Published:Updated:

`பச்சரிசி சாதம், செம்மறி ஆட்டுக் கறி படையல்...'- இது ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா!

பல நூறு கிலோ கைக் குத்தல் பச்சரியில் சமைக்கப்படும் உணவை உருண்டையாகப் பிடித்து படைப்பதுடன், நூற்றுக்கணக்கான செம்மறி ஆட்டுக் கிடாய்களைப் பலியிட்டும் படையலிடுகின்றனர்.

விநோத திருவிழா படையல்
விநோத திருவிழா படையல் ( உ.பாண்டி )

கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராம கண்மாய்க் கரையில் அமைந்துள்ள எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் வழிபாட்டுத் தெய்வமாக விளங்கும் கன்னிப் பெண்ணுக்கு கைக்குத்தல் பச்சரிசி சாதமும், செம்மறி ஆட்டுக் கிடாய் கறியும் படையலாகப் படைக்கப்பட்டது.

வினோத திருவிழா உணவு
வினோத திருவிழா உணவு
உ.பாண்டி

கமுதி அருகே உள்ள முதல்நாடு எனும் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன் தமிழகத்தின் தென்கோடி பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வந்தவர்களில் பெண் ஒருவர் துர்மரணம் அடைந்த நிலையில், அவரது உடல் மாயமானதாகவும் கூறப்படுகிறது. அவரது மரணத்துக்கு காரணமாக இருந்ததும் சில பெண்கள்தான் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கள் ஊர் எல்லையில் இறந்த அந்தப் பெண் முதல்நாடு கிராம மக்களின் கனவில் தோன்றி, தான் கிராம எல்லையில் உள்ள பகுதியில் குடிகொண்டு காவல் தெய்வமாக இருப்பேன் எனவும், ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் வந்து படையலிட்டு வழிபட வேண்டும் எனவும், இந்த வழிபாட்டில் பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது எனவும் கூறியதால் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா புரட்டாசி மாதம் 3-வது வாரத்தில் நடந்து வருகிறது.

பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் இந்த வழிபாட்டுத் திருவிழா நிகழ்வன்று காட்டுப்பகுதிக்குச் செல்லும் ஆண்கள் மறைந்த கன்னிப்பெண்ணின் நினைவாக பீடம் உருவாக்கி அதற்கு சிறப்பு பூஜைகள் செய்துவருகின்றனர். இதைத் தொடர்ந்து பல நூறு கிலோ கைக் குத்தல் பச்சரியில் சமைக்கப்படும் உணவை உருண்டையாகப் பிடித்து படைப்பதுடன், நூற்றுக்கணக்கான செம்மறி ஆட்டுக் கிடாய்களைப் பலியிட்டும் படைத்து வருகின்றனர்.

திருவிழா உணவு சமைக்கும் ஆண்கள்
திருவிழா உணவு சமைக்கும் ஆண்கள்
உ.பாண்டி

முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விநோத திருவிழா முதல்நாடு கிராமத்தின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று நள்ளிரவில் நடந்தது. முதல்நாடு மற்றும் கமுதி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இதில் பங்கேற்றனர்.

முதல்நாடு கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் அந்தப் பெண் அம்மனுக்கு, தங்கள் வயல்களில் கடந்த ஆண்டு விளைவிக்கப்பட்ட கைக் குத்தல் பச்சரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தையும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் பலியிட்டு படையல் வைத்தனர். அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயத்தில் நோய் தாக்குதல் இன்றி அதிக மகசூல் கிடைக்க வேண்டியும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவிழா விருந்தில் ஆண்கள்
திருவிழா விருந்தில் ஆண்கள்
உ.பாண்டி

பின்னர் பெண் அம்மனுக்காக பீடத்தின் முன் படையிலப்பட்ட ஆயிரக்கணக்கான உணவு உருண்டைகளும், பலி கொடுக்கப்பட்ட ஆடுகளின் கறியும் விழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விநோத திருவிழாவில் பூஜை பொருள்கள் மற்றும் மீதமாகும் உணவுகள் ஆகியவற்றைப் பெண்கள் பார்க்கக் கூடாது என்பதால், அவற்றை அங்கேயே குழிதோண்டி புதைத்துவிட்டுச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.