Published:Updated:

பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

அப்பர் அருளிய அற்புத பதிகம் - கே.முருகன் -

பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

அப்பர் அருளிய அற்புத பதிகம் - கே.முருகன் -

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

`உத்தமர்தம் உறவு வேண்டும்...’ என்று தொடங்கி, சென்னை கந்தக் கோட்டம் குமரனிடம் பலவாறு விண்ணப்பிக்கும் வள்ளலார், நிறைவாக - உறுதியாக ‘நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்’ - என்று பிரார்த்திக்கிறார். ஆம், நோயற்ற வாழ்வுதானே குறைவற்றச் செல்வம். அவ்வகையில் அருளாளர்கள் பாடிய பதிகங்கள் சில, நாம் நோயின்றி நலமுடன் வாழ தெய்வக் காப்பாக இருந்து, துணைபுரிகின்றன. அவற்றில், சர்வ வல்லமை கொண்ட பிணி தீர்க்கும் ஒரு பதிகத்தின் மகிமையை அறிவோம்.

பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!

புள்ளிருக்கு வேளூர் ஈசனைப் போற்றி, திருநாவுக்கரசர் பாடியருளிய பதிகம் இது. நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலே புள்ளிருக்குவேளூர் என்று சிறப்பிக்கப்படுகிறது. தாரகாசுரனுடன் நிகழ்ந்த போரில் காயம் அடைந்த தன் வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும்படி முருகப்பெருமான் தந்தையை வேண்டிக் கொண்டார்.

அதன்படி உமாதேவியுடன் மருத்துவராய் வந்து காயங்களுக்கு மருந்திட்டு அருளினாராம் வைத்தீஸ் வரர். அம்பாளோ, மருந்தைக் குழைத்துப் பூசும் விதமாக கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் தைல நாயகியாய் இங்கு அருள்கிறாள்!

இத்தலத்து ஈசனை தீராத நோயைத் தீர்க்க்க வல்ல மருத்துவன் என்றும், அந்த இறைவனைப் புகழாமல் நெடுநாள்களைக் கழித்தமைக்காக வருந்துகிறேன் என்றும் பாடிப்பரவுகிறார் திருநாவுக்கரசர்.

அந்தப் பதிகம்...

பேராயி ரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.


தேவாரம் 6-ஆம் திருமுறையில் உள்ளது இந்தப் பதிகம்.

கருத்து: எண்ணிக்கையில் அடங்காத பல்லாயிரம் திருநாமங்களைச் சொல்லி தேவர்கள் வழிபடும் தெய்வம் நம் ஈசன். இமைப்பொழுதும் மறவாமல் எப்போதும் தங்களின் சிந்தையில் வைத்துத் தம்மை வழிபடும் அடியார்களுக்கு, எளிதில் எவருக்கும் கிடைக்காத முக்தி செல்வத்தை அழிப்பவர் அவர்.

மந்திரமாகவும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளாகவும் இருந்து, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தாகவும் திகழ்பவர் ஈசன். திரிபுரங்களும் பற்றி எரியும்படி வல்லமை மிக்க வில்லினைக் கொண்ட இறைவன் அவர். அப்படிப்பட்ட எம்பெருமானைப் போற்றாமல் வெகு நாள் கழித்துவிட்டேனே... என்பதே இதன் கருத்து.

நேரம் வாய்க்கும் போதெல்லாம் மனத்தில் பாடி வழிபடலாம். குறிப்பாக தினமும் காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றிவைத்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சர்க்கரைப் பொங்கல் அல்லது இயன்ற எளிய நைவேத்தியங்களைச் சமர்ப்பித்து, வில்வம் சாற்றி வழிபட்டு வந்தால், பிணிகள் குறித்த பயமும், பாதிப்புகளும் நீங்கும்.