின் ஒவ்வோர் உபதேசத்தையும் கேலி செய்து எதிர்க்கத் தொடங்கினான். ஒரு நிலையில், ஸ்ரீவீரபிரம்மேந்திரர் மரத்தின் பின்னால் மறைந்து நிற்கும் சாக்கையனைக் கவனித்து, அந்த திசையை நோக்கி, “யார் நீ? ஏன் என் போதனைகள் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பேசுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது... என் முன்னால் வந்து நின்று சத்தியத்தை உரைப்பாயாக!’’ என்றார்.

சாக்கையன் ஸ்வாமியின் முன்னால் வந்து நின்றான். என்ன ஆச்சரியம்... உள்ளத்தளவில் அவரைக் காயப்படுத்த வேண்டும் என்று வந்தவன், அவரைக் கண்டதும் தன்னையும் அறியாமல் வணங்கித் தொழுதான். நடந்ததை விவரித்துக் கண்கலங்கி நின்றான்.

ஸ்வாமி அவனை ஆறுதல்படுத்தினார். ``சாக்கையா! நீ சிறந்த பக்தன். இறைவனைக் காணும் ஆர்வத்தில் இப்படிச் செய்துவிட்டாய். உடனடியாக உன் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல். உன் ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்...’’ என்றார்.

சாக்கையன் அரை மனதோடு ஸ்வாமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவனுடைய மனைவியின் சடலத்தைக் கண்ட ஸ்வாமி, அருகிலிருந்த மரப்பலகையில் அமர்ந்துகொண்டார்.

``சாக்கையா! உன் பூர்வஜன்ம புண்ணிய பலனால்... எவ்வித வழிபாடுகளும் தவமும் செய்யாமலேயே தெய்வங்களை தரிசிக்கப் போகிறாய்...’’ என்றவாறு அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். அவன் மனைவியின் தேகத்தில் - தண்டுவடத்தில் ஆதாரச் சக்கர மையங்களையும் தெய்வங்களையும் தரிசிக்கவைத்தார்.

சித்தய்யா குருவின் மகிமையை எண்ணிச் சிலிர்த்தார். சாக்கையன் வியந்தான்; ஸ்வாமியின் பாதக்கமலங்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடித்தான். அவன் தெய்வ தரிசனம் கண்டுவிட்டான். அவன் விருப்பம் நிறைவேறிவிட்டது. ஆனாலும்... `அன்புக்குரிய மனைவியைக் கொன்றுவிட்டோமே’ என்ற குற்ற உணர்ச்சி அவனை கலங்கடித்தது. தனது அறியாமையால் செய்துவிட்ட பாவத்துக்கு விமோசனமே இல்லை என்று கதறினான் சாக்கையன்.

ஸ்வாமி மீண்டும் அவனை ஆற்றுப்படுத்தினார். ``சாக்கையா! உன் மனைவியை நான் உயிருடன் எழுப்பினால், நீ உனது குற்ற உணர்வில் இருந்து மீள்வாய் அல்லவா?’’ என்று கேட்டார்.சாக்கையன் அவரை திகைப்புடன் நோக்கினான். ஸ்வாமி தனது கமண்டலத்திலிருந்து சிறிதளவு நீரை எடுத்து இறந்த சடலத்தின் மீது தெளித்தார். விபூதியை கரைத்து அவளின் நெற்றியில் பூசினார். ஆனால்...

- தொடரும்...

`பானை நிரம்பியது யாரால்?'

ஒருமுறை புத்தரின் சீடர்கள் இருவருக்குள், `புத்த விஹாரப் பணிகள் செம்மையாக நடைபெறுவது யாரால் என்பது குறித்து, வாக்குவாதம். இருவருக்கும் `தானே காரணம்' என்ற எண்ணம்.

அதைக் கவனித்த புத்தர் அவர்களிடம், காலியான பானை ஒன்றில் தண்ணீர் ஊற்றி நிரப்பும்படி கூறினார். சீடர்கள் இருவரும் தண்ணீரைக் கொண்டுவந்து பானையில் ஊற்றினர். பானை தண்ணீரால் நிரம்பியது.

புத்தர், ``இப்போது சொல்லுங்கள்... உங்கள் இருவரில், யார் ஊற்றிய நீரால் இந்தப் பானை நிரம்பியது?'' எனக் கேட்டார்.

இந்தக் கேள்வியே சீடர்களுக்கு உண்மையை உணர்த்த, அவர்கள் தவறை உணர்ந்தனர். உடனே புத்தர், ``இதைப் போலத்தான்... இந்த விஹாரத்தின் பணிகளில் அனைவரது உழைப்பும் உள்ளது'' என்றார் புன்னகையுடன்!

- சி.வேல்முருகன், சென்னை-55

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism